Published:Updated:

`தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா.. சென்னையில் அதிகரிக்கும் எண்ணிக்கை!’- சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழகத்தில் இதுவரை 2,10,538 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1,13,398 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 87,159 பேர் 28 நாள் நடைமுறையை முடித்துள்ளனர். தற்போது 25,503 பேர் வீடுகளிலும் 19 பேர் அரசால் ஏற்படுத்தப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

`ஞாயிறு முதல் 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு..!’ -யாருக்கெல்லாம் அனுமதி..? #LockDown

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 34 இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன. இன்று மட்டும் 6,426 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 72,403 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாவட்டங்களின் விவரங்கள். சென்னை 52, கோயம்புத்தூர் 7, மதுரை 4, ராமநாதபுரம் 2, திருவள்ளூர் 2, சேலம்1, தென்காசி 1, காஞ்சிபுரம் 1, திருவண்ணாமலை 1, விருதுநகர் 1 ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக சென்னையில் 452, கோயம்புத்தூர் 141, திருப்பூரில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல் 29-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 5 மாநகராட்சிகளைத் தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு