Published:Updated:

`பலவீனமான பொது சுகாதார கட்டமைப்பு!' - கோவிட் பேரிடர் இந்தியாவுக்கு சொல்வது என்ன?

மருத்துவமனைகள்
மருத்துவமனைகள்

சுகாதார கட்டமைப்புகள் சிக்கலானவைதான். ஆனால், கடினமானவை அல்ல. இந்தியா, சுகாதாரத்துறையில், கட்டுமானங்கள், ஊழியர்கள், மருந்துகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கணிசமாக முதலீடு செய்து, தன்னுடைய தரத்தை உயர்த்த வேண்டும்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடர் ஒரு தொடர்கதையாகவே இருந்துவருகிறது. நாளொன்றுக்கு 200,000-க்கும் அதிகமான புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர். நாள்தோறும், மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கையாள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. மயானங்களில் பிணங்கள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன. இந்தத் திண்டாட்டத்துக்குக் காரணம், பல ஆண்டுகளாக இந்திய மருத்துவக் கட்டமைப்பில் இருக்கும் விரிசல் சரிசெய்யப்படாததே என்கிறார் சுகாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் கேரன் மத்தையாஸ் (Kaaren Mathias). நியூசிலாந்தைச் சேர்ந்த கேரன் மத்தையாஸ், இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு பொது மருத்துவமனைகளின் சுகாதார கட்டமைப்புகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி தொடர்பாகப் பணியாற்றியவர்.

கேரன் மத்தையாஸ் (Kaaren Mathias)
கேரன் மத்தையாஸ் (Kaaren Mathias)

தன்னுடைய ஆய்வறிக்கையில், ``பல்லாண்டுக் காலமாக, இந்தியா ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு ஆகியவற்றில் மிகக் குறைவாக முதலீடு செய்துள்ளது. உலகில், அதிகளவிலான மருத்துவக் கட்டமைப்புகள் தனியார்மயமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் விளைவாக, மருத்துவ சிகிச்சைகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவுகளே மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளிக்கொண்டிருக்கின்றன" என்கிறார் கேரன் மத்தையாஸ்.

அவருடைய சமீபத்திய ஆய்வில், தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கும் செலவு மிகுந்த தனியார் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ வசதிகளில் பற்றாக்குறை நிலவும் அரசு மருத்துவமனைகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு நோயாளிகள் தவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊர்ப்புறங்களில் வாழும் மக்களில் பலரும் சிகிச்சைக்காக கால்நடைகளை விற்றாக வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

1946-ம் ஆண்டு, போர் கமிட்டி அறிக்கையின் (Bhore Committee report) முகப்புரையில், ``தன்னால் பணம் செலுத்த முடியவில்லை என்பதாலேயே, எந்தவொரு தனிநபரும் நிறைவான மருத்துவ சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில், வியட்நாம், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகள் குறைந்த பலி எண்ணிக்கையிலேயே கோவிட்-19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. ஆனால், இந்தியாவில் இன்னமும் லட்சக்கணக்கான மக்கள், தேவையான சிகிச்சையை முழுமையாகப் பெற முடியாமல், கோவிட் தொற்றுக்கு நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வருகின்றனர். மத்தையாஸ், ``ஆக்சிஜன் உற்பத்தி, வாக்குறுதி கொடுக்கப்பட்ட அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பான்மை நாள்களில், கோவிட்-19 சிகிச்சைக்கு மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதவில்லை என்று பலரும் எனக்கு அழைக்கின்றார்கள். இதுபோக, மருத்துவ சிகிச்சைக்காகச் செலவழிக்கவும் முடியாமல் பல்வேறு மக்கள் திண்டாடி வரும் செய்தியும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றது. சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாலேயே, பல பேர் கைவிடப்படுகின்றனர்" என்று பதிவு செய்துள்ளார்.

அரசு மருத்துவமனை/ Representational Image
அரசு மருத்துவமனை/ Representational Image

உலகளவில், மருத்துவத் தேவைகளுக்காக மக்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்யும் சராசரி விகிதம் 18.2 சதவிகிதம். அதுவே, இந்தியாவில் 62.7 சதவிகித மக்கள் மருத்துவச் செலவுகளைத் தங்கள் சொந்தப் பணத்தில்தான் மேற்கொள்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், 2018-ம் ஆண்டில் இந்திய அரசு தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.3 சதவிகிதத்தைதான் சுகாதாரத் துறையில் முதலீடு செய்துள்ளது. தெற்காசியாவில் சராசரியாக சுகாதாரத்துறையில் செய்யப்படும் முதலீட்டு அளவு 3.5 சதவிகிதம். இது, இந்தியாவின் முதலீட்டு அளவைவிட இரண்டரை மடங்கு அதிகம். மேலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகிதத்தை சுகாதாரத் துறைக்குச் செலவிடுகிறது.

அவர் சொல்வதுபோல், இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பிலிருக்கும் பிரச்னைகளும் அதன் விளைவுகளும் வெளிப்படையாகவே தெரிகின்றன. மக்களின் ஆரோக்கியத்தை அளவிடுவதில் மிகவும் அடிப்படையான அளவுகோலாகச் செயல்படும் ஊட்டச்சத்துகளைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருக்கும் முதல் 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு இருப்பவர்களில் 38.7 சதவிகிதம் ஐந்து வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள். இந்திய குழந்தைகளில் மூன்றில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளது.

தனியார் மருத்துவமனைகள்/ Representational Image
தனியார் மருத்துவமனைகள்/ Representational Image

அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது, மக்களின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான அடிப்படை காரணிகளில் இந்தியா, அதன் அண்டை நாடுகளைவிட பின்தங்கியே உள்ளது. ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத் தரத்தில், பூட்டான், இலங்கை போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா பின்தங்கியே உள்ளது. நேபாள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி இந்தியாவைவிடக் குறைவு. ஆனால், 2020-ம் ஆண்டில் அவர்கள் தங்கள் நாட்டில் நிகழும் குழந்தை மரணங்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்துவிட்டனர். அங்கு தற்போது 1,000 குழந்தைகளில் 26 பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 1,000 குழந்தைகளில் 28 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவின் அரசாங்க மருத்துவக் கட்டமைப்பு குறித்துப் பேசும்போது, கேரன் மத்தையாஸ் தன்னுடைய ஆய்வறிக்கையில், ``கோவிட்-19 பெருந்தொற்றுப் பேரிடர், இந்தியாவின் சுகாதாரத் துறையிலிருக்கும் சீர்குலைவுகளை மக்கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் ஊரடங்கின்போது, கோவிட் தவிர மற்ற பிரச்னைகளுக்காக மருத்துவ சிகிச்சையை அணுகும்போது, அந்தச் சிகிச்சை குறைந்த தரத்துடன் இருந்தது மட்டுமன்றி, கிடைப்பதே சிரமமாகவும் இருந்துள்ளது. அதோடு, அரசு கட்டமைப்புகளைவிட தனியார் மருத்துவக் கட்டமைப்புகள் பெரியளவில் இருந்தபோதும்கூட, அவை கோவிட் முதல் அலையின்போது 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கே சிகிச்சையளித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பொது சுகாதார சேவைகளில் ஏற்பட்ட பற்றாக்குறை, கடந்த 12 மாதங்களில் இழப்புகளைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட இடையூறுகளால், இந்தியாவில் ஐந்து வயதுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் 2020-ம் ஆண்டில் 15 சதவிகிதமாக உயர்ந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியப் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், அதிகளவிலான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள். அதன்விளைவாக, அவர்களால் மருத்துவ கட்டுமானங்களுக்கும் சிகிச்சைகளுக்கும் செலவழிக்க முடியாத நிலை உண்டாகும்.

A health worker fixes an oxygen cylinder / Representational Image
A health worker fixes an oxygen cylinder / Representational Image
AP Photo

சுகாதார கட்டமைப்புகள் சிக்கலானவைதான். ஆனால், கடினமானவை அல்ல. இந்தியா, சுகாதாரத்துறையில், கட்டுமானங்கள், ஊழியர்கள், மருந்துகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கணிசமாக முதலீடு செய்து, தன்னுடைய தரத்தை உயர்த்த வேண்டும். அதை ஏழை மக்கள் எளிதில் அணுகும்படியும் அவர்களுக்கும் முழுமையான சிகிச்சை தரமான கட்டமைப்பில் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதைச் செய்தாலே, கோவிட்-19 போன்ற பெருந்தொற்றுப் பேரிடர்களை அரசு கட்டமைப்புகளின் உதவியோடு எதிர்கொள்ள முடியும். அதோடு, ஏழை மக்களும் தனியார் மருத்துவமனைகளை நாடி, மேன்மேலும் வறுமைக் கோட்டுக்குள் ஆழமாகத் தள்ளப்படும் நிலை ஏற்படாது.

ஒருவேளை, கோவிட் பெருந்தொற்றில் இந்தியா கற்றுக்கொண்ட பாடங்கள், அதன் சுகாதாரத்துறையிலிருக்கும் குறைகளைக் களைந்து, அதை அடிப்படையிலிருந்து மீட்டுருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையலாம். இந்திய அரசு, இந்தப் பேரிடரிலிருந்து கற்றுக்கொள்ளப் போகும் பாடங்களைப் பொறுத்தே அது சாத்தியமாகுமா என்பது தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு