Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… தயாரிப்பில் ஏன் தாமதம், மோடி அரசு தவறிழைத்தது எங்கே?!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி ( Rafiq Maqbool )

கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றிகரமாகத் தயாரிக்கப்படுமா, தோல்வியடையுமா என முடிவு தெரிவதற்கு முன்பாகவே Pfizer நிறுவனத்துக்கு நிதி உதவி அளித்தது அமெரிக்க அரசு. 200 கோடி அமெரிக்க டாலர் நிதி கொடுத்து, முதல்கட்டமாக 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கச் சொன்னது.

கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் உச்சம் தொடுகிறது. ஒவ்வொருநாளும் கொரோனாவால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுக்க 3 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் பரவலைத்தடுக்கவும், உயிரிழப்பில் இருந்து காக்கவும் தடுப்பூசியே நம்மிடம் இருக்கும் ஓரே தீர்வு என்கிற நிலையில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுமாறி நிற்கிறது இந்தியா.

கடந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக உலகமே முடங்கியதுபோது தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என எல்லா நாடுகளும் தடுப்பூசி ஆய்வில் இறங்கின. வழக்கம்போல தடுப்பூசி ஆராய்ச்சியில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே முந்திக்கொண்டு களமிறங்கி வெற்றிபெற்றதாக அறிவிக்க, பொதுமக்களுக்கு செலுத்துவற்கான தடுப்பூசி தயாரிப்பும் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.

இந்தியாவில் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி என பாரத்பயோடெக் நிறுவனமும் கோவாக்ஸின் தடுப்பூசியை வெற்றிகரமாக அறிவிக்க, இந்தியாவிலும் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கியது. ஸ்வீடிஷ் - பிரிட்டிஷ் நிறுவனமான AstraZeneca-வின் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனமும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பூசியையும் தயாரிக்கத் தொடங்கின.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Anupam Nath

சீரம் இன்ஸ்டிட்யூட் & பாரத் பயோடெக்!

இந்தியாவின் முதன்மையான மருந்து தயாரிப்பு நிறுவனம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா. தனியார் நிறுவனமான இது 1966-ல் சைரஸ் பூனவாலா எனும் தொழிலதிபரால் தொடங்கப்பட்டது. புனேவில் முதலில் குதிரைப்பண்ணையாக இருந்த இடத்தில் தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்கியது இந்நிறுவனம். 2020-ல் ஆண்டுக்கு 150 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக முதலிடமும் பிடித்தது.

ஐதராபாத்தில் இயங்கிவரும் பாரத்பயோடெக் நிறுவனமும் கிருஷ்ணா எல்லா என்பவரால் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனமே. 1996-ல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவும், இந்தியாவும்!

கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றிகரமாகத் தயாரிக்கப்படுமா, தோல்வியடையுமா என முடிவு தெரிவதற்கு முன்பாகவே Pfizer நிறுவனத்துக்கு நிதி உதவி அளித்தது அமெரிக்க அரசு. 200 கோடி அமெரிக்க டாலர் நிதி கொடுத்து, முதல்கட்டமாக 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கச் சொன்னது. 10 கோடி தடுப்பூசிகள் போதாது என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமெரிக்க அரசு அடுத்ததாக 50 கோடி தடுப்பூசிகளுக்கு Pfizer நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்தது.

இத்தோடு அமெரிக்க அரசு நின்றுவிடவில்லை. Moderna நிறுவனத்துடன் 150 கோடி டாலர் டீல் போட்டு அடுத்ததாக10 கோடி தடுப்பூசிகளை தயாரித்துக்கொடுக்கச்சொன்னது. தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன், Novavax, AstraZeneca ஆகிய நிறுவனங்களோடும் டீல் போட்டது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Anupam Nath

ஆனால், இந்தியாவில் நடந்ததோ வேற. அதிகாரப்பூர்வ தகவல்கள்படி இந்திய அரசு தடுப்பூசி தயாரிப்புக்காக சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கோ, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கோ பெரிய அளவில் நிதியுதவி அளிக்கவில்லை என்பதோடு, பெரிய அளவில் கொள்முதல் ஒப்பந்தமும் போடவில்லை. தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகளை வாங்க ஆரம்பித்தது.

பொதுவாகவே வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட், AstraZeneca உடன் டீல் போட்டு 2020-ன் இறுதியிலேயே தடுப்பூசி தயாரிப்பை முழுவீச்சில் தொடங்கிவிட்டது.

இந்தியாவின் டீல் என்ன?!

