Published:Updated:

விரக்தியின் விளிம்பில் மருத்துவர்கள், செவிலியர்கள்... தமிழகக் கொரோனா வார்டுகளில் நிலவும் அவலம்!

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை ( மாதிரிப் படம் )

100 கொரோனா நோயாளிகளுக்கு மூன்று மருத்துவர்கள், ஒரு செவிலியர் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது.

தமிழகத்தில் முழு அர்ப்பணிப்புடன் கொரோனாவை எதிர்த்துப் போராடத் தயாராகியிருந்த மருத்துவ உலகம் சற்று தளரத் தொடங்கியிருக்கிறதோ என்ற சந்தேகமும் கவலையும் எழத் தொடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நேரத்தில் அரசு மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் பேசியபோது மிகவும் உற்சாகமாகக் கொரோனா பணிக்குச் செல்வதாகத் தெரிவித்தனர்.

பணியிலிருக்கும்போது கொரோனா பரவினால்கூட பின்வாங்க மாட்டோம். அதை எதிர்த்துப் போராடும் மனதிடமும் வழியும் இருக்கிறது என்று பாசிட்டிவ் வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

Nurse (Representational Image)
Nurse (Representational Image)

ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு நிலைமையைப் பார்க்கும்போது உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து போயிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்னால் முறையான திட்டமிடல் இல்லாத பணி முறை, ஆள் பற்றாக்குறை, தொடர் கொரோனா வார்டு பணி, தரமில்லாத கவச உடை, கொரோனா தாக்குதலுக்குள்ளாகும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை எனப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதன் வெளிப்பாடாகவே ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டம் அமைந்தது. ``400 படுக்கைகள் உள்ள மருத்துவமனையில் மூன்று ஷிஃப்ட் பணிக்கு வெறும் 70 செவிலியர்களே இருக்கிறோம். கவச உடையுடன் கடுமையான பணிச்சூழலில் உழல வேண்டியிருக்கிறது.

பணியிலிருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் செவிலியர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. மீதம் இருக்கும் சொற்ப செவிலியர்களுக்குக் கொரோனா வார்டு பணி முடிந்ததும் 14 நாள்கள் க்வாரன்டீன் கொடுக்கப்படுவதில்லை.

Quarantine
Quarantine

வெறும் ஏழு நாள்கள் மட்டுமே கொடுக்கின்றனர். க்வாரன்டீன் முடிந்ததும் வேறு வார்டுகளுக்குத்தான் பணிக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இங்கு மீண்டும் கொரோனா வார்டுக்கே ஷிஃப்ட் போடப்படுகிறது" என அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா சிகிச்சைப் பணிகளுக்காக ஏற்கெனவே 4,894 செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் சிலர் மட்டுமே பணியில் சேர்ந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக சென்னையில் மிகவும் குறைவான செவிலியர்களே பணிக்குச் சேர்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பணிகளுக்கு மீண்டும் சுமார் 2,834 மருத்துவப் பணியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்களில் 1,239 மருத்துவர்களும் 574 செவிலியர்களும் உள்ளனர். கொரோனாவுக்காகப் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பெரும்பாலானவர்கள் கர்ப்பிணிகளாக இருக்கின்றனர் அல்லது தாய்ப்பாலூட்டும் பெண்களாக இருக்கின்றனர்.

கொரோனா பரவலின்போது, முட்டை, சிக்கன், மட்டன் சாப்பிடலாமா? - அசைவம் குறித்த அலர்ட்!

அவர்களை கொரோனா வார்டு பணிக்கு அனுப்ப முடியாது என்பதால் அவர்களை வேறு வார்டில் பணியமர்த்திவிட்டு அங்கிருப்பவர்களைக் கொரோனா வார்டில் போடுகிறோம். இதனாலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதுபோன்ற சிக்கல்களால் குறுகிய காலத்தில் நான்கைந்து முறை கொரோனா வார்டு டியூட்டி பார்த்தவர்களெல்லாம்கூட இருக்கின்றனர்" என்கிறார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த செவிலியர்.

இதே நிலைதான் தமிழகத்திலிருக்கும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் நீடிக்கிறது. மருத்துவர்கள் நிலையைப் பொறுத்தவரை தமிழகத்திலிருக்கும் அனைத்து முதுநிலை மருத்துவர்களும் இரண்டு மாதம் கட்டாயம் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றும் பட்சத்தில் அவர்கள் விரும்பும் ஊருக்குப் பணிமர்த்தப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Doctors (Representational Image)
Doctors (Representational Image)

``முதுநிலை மருத்துவ மாணவர்களை கொரோனா பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதால் மருத்துவர்கள் பற்றாக்குறை பெரிய அளவில் ஏற்படவில்லை. 100 கொரோனா நோயாளிகளுக்கு மூன்று மருத்துவர்கள், ஒரு செவிலியர் என்ற நிலைதான் இப்போது இருக்கிறது. செவிலியர்கள் பற்றாக்குறையால் அந்தப் பணிகளையும் மருத்துவர்களாகிய நாங்கள்தான் சேர்த்துச் செய்கிறோம்" என்று அங்கலாய்க்கிறார் வடசென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர்

இதுபற்றி மேலும் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ``தரமான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும் இல்லை. கொரோனா நோயாளி மருத்துவமனைக்கு வரும்போது அவரை அட்டெண்ட் செய்ய ஒரு மருத்துவர், செவிலியர் இருக்க வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்ற புகார் வெளியே வந்துவிடக்கூடாது என்பது மட்டும்தான் அரசின் நோக்கமாக இருக்கிறது.

இதுபோன்ற நிலைப்பாட்டால் கொரோனா நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. சரியான செவிலியப் பராமரிப்பு இருந்தால்தான் நோயாளி விரைவில் குணமடைய முடியும். இதுபோன்ற பிரச்னைகளால் தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகரிக்குமே தவிர குறையாது" என்கின்றனர் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள்.

Treatment (Representational Image)
Treatment (Representational Image)

இதுதவிர, தரமற்ற கவச உடை, தொடர்ந்து பல நாள்கள் கொரோனா நோயாளிகளுடன் புழங்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் நோய்த்தொற்றுக்குப் பல மருத்துவர்கள், செவிலியர்கள் ஆளாகின்றனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் 56 மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரையும் ஒரே அறையில் கூடும்படி நிர்வாகம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வோர் அரசு மருத்துவமனையிலும் இதுபோன்று நாள்தோறும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இது மருத்துவத் துறையினரைக் கடுமையான மனஅழுத்தத்துக்கும் விரக்திக்கும் ஆளாக்கியிருக்கிறது. உடன் பணியாற்றுபவர்கள், குடும்பத்தினரிடம் தங்கள் நிலையைக்கூறி அழுது புலம்புவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் சுமார் 18,000 அரசு மருத்துவர்கள் பணியில் இருக்கின்றனர். அதனால் கொரோனாவை எதிர்கொள்வது சிரமமல்ல என்று பெருமைப்பட்ட நமக்கு, இதுபோன்ற தகவல்கள் கவலையளிக்கின்றன. சுழற்சி முறையில் கொரோனா பணிக்காக மருத்துவப் பணியாளர்களை அனுப்புவதில் முறையான திட்டமிடல் இல்லாததுதான் இதுபோன்ற குளறுபடிகளுக்குக் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Corona (Representational Image)
Corona (Representational Image)
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இ-பாஸ் நிறுத்தம்? -கொரோனா பரவலால் `திடீர்' நடவடிக்கை

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்கான ஒரே ஆயுதம் மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமே. அதற்கு மாற்றே கிடையாது எனும்போது அவர்களைச் சரியான முறையில் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? பிற மாநிலங்களைவிட பொது சுகாதாரத் துறை கட்டமைப்பில் மேம்பட்டு இருக்கும் தமிழகத்துக்கு இதுபோன்ற பின்னடைவு ஏற்பட்டிருப்பது நிஜமாகவே வெட்கப்பட வேண்டிய விஷயம்.

அடுத்த கட்டுரைக்கு