Published:Updated:

`ஏமாற்றுகிறார்களா அரசு மருத்துவர்கள்...?’ - பீலா ராஜேஷின் கடிதத்தில் கூறப்பட்டது உண்மையா?

சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 15,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சை, காய்ச்சல் வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அவசர அறுவை சிகிச்சைகள் போன்ற பிரிவுகள் தடையின்றிச் செயல்பட்டு வருகின்றன.

Beela Rajesh
Beela Rajesh

ஊதிய உயர்வு கோரி ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் அரசு மருத்துவர்கள். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்காத மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கக்கோரி சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழகக் காவல்துறை டிஜிபிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருக்கிறார்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

அந்தக் கடிதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் பிரதிநிதிகள் தன்னை அக்டோபர் 25-ம் தேதி சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகத் தெரிவித்ததையடுத்து மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்தனர். ஆனால், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வை மீறும் வகையில், முறையான அறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டதால், போராட்டத்தைக் கைவிடுவதாகக் கூறிவிட்டு, அரசு மருத்துவர்கள் ஏமாற்றுகிறார்களா என்று பேச்சுவார்த்தையின்போது உடனிருந்தவரும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான டாக்டர் அ.இராமலிங்கத்திடம் கேட்டோம்.

Strike
Strike

``பேச்சுவார்த்தையின்போது சுகாதாரத் துறை செயலர், மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறினார். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நாங்கள், எங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு முதல்வரைச் சந்திக்க நேரம் வாங்கித் தாருங்கள். அப்போது எங்கள் போராட்டத்தைக் கைவிடுகிறோம் என்று தெரிவித்துவிட்டு வந்தோம். முதல்வர் எங்கள் பிரச்னையில் தலையிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதற்கு முன்பாகப் போராட்டத்தைக் கைவிடுவதாக நாங்கள் வாக்களிக்கவில்லை.

Indefinite strike
Indefinite strike

சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். 15,000 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சை, காய்ச்சல் வார்டுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அவசர அறுவை சிகிச்சைகள் போன்ற பிரிவுகள் தடையின்றிச் செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.