இந்தியத் தொழில்நுட்பக் கழகமான சென்னை ஐஐடி வளாகத்தில், நேற்று நான்கு மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் மூன்று மான்கள் மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்துகிடந்தன. இதையடுத்து மான்கள் எதனால் திடீரென இறந்தன என்பது பற்றி அறிய உடனடியாக ரத்த மாதிரிகளை வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவக்குழுவுக்குச் சோதனை செய்ய அனுப்பியுள்ளனர். ஆய்வு செய்ததில், ஆந்த்ராக்ஸ் எனும் பாக்டீரியல் நோய் தாக்கி மான்கள் உயிரிழந்ததாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் நாய்கள் மூலம் மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவியிருக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
பின்னர் மான்கள் இறந்த இடத்திலேயே அவற்றின் சடலங்கள் பாதுகாப்பான முறையில், ஆழமாகக் குழி தோண்டி புதைக்கப்பட்டன. இப்படி திடீரென வளாகத்தினுள் ஆந்த்ராக்ஸ் நோய் பரவியிருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் எளிதியத்தில் மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பிருப்பதால், உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வனத்துறை மற்றும் ஐஐடி நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், புது நாய்கள் வரத்து குறித்து, மாநகராட்சிக்கு ஐஐடி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. வளாகத்தில் இருப்பவர்கள் மான்களைத் தொடக் கூடாது எனவும், உணவு வகைகளை வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
