
அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியம்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் தன் தாக்கத்தைக் கொஞ்சமும் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்நிலையில், வைரஸின் தாக்கத்தையும் பரவலையும் கண்காணிக்க, பரவலாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறினாலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டு பிசிஆர் கருவிகளை வீணாக்க வேண்டாம்' என்று அறிவுறுத்தி உள்ளார்.
`இதை எப்படிப் புரிந்துகொள்வது?' எனத் தொற்றுநோயியல் மருத்துவர் சுரேஷ் குமாரிடம் பேசினோம்.

'' அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் சில கருத்துகளைக் கணக்கில்கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் குடும்பத்தில் யாராவது தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் அவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும் பரிசோதனை செய்வது அவசியம்.
அதேபோல் ஒருவர் எந்தப் பகுதியில் வசிப்பவர் என்பதும் அவசியம். அதிக பாதிப்புள்ள பகுதிகளில் இருப்பவர்களுக்குப் பரிசோதிக்கலாம்.

அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியம். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாதவர்கள், அறிகுறியற்றவர்கள் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.