பொதுமக்களுக்கான தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்கியதும் சீரம் இன்ஸ்டிட்யூட் மத்திய அரசுக்கு சலுகை அறிவிப்பை வெளியிட்டது. ‘’ஒரு தடுப்பூசி 200 ரூபாய் என்கிற விலையில் முதலில் தயாராகும் 10 கோடி தடுப்பூசிகளை இந்திய அரசுக்கு வழங்க ஆர்வமாக இருக்கிறோம்’’ என்று சொன்னது அந்த அறிக்கை. இந்திய அரசு தொடர்ந்து பல கோடி தடுப்பூசிகளை வாங்கும் என்பதால், அடுத்தகட்ட தடுப்பூசிகளை பெரிய தொகைக்கு விற்கலாம் என்பதுதான் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் திட்டம்.

இதற்கிடையே சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ ஆகிய நாடுகள் தடுப்பூசி தயாரிப்புக்கு சீரம் இன்ஸ்டிட்யூட்டுடன் ஒப்பந்தம் போட்டன.

ஆனால், இந்திய அரசு சீரம் இன்ஸ்டியூட்டுடன் பெரிய அளவில் எந்த கொள்முதல் ஒப்பந்தமும் போடவில்லை. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் அடர் பூனவாலா 2021, ஜனவரியில் அளித்த பேட்டியின்படி ‘’எங்களோடு அரசு எந்த கொள்முதல் ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை’’ என்று சொன்னார்.

5 கோடி தடுப்பூசிகள் சீரம் இன்ஸ்டிட்யூட்டில் தயாராக இருந்தநிலையில் இந்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்தியா முழுக்க போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்கிட அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்க வேண்டிய மோடி தலைமையிலான அரசு அப்படி எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி போட காத்திருக்கும் மக்கள்
கொரோனா தடுப்பூசி போட காத்திருக்கும் மக்கள்

இந்தியாவின் தாமதம்!

இறுதியாக ஜனவரி 11, 2021 அன்று சீரம் இன்ஸ்டிட்யோடு இந்திய அரசு ஒப்பந்தம் போட்டது. முதல் கட்டமாக 11 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதும் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது இந்திய அரசு. சீரம் இன்ஸ்டிட்யோடு முன்னரே ஒப்பந்தம் போட்ட நாடுகள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன.

சீரம் இன்ஸ்டிட்யூட்டும் தங்கள் நிறுவனத்துக்கு 3000 கோடி நிதியுதவி தேவைப்படுவதாக இந்திய அரசிடம் கேட்க, அதற்கு நீண்ட நாட்களாக மெளனமே பதிலாக இருந்த நிலையில் கடந்தவாரம்தான் 3000 கோடி நிதியுதவி அளிக்கப்போவதாக அறிவித்தது மத்திய அரசு.

பாரத் பயோடெக்கின் கதை!

சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கதை இதுவாக இருக்க, கடந்த ஆண்டு பாரத்பயோடெக் நிறுவனத்தோடு இணைந்து தடுப்பூசி ஆராய்ச்சில் ஈடுபடுவதாக அறிவித்தது இந்திய மருத்து ஆராய்ச்சி கழகம் (ICMR). ஆனால், இதுவரை அதற்கு அரசு எவ்வளவு முதலீடு செய்தது என்கிற விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில்தான் கடந்த வாரம் சீரம் இன்ஸ்டியூட்டுக்கு 3000 கோடி நிதியுதவி அறிவித்த கையோடு, பாரத் பயோடெக்கிற்கும் 1500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவித்தது மத்திய அரசு.

இதற்கிடையே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசியின் விலை மாநில அரசுக்கு 600 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1200 ரூபாய் என்றும் பாரத்பயோடெக் அறிவிக்க அது மிகப்பெரிய சர்ச்சையானது.

Vaccination
Vaccination
Manish Swarup

‘’சீரம் இன்ஸ்டிட்யூட் ஸ்வீடிஷ் - பிரிட்டிஷ் நிறுவனமான AstraZeneca-வுக்கு ராயல்ட்டி தரவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், பாரத்பயோடெக் இந்தியாவிலேயே, இந்திய அரசின் துணையுடன் தயாரித்த தடுப்பூசிக்கு ஏன் இவ்வளவு விலை கேட்கிறது’’ என்று கேள்வி எழுப்பினார்கள் விமர்சகர்கள்.

மிகவும் தாமதமாக விழித்துகொண்ட இந்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் மேலும் மூன்று அரசு நிறுவனங்கள் தயாரிக்க ஒப்புதல் அளித்திருக்கிறது.

மொத்தத்தில் தடுப்பூசி தயாரிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், முதலிலேயே பெரிய அளவில் நிதியுதவிகள் அளித்து நாடு முழுக்க தடுப்பூசி தயாரிப்பைத் தொடங்க முன்வராததும்தான் இந்தியாவை தடுப்பூசி தட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது!

இனி போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு இயங்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்கவும், கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடியும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு