Published:Updated:

`பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டால் ஆபத்தும் அதிகரிக்கும்!' -எச்சரிக்கும் மருத்துவர் #Corona

கொரோனா பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ்

`ஏப்ரல் 27-ம் தேதி கணக்கின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் உள்ள 12 பேரில் 7 பேர் பெண்கள். அதுபோல் 28-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் பெண்கள்’.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி செங்கல்பட்டு பகுதியில் 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 28-ம் தேதி ஒரேநாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் 7 பேர் பெண்கள். இந்தநிலையில், 27-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நால்வரில் மூன்று பேர் பெண்கள். இந்தப் புள்ளி விவரம் ஆபத்தைச் சொல்வதாக இருக்கிறது என்கிறார் சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று உள்ள நகரமாகச் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை, கேளம்பாக்கம் போன்ற பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னை தொடர்பில் இருப்பவர்களிடமிருந்து கொரோனா தொற்று எளிதில் பரவும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 28-ம் தேதி மட்டும் ஒரேநாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் புகழேந்தி, ``கடந்த சில நாள்களாகவே செங்கல்பட்டு பகுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு புனித தோமையர் மலை பகுதியைச் சேர்ந்த பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்தக் குழந்தையின் தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் இல்லை என ஆங்கில நாளிதழிலும் கொரானா பாசிட்டிவ் இருப்பதாகத் தமிழ் நாளிதழிலும் மாறுபட்ட செய்திகள் வருகின்றன. தெளிவான தகவல்களை அரசு அதிகாரிகள் கொடுக்காததால், மாறுபட்ட தகவல்கள் வெளியாகின்றன.

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டைக்குச் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள். இது மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு சரியாக இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. செங்கல்பட்டு மருத்துவமனையில் 8 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனுக்கு ஏற்கெனவே உடல்நலக்குறைவு இருந்த நிலையில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அந்தச் சிறுவனுக்கு ஏதாவது மருத்துவமனையின் மூலமாக தொற்று வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

பெண்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி அதிகம். இதனால்தான் உலகம் முழுவதிலிமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஏப்ரல் 27-ம் தேதி கணக்கின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் உள்ள 12 பேரில் 7 பேர் பெண்கள். அதுபோல் 28-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் பெண்கள். தொடர்ந்து பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது ஆபத்தான சூழலை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது.

`ஊரடங்கு நீடித்தால் கொரோனா இறப்பைவிட பசி இறப்பு அதிகமாகிவிடும்!’ - இன்ஃபோசிஸ் நிறுவனர் எச்சரிக்கை

இதற்கு முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் சமூகத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்த நிலையில் சமூகப் பரவல் ஏற்படாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அறிக்கை மற்றும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு