Published:Updated:

`பயம் வேண்டாம்.. அதுதான் உங்களைக் கொன்றுவிடும்!’- கொரோனாவில் இருந்து மீண்ட அரியலூர் பெண்

அரியலூர் பெண்
அரியலூர் பெண்

கொரானோவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மன வேதனைப்பட வேண்டாம் நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்யுங்கள்.

`கொரானோவைக் கண்டு பயப்படாதீர்கள்; உங்களது பயம்தான் உங்களைக் கொன்றுவிடும்' என்று கொரானோவிலிருந்து குணமடைந்த ஒரு பெண் ஒருவர் வீடியோவாகப் பேசி அதை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இவர் கொரானோ தொற்று பாதிப்புடன் பெட்டில் படுத்துக்கொண்டு டிக்டாக் வீடியோ போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அரியலூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், சளி மற்றும் கடுமையான காய்ச்சல் காரணத்தினால் கடந்த மார்ச் 18-ம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த பின்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் அப்பெண், அவரது சோகம் மறைய டிக்டாக்கில் நான்கு வீடியோக்களை அடுத்தடுத்து பதிவேற்றினார்.

அரியலூர் டிக்டாக் பெண்
அரியலூர் டிக்டாக் பெண்

அத்தோடு அவருக்கு மருத்துவ உதவிகள் புரிந்த ஒப்பந்த மருத்துவ தூய்மைப் பணியாளர்கள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியதால், மூன்று பணியாளர்களையும் அதிகாரிகள் பணிநீக்கம் செய்தார்கள். இந்த நிலையில், 28 நாள்களுக்குப் பிறகு அவர் குணமாகி தற்போது வீடு திரும்பியுள்ளார். கொரானோவிலிருந்து மீண்டு வந்த அனுபவம் குறித்து வீடியோவாகப் பேசி அதையும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த விடியோவில்

``கொரானோவைக் கண்டு பயப்படாதீர்கள்.. உங்களது பயம்தான் உங்களைக் கொன்றுவிடும். எனக்குக் கொரானோ பாதிப்பு இருப்பது தெரிந்தபோது மிகவும் பயத்துடன் இருந்தேன். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டபோது மிகவும் வேதனை அடைந்தேன். அந்தச் சூழ்நிலையில் என்னை நானே தேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்தமான பாடல்களைப் பாடி அதை போனில் வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்துவந்தேன்.

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

கொரானோவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மன வேதனைப்பட வேண்டாம். நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்யுங்கள். அது உங்களுடைய மனநிலையை மாற்றும். அத்தோடு மன அழுத்தத்தை நீக்க எனது உறவினர்களுடன் நீண்ட நேரம் போனில் பேசுவேன். எனக்குப் பிடித்தமான செயல்களைச் செய்துவந்தேன். மருத்துவமனையை வீடாக நினைத்து மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அதுதான் நாட்டுக்கும் நல்லது நமது வீட்டுக்கும் நல்லது" எனத் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு