Published:Updated:

கொரோனா போரில் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்கள்! - பட்டியலை வெளியிட்ட மத்திய பயோடெக்னாலஜி துறை

Vaccine
Vaccine ( Pixabay )

தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மட்டும் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கிட்கள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுவதற்கும், கொரோனா நோய்த் தடுப்பூசிக்கான பணிகளை விரைந்து ஆயத்தப்படுத்தவும் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களிடம் அவர்களுடைய திட்ட முன்வரைவைச் சமர்ப்பிக்கும்படிக் கேட்டிருந்தது. இதன் அடிப்படையில், தற்போது தடுப்பூசி தயாரிப்புக்கான ஆய்வுகளுக்குப் பத்துக் கல்விநிறுவனங்கள் மற்றும் கிட் தயாரிப்புக்காக 34 கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

CMC Vellore
CMC Vellore

கொரோனா கண்டறியும் கிட்களுக்கான நாட்பட்ட தேவையைக் கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பென்னெட் பல்கலைக்கழகம் கிட் தயாரிப்புகளுக்காகப் பிரதானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளூரசன்ஸ் தன்மை ஒருங்கிணைக்கப்பட்ட இவர்களது சார்ஸ் கிருமி கண்டறியும் கிட், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மைக்ரோ ஃப்ளூயிட் ஒருங்கிணைக்கப்பட்ட பி.சி.ஆர் கிட் மற்றும் ஐ.ஐ.டி டெல்லியின் கொரோனா பரிசோதனை கிட் ஆகியவை மத்திய அரசின் தற்காலிகத் தேர்வு. இவற்றின் உற்பத்திக்காக அரசு நிதி உதவியும் தொடர்ந்து அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட முன்வரைவுகள் அத்தனையுமே உடனடிச் செயல்முறைக்கு வரும்.

தடுப்பூசி ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை, விலங்குகளில் பரிசோதனை மேற்கொள்ள முன்வரும் பல்கலைக்கழகங்களை மட்டும் அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஐ.ஐ.டி இந்தூர் வெளிப்புற ஆராய்ச்சிக்கான மாதிரி கொரோனா வைரஸ்களை உருவாக்கும். என்சீன் பயோமெடிக்கல்ஸ் என்னும் நிறுவனம் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான வேதிப் பொருள்களை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கும்.

IIT delhi
IIT delhi

தமிழகத்தைப் பொறுத்தவரை வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மட்டும் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் லிபிட் என்கேப்ஸுலேடட் தடுப்பூசிகள் என்னும் வகை கொரோனா தடுப்பூசிகளில் தங்களது ஆய்வுகளை மேற்கொள்ளுவார்கள்.

அடுத்த கட்டுரைக்கு