Election bannerElection banner
Published:Updated:

நீலகிரியில் திருப்பி அனுப்பப்பட்ட பொதுமக்கள்! - கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு?

தடுப்பூசி
தடுப்பூசி

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லை என முதியவர்களைத் திருப்பி அனுப்பியதால் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

கோவிட் தடுப்பூசி
கோவிட் தடுப்பூசி

`கொரோனா தடுப்பூசி திருவிழா’ என்ற பெயரில் 11-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியான இன்றுவரை சிறப்பு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான முகாமில் நாள்தோறும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள கிராமப் பகுதிகளிலிருந்து காலை முதலே ஏராளமான முதியவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தனர். ஒரு சிலருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு மற்றவர்களிடம் கொரோனா தடுப்பூசி ஸ்டாக் இல்லை எனத் தெரிவித்தனர். இதில் அதிருப்தியான முதியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தடுப்பூசி
தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்டநேரமாகக் காத்திருந்த ஊட்டி ஆடாசோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ``இன்னைக்கி வந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கணும்னு சொன்னாங்க. காலைல மொதல் பஸ் புடிச்சு இங்கே வந்து உட்கார்ந்திருந்தோம். சீட்டெல்லாம் குடுத்துட்டு கடைசில மருந்து முடிஞ்சிடுச்சு. சொல்லும்போது வாங்கனு அனுப்புறாங்க. கூலி வேலைய விட்டுட்டு பஸ்ஸுக்குக் காசுபோட்டு இங்கே வந்தா இப்பிடிச் சொல்றாங்க’’ எனப் புலம்பியபடியே போனார்.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், ``நீலகிரி மாவட்டத்தில் 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆறு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகள் தீர்ந்துவிட்டன. நாளை முதல் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றனர்.

தடுப்பூசி
தடுப்பூசி

`கொரோனா தடுப்பூசி திருவிழா’ என்ற பெயரில் முகாம் ஏற்படுத்திவிட்டு, தடுப்பூசி ஸ்டாக் இல்லை எனப் பொதுமக்களைத் திருப்பி அனுப்பியது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு