Published:Updated:

`நாங்கள் சூப்பர்ஹீரோ இல்லை. ஆனால் போராடுகிறோம்!'- இது வெள்ளையுடை வீரர்களின் காலம்! #LetsStayPositive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இது வெள்ளையுடை வீரர்களின் காலம்! - Corona
இது வெள்ளையுடை வீரர்களின் காலம்! - Corona

`மருத்துவராக இருப்பவர்கள் அவர்களின் வாழ்நாளுக்கும் மருத்துவர்கள்தான். எங்களுக்கு என்றைக்குமே ஓய்வு கிடையாது’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா தாக்கத்தால், பெரும் இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இத்தாலிக்குத் தனது மருத்துவர்கள் படையை அனுப்பிக் கைகொடுத்திருக்கிறது கியூபா. வெனிசுலா, நிகராகுவே, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கியூபாவிலிருந்து சிறு சிறு குழுக்களாக மருத்துவர்கள், மருந்துகளுடன் சென்றிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தனது ஆறாவது மருத்துவர் குழுவை மருந்துகளுடன் இத்தாலிக்கு அனுப்பியிருக்கிறது அந்த நாடு.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, கரீபியத் தீவுகளின் மிகச்சிறிய நாடு ஒன்றிடமிருந்து உதவி பெற்றிருப்பது ஆச்ச யம்தான். இத்தனைக்கும் கியூபாவில் 40 கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே தனது நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அந்த நாடு தடைவிதித்திருந்தது.

அதனால் நோய் பரவுதல் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கும் என அந்த நாடு நம்பிக்கையுடன் இருக்கிறது. இருந்தும் கியூபா மீது பல்வேறு வரிகளை அமெரிக்க அரசு கடந்த மாதம் விதித்திருந்தது. இது அந்த நாட்டுக்குப் பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும். இத்தனை நெருக்கடிகளுக்கும் இடையில்தான் தனது இண்டர்ஃபெரான் மருந்துடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார்கள் கியூபாவின் வெள்ளை உடை ராணுவ வீரர்கள்.

கியூபா மருத்துவர்கள்
கியூபா மருத்துவர்கள்

1981ல் கியூபா, டெங்கு நோய்த்தொற்றால் பெரும் இழப்பைச் சந்தித்தது. 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். அதுவரை கரீபியத் தீவுகளைப் பாதிக்காத டெங்கு, அமெரிக்காவால்தான் அங்கு பரப்பப்பட்டதாக பிடல் காஸ்ட்ரோ குற்றம் சாட்டினார். அந்தச் சூழல் கொடுத்த நெருக்கடியால் தனது மருத்துவத் துறையை வலுப்படுத்த முனைந்தது கியூபா. 2019ம் ஆண்டின் கணக்கீட்டின்படி அங்கே ஒவ்வொரு 150 குடிமக்களுக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார். கூடவே தனது உயிர்தொழில்நுட்பவியல் (Biotech) பிரிவையும் வலுப்படுத்தத் தொடங்கியது அந்த நாடு.

தற்போது, கொரோனா நோய்க்கு எதிரான சீனாவின் மருந்துகள் பட்டியலில் கியூபாவின் இந்த இண்டர்பெரான் மருந்தும் இடம்பெற்றிருக்கிறது. இண்டர்பெரான் ஆல்ஃபா 2பி என்பது சீனா மற்றும் கியூபாவின் கூட்டுத்தயாரிப்பு. இந்த மருந்து நோய்க்கான தீர்வு இல்லை. ஆனால் நோயாளியின் உடல்நிலை மோசமாகாமல் பார்த்துக்கொள்ளும். ’நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. ஆனால் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பயமில்லாமல் இல்லை. ஆனால் உயிர்களைக் காப்பாற்றும் வைராக்கியம் அதைவிடப் பெரிதாக இருக்கிறது’ என்கிறார்கள் கியூபாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கும் மருத்துவர்கள்.

நாங்கள் சூப்பர் ஹீரோக்கள் இல்லை . நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குப் பயமில்லாமல் இல்லை. ஆனால் உயிர்களைக் காப்பாற்றும் வைராக்கியம் அதைவிடப் பெரிதாக இருக்கிறது!
வெளிநாடுகளுக்குச் சென்ற கியூப மருத்துவர்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று உலகம், இவர்களைப் போன்ற வெள்ளை உடை ராணுவ வீரர்களைத்தான் நம்பியிருக்கிறது. 40 மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவமனைகளில் தொடர்ந்து உழைக்கும் மருத்துவர்கள், சீறுநீர் கழிக்கக்கூட நேரம் ஒதுக்காமல் பெரியவர்களுக்கான டையபர்களைக் கட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தனது தலைமுடி மூலம் கொரோனா பரவிவிடக் கூடாது என்பதற்காக தலையை மழுங்கடித்துக் கொண்டு வேலை பார்க்கும் மருத்துவர்கள், மூச்சுமுட்ட மாஸ்க் மற்றும் கவச உடை அணிந்து வரியோடிய முகங்களுடன் நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், தனது குடும்பத்தின் நிலைகூடத் தெரியாமல் அவர்களைப் பிரிந்து மருத்துவமனைகளே கதியென எந்நேரமும் மக்களுக்காகக் காத்திருக்கும் மருத்துவர்கள் என சமூகவலைதளங்கள் முழுவதும் மருத்துவர்கள் குறித்த பாசிட்டிவ் ஸ்டோரிகள் நிரம்பி வழிகின்றன.

ஜியம்பியரோ ஜிரோன்
ஜியம்பியரோ ஜிரோன்

இத்தாலியைச் சேர்ந்த 85 வயது மயக்கவியல் நிபுணர் ஜியம்பியரோ ஜிரோன் (Giampiero Giron), பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தனது மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பிற மருத்துவர்களுடன் கைகோத்திருக்கிறார். “சக மருத்துவர்கள் உதவமுடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். உடனே கிளம்பிவந்துவிட்டேன். மருத்துவராக இருப்பவர்கள் அவர்களின் வாழ்நாளுக்கும் மருத்துவர்கள்தான். எங்களுக்கு என்றைக்குமே ஓய்வு கிடையாது” என்கிறார் அந்த 85 வயது நம்பிக்கை மனிதர்.

ஒவ்வொரு பத்துநிமிடத்துக்கும் ஒரு உயிரை பலிகொடுத்துக்கொண்டிருக்கும் ஈரானில் ஷோஹடா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஷிரின் ரோஹானி, தனது இறுதி நிமிடம் வரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். முகத்தில் மாஸ்க் இடது கையில் பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய ட்ரிப்ஸ் பாட்டில், தன்னுடைய ஸ்டெதஸ்கோப் சூழ அமர்ந்துகொண்டிருந்த ஷிரின், கொரோனா என்னும் கொடிய ஆட்கொள்ளிக்கு எதிரான போராட்டகுணத்தின் அடையாளம்.

ஷிரின் ரோஹானி
ஷிரின் ரோஹானி

கொரோனாவின் மையப்புள்ளியாகக் கூறப்படும் சீனாவின் வுகான் பகுதி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லியூசுமிங் கொரோனாவுக்கு எதிராகத் தனது உயிரைத்தியாகம் செய்த மருத்துவர்களில் ஒருவர். அவர் மரணத்துக்குப் பிறகுதான் சீனா தனது பிற மாகாணங்களிலிருந்து 3000 மருத்துவர்களை வுஹான் பகுதிக்கு அனுப்பியது.

இத்தாலி மருத்துவ இணையர்கள்
இத்தாலி மருத்துவ இணையர்கள்

இத்தாலியின் மருத்துவ இணையர்களான ரோபெர்ட்டோ டொன்னெலி மற்றும் இவானா காஸ்டினையர் வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருந்த தங்களது திருமணத்துக்காகத் தயாரகிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். தற்போது தங்களது மகளை அவளது தாத்தா- பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு இத்தாலியின் மொடேனா மருத்துவமனையில் அரணாக இருவரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

“எங்களது முதல் நோயாளி இரண்டு சகோதரர்கள். தற்போது 13 வயதுச் சிறுமி ஒருத்தியும் அவளது தந்தையும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இறந்துவிடுவோமா என்று அவர்கள் அச்சத்துடன் கேட்கிறார்கள். நோயாளிகளிடம் பொய்சொல்லக்கூடாது. இதில் உங்களுடன் நானும் இருக்கிறேன். இணைந்து போராடுவோம் என்று கூறியிருக்கிறேன். இதிலிருந்து நாடு மீண்டு எங்கள் மகளைச் சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம். இல்லையென்றால் எங்கள் மகளுக்கு எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்ததாக எடுத்துக்கொள்வோம். நிச்சயம் ஒளிபிறக்கும்” எனத் தங்களது வீடியோ பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவும் இதுபோலத் தனது சிறந்த மருத்துவர் படையுடன் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. அனுபவமிக்க ஓய்வுபெற்ற மருத்துவர்கள் சிலர் தங்களைப் பணியில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவிலிருந்து நிச்சயம் நாம் மீண்டு வருவோம். மீண்டு வரும் தலைமுறை நிச்சயம் தன் வரலாற்றில் இந்த வீரர்களை நினைவுகூறும்.

இதுபோன்று உங்கள் பகுதியிலும் மருத்துவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்களைப் பற்றிக் கீழே கமென்டில் பகிரவும். இந்த நெருக்கடியிலிருந்து ஒற்றுமையுடன் மீண்டெழுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு