``தடுப்பூசியா... விடுமுறையா என்றால் நம் மக்கள் விடுமுறை கொண்டாட்டத்தில்தான் மூழ்குவார்கள். எனவே, இந்த நேரத்தில் மெகா தடுப்பூசி முகாம் வேண்டாம்.''
``அதெல்லாம் முடியாது. சொன்னது சொன்னதுதான்... மெகா தடுப்பூசி முகாம் நடத்தியே ஆக வேண்டும்.''
- `தமிழகத்தில் செப்டம்பர் 12-ம் தேதியன்று 43,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்' என்று தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில தினங்களுக்கு முன் அறிவித்ததன் பின்னணியில்தான், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்குள் மேற்கண்ட அனல்வாதம், புனல்வாதம் தெறித்துக்கொண்டிருக்கிறது!

தமிழகத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் 5-ம் தேதி வரை 3,31,85,824 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் அடக்கம். இத்தகைய சூழலில்தான், `மெகா கொரோனா தடுப்பூசி முகாம்‘ என்கிற பெயரில் பரபரப்பான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. சுமார் 43,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் என்கிற பிரசாரம் பெரிதாக முன்னெடுக்கப் பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களையும் மனதில்கொண்டே இந்தத் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்நிலையில்,``12-ம் தேதியன்று முகாம் நடத்துவது, தேவையற்ற ஓர் ஏற்பாடாக முடிந்துவிடக்கூடிய சூழல்தான் தற்போதைக்கு தமிழகத்தில் இருக்கிறது. எனவே, வேறு தேதிக்குத் தள்ளி வைக்கலாம்'' என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிலிருந்தே கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. ஆனால், அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், அறிவித்து விட்டோம் என்பதற்காகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதிலேயே அதிகாரிகள் குறியாக இருக்கின்றனர் என்கிற புலம்பல்கள் மருத்துவத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளுக்குள் ஒலித்துக்கொண்டுள்ளன.

இந்த மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக தமிழகம் முழுக்கவே ஆங்காங்கே உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளடங்கியோர் சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தியுள்ளனர். இதில், திருவாரூர் மாவட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்களில் ஒருவரிடம் நாம் பேசியபோது, ``இந்த வாரம் மிக நீண்ட விடுமுறை வாரம். அதாவது, 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, 11-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும், திருமண நிகழ்வுகளுக்கும் செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு பரபரத்துக்கொண்டுள்ளனர். அரசாங்கமே முக்கியமான நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கில், அதாவது தீபாவளிப் பண்டிகை அளவுக்கு பேருந்துகளை இயக்குகிறது. அனைத்து ரயில்களும் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டன.
அதுமட்டுமல்ல, அடுத்த வாரம் 17-ம் தேதி புரட்டாசி மாதம் பிறப்பதால், அசைவப் பிரியர்கள் பலரும் வார இறுதிநாளான வரும் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பெரும்பாலும் இறைச்சி, மீன் என்று சமைத்து சாப்பிடத்தான் விரும்புவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுபோன்ற காரணங்களால், 12-ம் தேதியன்று தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்வது, மனித உழைப்பை வீணடிக்கும் செயலாகவே இருக்கும் என்ற கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற பலரும் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அதிகாரிகள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. திட்டமிட்டது திட்டமிட்டதுதான். அன்றைய தினம் கண்டிப்பாக முகாம் நடத்தியே தீர வேண்டும். அதில் ஏதும் சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் உங்களுடைய வேலை என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடக்க இருக்கின்றன. அதாவது, 12 மணி நேரத்துக்கு அதே ஊழியர்கள் களைத்துப் போகாமல் இருப்பார்களா என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை'' என்று வருத்தம் பொங்கச் சொன்னவர், ``இந்த அரசாங்கம் பல்வேறு விஷயங்களில் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. பெரிதாக இல்லாவிட்டாலும் சில விஷயங்களில் நன்கு கவனத்தைச் செலுத்தியே முடிவெடுக்கிறது. இத்தகைய சூழலில், எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தும், முடிவெடுத்துவிட்டோம் என்று பிடிவாதமாக அன்றைய தினத்திலேயே நடத்தப் பார்ப்பது சரிதானா என்று யோசிக்க வேண்டும். தடுப்பூசி முகாம் என்பது மிகமிக அவசியமே. ஆனால், பிரமாண்ட ஏற்பாடுகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாதே. அதற்குப் பதிலாக 14 அல்லது 15-ம் தேதிகளில்கூட நடத்தலாமே?'' என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.
தடுப்பூசி முகாமை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தை சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது. அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், ``கொரோனா தடுப்புப் பணிகளிலும், தடுப்பூசி வழங்குவதிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதிலும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சிறப்பாக அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசும் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்நிலையில், வரும் 11.09.2021 சனிக்கிழமை அன்று முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அடுத்த நாளான, 12.09.2021 ஞாயிறு அன்று கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வை ஆயிரக் கணக்கான அரசு மருத்துவர்கள் எழுத உள்ளனர்.
நீட் தேர்வு மையங்கள் பல்வேறு தொலை தூர இடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வை எழுதும் மருத்துவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் உடனடியாகத் திரும்பிச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த முகாம்களை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்துவதிலும் சிரமங்கள் உள்ளன. எனவே 12-ம் தேதியன்று நடைபெற உள்ள, கொரோனா தடுப்பூசி முகாமை மற்றொரு தேதியில், விரைவாக நடத்தும் வகையிலும், மக்களுக்காக சேவை செய்யும் அரசு மருத்துவர்களின் நலனை காத்திடும் வகையிலும், பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் தள்ளி வைத்திட வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

``ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி செலுத்த ஒருவர், அதைப் பதிவேட்டில் பதிவு செய்ய ஒருவர், உதவிகள் செய்ய இருவர் என மொத்தம் 4 அரசு ஊழியர்களை நியமித்துள்ளனர். 43,000 இடங்கள் எனும்போது மொத்தம் 1,72,000 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இதைத்தவிர கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் டோக்கன் வழங்க வேண்டியிருந்தால், அதற்காக வருவாய்த்துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை போன்ற துறை பணியாளர்களையும் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, இந்தப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிக்காகக் காவல்துறையினர் என்று கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் அன்றைய தினம் பணியில் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் களத்தில் சுழலப்போகிறார்கள். விடுமுறை நாளான 12-ம் தேதியில் இவ்வளவு பெரிய முகாமை நடத்தி, அதன் முழுப்பலனும் கிடைக்காமல் போனால், நமக்குத்தானே நஷ்டம்?” என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்
இந்தக் கேள்விகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முன்வைத்தோம். அதற்கு,
``எல்லா விஷயங்களையும் நாம் தவறாகவே பார்க்கக் கூடாது. மெகா தடுப்பூசி முகாம் என்று நடத்தும்போது, விடுமுறை நாள்களில் நடத்தினால்தான் அது வெற்றியடையும். ஏனெனில், ஓய்வாக வீட்டில் இருக்கும்போதுதான் அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள். இதற்கு முன்பும் பெரும்பாலும் விடுமுறை நாள்களில்தான் நடத்திருயிருக்கிறோம்.

நீங்கள் சொல்வதுபோல பலர் வெளியூருக்குச் சென்றாலும்கூட அவர்கள் தமிழ்நாட்டுக்குள்தானே இருக்கப்போகிறார்கள். நகரத்தில் இருப்பவர்கள் சொந்த ஊருக்குச் சென்றால் அங்கே சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போகிறார்கள். அதில் என்ன சிக்கல் இருக்கிறது? கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவருமே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் எல்லாம்” என்றவரிடம்,
``11-ம் தேதி, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. அதுவும் சிரமத்தை உண்டாக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறதே?” என்று கேட்டதற்கு, ``நீட் தேர்வை எத்தனை பேர் எழுதப் போகிறார்கள்? ஏதாவதொரு காரணத்தைத் தேடிக்கொண்டு எது வேண்டுமானாலும் சொல்லலாம்... இந்த விஷயத்தை பாசிட்டிவ்வாக அணுகுங்கள்” என்றார்.