Published:Updated:

`டயாலிசிஸுக்குத் தண்ணீர் இல்லை; டீனிடம் கேட்டால் கலெக்டரை பாருங்கன்னு சொல்றாங்க!' - திருவாரூர் நோயாளி கண்ணீர்

க.சதீஷ்குமார்

டயாலிசிஸ் செய்ய வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் கொடுங்கள் என்று கூறிய மருத்துவக்கல்லூரி முதல்வர்.

நோயாளிகள்
நோயாளிகள்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் மோட்டார் பழுதானதால் டயாலிசிஸ் சிகிச்சை நிறுத்தம் 3 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பதால் அருகிலுள்ள மாவட்டத்தினரும் இங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் குறிப்பாக நீரிழிவு புற்றுநோய் விபத்து சிகிச்சைகள், அவசர சிகிச்சைகள் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

கருவிகள்
கருவிகள்

இந்த நிலையில் டயாலிசிஸ் பிரிவு கடந்த இரண்டு நாள்களாக செயல்படாததால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏற்றும் பம்பு இரண்டு நாள்களாகப் பழுதாகியுள்ளது. டயாலிசிஸ் செய்ய வேண்டிய 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலரது உடல்நிலை கவலைக்கிடமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இதுபற்றி நோயாளி ஒருவரின் உறவினரிடம் கேட்டபோது, ``நாங்கள் நேற்று வந்தோம். இன்றுவரை டயாலிசிஸ் செய்யப்படவில்லை. ஏனென்று கேட்டால் மின்சாரம் விட்டுவிட்டு வருவதால் தண்ணீர் எடுக்கும் மின் மோட்டார் பழுதாகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் சென்று கேட்டால், கலெக்டர போய்ப் பாருங்கன்னு சொல்கிறார். இங்கு உயிருக்குப் போராடுறவங்கள விட்டுபுட்டு நாங்க கலெக்டர்கிட்ட மனுக்கொடுக்கணும்னு சொல்றாங்க. எங்களுக்கு என்ன செய்யுறது தெரியவில்லை'' என்று கண்ணீர் விட்டார்.

மருத்துவமனை
மருத்துவமனை

இதுபற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜயக்குமாரிடம் கேட்டதற்கு, ``டயாலிசிஸ் செய்யாமல் இருந்தது உண்மைதான். ஆனால், தற்போது பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுவிட்டது. நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தடைப்பட்டு வருவதுதான் காரணம். தற்போது மாற்று மோட்டார் மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

நோயாளிகள்
நோயாளிகள்

ஆனால், திடீரென்று மின்சாரம் நின்று நின்று வருவதால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது தெரியவில்லை. தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்தடையே அனைத்துக்கும் காரணமாக உள்ளது. மின்சாரம் தடையின்றி கிடைத்தால் பிரச்னைகள் ஏதும் வராது. இன்று ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து சிகிச்சை அளித்து வருகிறோம்'' என்று கூறினார்.