Election bannerElection banner
Published:Updated:

''65 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தன... அதில் 7 லட்சம் கைவசம் இருக்கிறது!'' - சுகாதாரத்துறை இயக்குநர்!

கொரோனா அலை
கொரோனா அலை

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்த சில கேள்விகளுக்குத் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் பதிலளிக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மக்களைத் தொடர்ந்து பீதியில் ஆழ்த்திவருகிறது. முதல் அலையில் தொற்றிலிருந்து தப்பித்த ஏராளமானோர் இந்த முறை தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். கொரோனாவிலிருந்து ஏறக்குறைய மீண்டு விட்டோம் என்ற மனநிலைக்கு எல்லோரும் வந்துவிட்ட நிலையில், இரண்டாவது அலை தொடங்கி நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஊரடங்கு கடைசித் தீர்வு என்று மத்திய அரசு சொன்னாலும், மாநிலங்கள் ஒவ்வொன்றாக முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் நிலைமை தற்போது மோசமில்லை என்றாலும், மே மத்தியில் கொரோனா இரண்டாவது அலை உச்சம் பெறலாம் என்ற கணிப்பு தமிழக மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; படுக்கைகள் இன்றி, ஆக்ஸிஜன் இன்றி வடமாநிலங்களில் நிலைமை கைமீறிச் சென்றுகொண்டிருப்பதும் மக்கள் மனதில் ஆழமான அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

டி.எஸ்.செல்வவிநாயகம்
டி.எஸ்.செல்வவிநாயகம்
இந்தப் பின்னணியில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்த சில கேள்விகளுக்குத் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் பதிலளிக்கிறார்.
கொரோனா இரண்டாம் அலை... கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த பத்து கட்டளைகள்!

"தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது எந்த நிலையில் இருக்கிறது?"

"இன்றைய நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில்/கட்டுக்குள் தான் இருக்கிறது. தொடர்ந்து அது கட்டுக்குள் இருப்பதற்கும், இதிலிருந்து மீண்டு வருவதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் எல்லோரும் பின்பற்ற வேண்டும். ஒருவர் மட்டும் பின்பற்றி, இன்னொருவர் பின்பற்றவில்லையென்றால் எல்லோரும் தப்பிக்க முடியாது. யாராவது பின்பற்றுவார்கள், நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் விளைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டும்!"

"கொரோனா பரிசோதனையில் முன்பைவிட மேம்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?"

"கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் சில ஆயிரங்களில் இருந்த பரிசோதனை எண்ணிக்கை, நாளொன்றுக்கு சுமார் 1.5 லட்சம் பரிசோதனைகள் வரை இன்று உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலையில், சமாளிக்கக் கூடிய அளவுக்கு இந்தப் பரிசோதனைத் திறன் போதுமானதாக இருக்கிறது."

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

"தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவது; பரிசோதனை முடிவுகள் வர இரண்டு நாட்களுக்கும் மேல் எடுத்துக் கொள்வது; முடிவுகள் தவறாக வருவது - போன்ற பிரச்னைகள், அபாயங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?"

"தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது; மிக அரிதாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்று ஏற்படும் என்று தேவையில்லாத பயத்தால், தடுப்பூசி போடாமல் இருப்பது, தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும்; தொற்று ஏற்பட்டால் பாதிப்பு இதைவிடப் பெரிதாக இருக்கும். இரண்டு டோஸ் எடுத்துக் கொண்ட பிறகும் தொற்று ஏற்பட்டால், அதன் தீவிரம்/ வீரியம் குறைவாகவே இருக்கும் என்பதுதான் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள நன்மை. எனவே தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… தயாரிப்பில் ஏன் தாமதம், மோடி அரசு தவறிழைத்தது எங்கே?!

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் எப்போதும் ஆனதில்லை. இன்றைக்குப் பரிசோதனை ஒன்றரை லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சில ஆயிரங்கள் வேண்டுமானால் சிறிது தாமதம் ஆகலாம். ஆனால், 95 சதவிகித பரிசோதனை முடிவுகள் 24 மணிநேரத்துக்குள் வந்துவிடும்.

பரிசோதனை முடிவுகள் தவறாக வருவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. மாநிலம் முழுவதும் உள்ள சோதனை மையங்களில் தரச் சோதனை நடக்கும். குறிப்பிட்ட சோதனை மையத்திலிருந்து பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு இருந்தால், அதிலிருந்து மாதிரி (sample) எடுத்து சோதனை செய்வோம். அப்படியான சோதனையின் போது முடிவுகளில் ஏதும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை நாங்கள் தெரியப்படுத்துவோம். ஆக, பரிசோதனை முடிவுகளில் தவறு ஏற்படுவது மிகக் குறைவுதான்."

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

"தமிழகத்தில் தற்போது கையிருப்புள்ள தடுப்பூசிகள் எவ்வளவு? தொடக்கத்தைவிட இப்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் அதிகமாக முன்வரும் நிலையில், போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளதா?"

"இப்போதைக்குச் சுமார் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன. இவை சராசரியாக 3-4 நான்கு நாட்கள் வரும். அடுத்த ஸ்டாக்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்திலிருந்தே கோவிஷீல்டு 83 சதவிகிதம், கோவாக்சின் 17 சதவிகிதம் என்ற அளவில் இந்திய அரசிடம் இருந்து இதுவரை 65 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கின்றன. இந்த விகிதத்தில் தான் தடுப்பூசிகள் கிடைக்கும் என்ற நிலையில், மக்களுக்குத் தடுப்பூசியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடையாது. எனவே, கோவிஷீல்டு, கோவாக்சின் எனக் கிடைக்கும் தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி ஒன்றில் 20 டோஸ் இருக்கும்; அதை எடுக்கும்போது 8 பேர் மட்டுமே இருந்தால், மீதி வீணாகும். ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயங்கியபோது 12 சதவிகிதம் என்ற அளவில் தடுப்பூசி வீணாகிக் கொண்டிருந்தது. இப்போது அது 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. நிலைமை சரியாகிக் கொண்டிருக்கிறது."

"அறிகுறிகள் மிதமாக இருப்பவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன? இதுகுறித்த சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்கள் யாவை?"

"சுயபரிசோதனை மேற்கொள்ளல், உடல் வெப்பநிலையை அடிக்கடி கவனித்துவருதல், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணித்தல் ஆகியவற்றைச் சீராக மேற்கொண்டுவர வேண்டும்.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்."

`லேசான அறிகுறிகளோடு கொரோனா' - வீட்டுச் சிகிச்சையில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன?
ஆக்சிஜன் படுக்கை அறைகள்
ஆக்சிஜன் படுக்கை அறைகள்

"தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருந்துகளின் இருப்பு, படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதி ஆகியவற்றின் எண்ணிக்கை/ நிலவரம் குறித்த புள்ளிவிவரங்கள்?"

"தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இரண்டிலும் சேர்த்து சுமார் 55 ஆயிரம் படுக்கைகள் இருக்கின்றன. தற்போதைய நிலையில் சுமார் 50 சதவிகித படுக்கைகள் பயன்பாட்டில் இருக்கின்றன; மீதி எண்ணிக்கையிலான காலி படுக்கைகள் தயாராக இருக்கின்றன.

ஆனால், குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டும் மக்கள் செல்லும்போது, எல்லோருக்கும் அந்த மருத்துவமனைகளில் இடம் கிடைக்காது. எனவே மக்கள் காலியாக இருக்கின்ற மருத்துவமனை படுக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

படுக்கைகள் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா - ஆக்ஸிஜன்
கொரோனா - ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன் பயன்பாட்டைப் பொறுத்தவரை, கடந்த அலையின்போது நாளொன்றுக்குச் சராசரியாக 250 முதல் 280 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது; தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு சுமார் 300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை. தமிழகத்தின் ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு சுமார் 400 மெட்ரிக் டன் என்ற அளவிலும், சேமிப்பு சுமார் 1200 மெட்ரிக் டன் என்ற அளவிலும் இருக்கிறது. எனவே, ஆக்ஸிஜன் அளவும் தற்சமயம் போதுமான அளவுக்கு இருக்கிறது."

"ஞாயிறு ஊரடங்கு தொற்றுப் பரவலைச் சற்று குறைத்திருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். மே 2 (ஞாயிற்றுக்கிழமை) - முழு ஊரடங்கு நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது; அன்றைய தினம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன?"

"கண்டிப்பாகச் சிறிது பாதிப்பு இருக்கும்; மேற்கொண்டு பொது முடக்கம் வேண்டாம் என்றால், மக்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் கண்டிப்பாகத் தவிர்க்க முடியும். கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், மக்களிடம் ஒத்துழைப்பு இல்லையென்றால் சவால்கள் இருக்கவே செய்யும்."

இரவு நேர ஊரடங்கு
இரவு நேர ஊரடங்கு

"மே மத்தியில் இந்தியாவில் கொரோனா உச்சம் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இந்த நிலையை எதிர்கொள்வதற்குத் தமிழகம் எந்தளவுக்குத் தயாராக உள்ளது?"

"அதை எதிர்கொள்ளும், தாங்கும் சாத்தியமும் கட்டமைப்பும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அந்த நிலை வராமல் தடுப்பதில்தான் நம்முடைய புத்திசாலித்தனம் இருக்கிறது. மக்கள் எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டும்தான் இந்த இரண்டாவது அலையைத் தாண்டுவது சாத்தியம். கொரோனா தடுப்பு வழிமுறைகள் எல்லோரும் தவறாமல் பின்பற்றினால், கண்டிப்பாகக் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் மோசமான நிலையை எதிர்கொள்ளத் தான் வேண்டும்."

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு