Published:Updated:

`சென்னையில் நோய்த்தொற்று அதிகரிக்க இவைதான் காரணம்!’ - பட்டியலிடும் முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நோய் பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பாகத் துறை ரீதியிலான எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரை நேற்று சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னையில் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து அதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டது நோய்ப் பரவல் தொடர்பாகக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, ``தமிழகம் முழுவதும் நோய் பரவலைத் தடுப்பதற்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகராட்சி தலைமையிடத்தில் மக்கள் பிரச்னைகளை அறிந்துகொள்ள கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் நோய் பரவலைத் தடுக்க நாம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

சென்னையில் நோய் தொற்று வேகமாகப் பரவுவதற்குக் காரணம் அதிகமான மக்கள் நிறைந்திருப்பதுதான். சென்னைதான் தமிழகத்தின் தலைநகரம் குறுகலான தெருக்கள்; மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதி, இதன்காரணமாக நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுக் கழிப்பறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்றானது எளிதாகப் பரவி விடுகிறது. இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடைசெய்யப்பட்ட பகுதிகளில் காலை, மதியம், மாலை என மூன்று கிருமிநாசிகள் அடிக்கப்படுகின்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

பொது கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் அவர்கள் வசிக்கிற இடங்களுக்கே செல்கின்றன. சென்னையில் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்துகிறோம். அரசின் சரியான நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,000 படுக்கை வசதிகளுடன்கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஜிங்க் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 50 பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் தற்போது சில தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு நிறைய பேர் தங்கியுள்ளனர். தற்போது தொழில்கள் தொடங்கப்பட்டுவிட்டன. வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கே தங்கி பணிபுரிய விரும்பினால், பணியாற்றலாம். இல்லை சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பினால், அவர்கள் செல்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம். அவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்குள் தங்களது மாநிலங்களுக்கு செல்ல வசதிகள் செய்துதரப்படும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அரசின் அறிவிப்புகளை தமிழக மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அம்மா உணவகம் மூலம் சுமார் 7 லட்சம் பேருக்கு நாள் ஒன்றுக்கு உணவு அளிக்கப்பட்டுகிறது. சமூக கிச்சன் மூலம் 2 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் யாரும் பட்டினியோடு இல்லை என்ற நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. மே, ஜூன் மாதத்துக்கு விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் விலையில்லாமல் அளிக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு