Published:Updated:

`மருத்துவப் பணியாளர்கள் நலன் முக்கியம்!’ -தமிழகத்தில் முதல்முறையாக திருப்பூரில் கோவிட் பூத் டெக்னிக்

கோவிட் பூத்
கோவிட் பூத்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் முதன் முறையாக திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா மாதிரிகளை எடுக்கும் கோவிட் பூத் தொடங்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா தடுப்பில் திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் முன் மாதிரி மாவட்டமாகத் திகழ்கிறது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த மாதம் 1 -ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தைப் பகுதியில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக சந்தை போன்ற பகுதிகளுக்கு வருகையில் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இது கொண்டு வரப்பட்டது.

கிருமி நாசினி சுரங்கம் - மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்
கிருமி நாசினி சுரங்கம் - மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

மக்கள் உள்ளே சென்று வெளியேறும்போது கிருமி நாசினி மூலம் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், மக்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாது என்றும் பாதுகாப்பான முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் முதல்முறையாக திருப்பூரில் இது நிறுவப்பட, பின்னர் மற்ற சில மாவட்டங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டது.

`கிருமி நாசினி சுரங்கம்’ - திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் புதிய முயற்சி

இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை தொடர்ந்து தமிழகத்தில் முதன் முறையாக திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா மாதிரிகளை எடுக்கும் கோவிட் பூத் தொடங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமென்றாலும் பரவும். கொரோனா அறிகுறி உள்ளவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்படும்.

பூத்
பூத்

அப்போது மருத்துவப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் அவர்களுக்கும் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இந்த பூத் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முதலாக நிறுவப்பட்டுள்ள இந்த பூத் குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம்.. ``அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக வரும் மக்களுக்காக இரண்டு பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் இடத்தில் மருத்துவப் பணியாளர்கள் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார்கள்.

அங்கு அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் இரண்டாம் கட்ட பரிசோதனைக்குப் பரிந்துரை செய்யப்படுவார்கள். அப்படி பரிந்துரைக்கபட்டவர்கள் இந்தச் சளி மாதிரி கலெக்‌ஷன் பூத் பகுதிக்கு வருவார்கள். இங்கு அவர்களது மாதிரிகள் எடுக்கப்படும். பின்னர் அது அடுத்தகட்ட பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும். இதுதான் செயல் முறை.

மாதிரிகளைச் சேகரிக்கும் போது மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அவசியம். இந்த பூத் காற்று உள்ளே புகாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூத்தில் இருக்கும் க்ளவுஸ் மூலமாக மாதிரிகள் பெறப்படுவதால் மருத்துவப் பணியாளர்களுக்கு இது பாதுகாப்பானது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய். வெளியே தெரியும் க்ளவுஸ் ஒவ்வொரு முறை மாதிரிகள் எடுத்தபின்னர் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு