Published:Updated:

கோவிட் தடுப்பூசி: ஒருபக்கம் தட்டுப்பாடு; மறுபக்கம் வற்புறுத்தல்கள்; தனியாரை ஊக்குவிக்கிறதா அரசு?

Corona Vaccine
Corona Vaccine ( AP Illustration/Peter Hamlin )

`தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தால்தான் அனுமதி’ என்று சில தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் வேறுவழியில்லாமல் தடுப்பூசிக்காகத் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

தடுப்பூசி குறித்த அச்சம் விலகி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி வேண்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், புதிய தடுப்பூசிகள் போதுமானளவு வராததாலும் கையிருப்பு குறைந்து அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் சூழல் உருவாகியிருக்கிறது. இப்படியான சூழலில், `தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தால்தான் அனுமதி’ என்று சில தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் வேறுவழியில்லாமல் தடுப்பூசிக்காகத் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

A health worker administers the vaccine
A health worker administers the vaccine
AP Photo / Mahesh Kumar A

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டளர் சரவணன், ``தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் அனுமதிப்போம் என்று ஒரு சில நிறுவனங்களில் எழுத்துபூர்வமாகவே வலியுறுத்தியுள்ளனர். சில நிறுவனங்களில் வாய்மொழி உத்தரவாகப் பிறப்பித்துள்ளனர். கல்லூரிகளும் விரைவில் திறக்கப்படலாம் என்பதை மனதில் வைத்து, `தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தால்தான் கல்லூரிக்குள் அனுமதி’ என்று சில கல்லூரி நிர்வாகங்கள் இப்போதே மாணவர்களிடம் வலியுறுத்துவதாகவும் கேள்விப்படுகிறோம். நலன் கருதியே அவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் தடுப்பூசி கிடைக்காதபோது இப்படிச் செய்வது சரியானதாக இருக்காது.

பெரும்பாலான நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து தங்களின் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட்டுவிடுகின்றனர். எனவே, அதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், சில நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிடுகின்றனர். அவர்களுக்குத்தான் பிரச்னை. அவர்கள் தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடுகின்றனர். எல்லோருக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்வரை ஊழியர்களையோ, மாணவர்களையோ கட்டாயப்படுத்தக் கூடாது என்று அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி போட்டால் வெளிநாடு செல்வதில் சிக்கலா? - உண்மை என்ன?

இதுகுறித்து மேலும் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கிடைத்தால்தானே போட்டுக்கொள்வார்கள். CoWin ஆப்பில் தேடினால், பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி இல்லை என்றுதான் காட்டுகிறது. தெரிந்த நபர்கள் ஒருவாரத்துக்கும் மேலாக CoWin ஆப்பில் முயன்று வருகின்றனர். ஆனால், இல்லை என்றுதான் தொடர்ச்சியாகக் காட்டுகிறது. இப்படி தட்டுப்பாடு நிலவும் சூழலில் தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தால்தான் அனுமதி என்று நிறுவனங்கள் வலியுறுத்தினால் மக்களும் மாணவர்களும் எங்கே போவார்கள்? வேறு வழியில்லாமல் தனியாரைத்தான் நாட வேண்டியிருக்கும்.

ஏதோவொரு வகையில் தனியார் மருத்துவமனைகளின் லாபத்துக்கான விஷயமாக இது மாறுகிறது; எளியோரைச் சிரமத்தில் தள்ளுகிறது; எல்லோராலும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியுமா? ஆகவே தட்டுப்பாடு எல்லாம் சரியாகி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் எப்போது வேண்டுமானாலும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற சூழல் உருவாகும்வரை இப்படியான நெருக்கடிகள் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் தெளிவாக.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath, File
Novavax Explained: இந்தியாவிற்குப் பயன் தருமா புதிய தடுப்பூசி?!

மருத்துவர் புகழேந்தியின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது. ``தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாவிட்டாலும்கூட ஒருவரைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடச் சொல்லக் கூடாது என்பதுதான் என் நிலைப்பாடு. `தடுப்பூசியின் சாதக பாதகங்களை மக்களிடம் தெரிவித்து முடிவெடுக்கும் உரிமையை மக்களிடமே விட்டுவிடுங்கள்’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசி போடப்பட வேண்டும்.

ஆனால், இங்கு அப்படிச் செய்யவில்லை. நாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அந்தளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆனால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியோ, `தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் அனுமதி இல்லை என்று வலியுறுத்தவுள்ளோம் என்று பேட்டி கொடுக்கிறார். இங்கு தடுப்பூசி கட்டாயம் என்று சட்டம் இல்லை. ஆனால், மறைமுகமாகக் கட்டாயமாக்குகின்றனர்.

`தடுப்பூசி போட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கொடுப்பீர்களா?’ என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மருத்துவர் ஒருவர் அரசிடம் கேள்வி எழுப்பியதற்கு, `இழப்பீடெல்லாம் தர மாட்டோம். ஏனெனில், தடுப்பூசி என்பது சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே போடப்படுகிறது’ என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. சுய விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும் ஒரு விஷயத்தை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.

அதுமட்டுமல்ல, தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலில், இப்படியான நிர்ப்பந்தங்கள் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் செயல். ஒரு நிறுனம் தங்கள் ஊழியரின் நலன் கருதி தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சொல்கிறது. அது எப்படி தனியாரை ஊக்குவிக்கும் செயலாகும், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாமே என்று நீங்கள் கேட்கலாம். அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தனியார் மருத்துவமனைகள் 25 சதகிவித தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது தனியாரை ஊக்குவிக்கும் செயலல்லாமல் வேறு என்ன... அதை ஏன் தனியாருக்குக் கொடுக்க வேண்டும்?

மருத்துவர் புகழேந்தி
மருத்துவர் புகழேந்தி

100 சதவிகிதத்தையும் அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்குவதுதானே சிறந்த முடிவாக இருக்கும்? கேட்டால், `இவ்வளவு விலைதான் என்று தீர்மானித்துவிட்டோம். ஆகையால், பிரச்னை இருக்காது’ என்பார்கள். ஆனால், நடைமுறையில் அதெல்லாம் சாத்தியம் இல்லை. கொரோனா சிகிச்சைக் கட்டணத்திலேயேதான் பார்த்தோமே... சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி விலையைத் தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள். அரசால் அதையெல்லாம் ஒழுங்குபடுத்த முடியாது. ஆகவே, தடுப்பூசியை நூறு சதவிகிதம் இலவசமாக வழங்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் தடுப்பூசி உற்பத்தியையும் அரசே செய்வதற்கும் முனைப்பு காட்ட வேண்டும். நம்மிடம் இருக்கும் தடுப்பூசி தயாரிப்பு மையங்களைச் செயல்படாமல் போட்டு வைத்துவிட்டு, தனியாரிடம் கையேந்தி நிற்பதால்தான், `மானியம் கொடுத்தால்தான் தயாரிப்பேன். தொடர்ந்து இதே விலைக்குக் கொடுத்தால் கட்டுப்படியாகாது’ என்றெல்லாம் பேரம் பேசுகின்றனர். தனியார் நிறுவனங்களின் கட்டமைப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அரசே தடுப்பூசித் தயாரிப்பில் இறங்க வேண்டும். அதுமட்டுமல்ல அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட வேண்டும். ஏனெனில், `குறிப்பிட்ட நேரத்தில் சரியான விகிதத்தில் தடுப்பூசி போடாமல் விடுவதும், திறன் குறைந்த தடுப்பூசியைச் செலுத்துவதும் வைரஸ் உருமாற்றத்துக்குக் காரணமாக அமையும்’ பல வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருப்பதையும் அரசு கவனிக்கத் தவறக் கூடாது” என்றார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம், ``அதிகபட்சமாக நாளொன்றுக்கு 3.68 லட்சம் தடுப்பூசிகள் போட்டதை ஒப்பிட்டு தடுப்பூசி தட்டுப்பாடு என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். கையிருப்பு குறைவாக உள்ள சில தினங்களில் தட்டுப்பாடு இருப்பது உண்மை. மற்ற நேரங்களில் தேவையானோருக்குத் தடுப்பூசி கிடைத்துவிடும். இதையெல்லாம் கடந்தும் தனிப்பட்ட முறையில் சில நிறுவனங்களில் கட்டாயப்படுத்துவதாகப் புகார் வந்தால் நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாகத் தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கிறோம்.

தடுப்பூசிக்காகக் கூட்டமாக இருக்கும் இடங்களும் இருக்கின்றன. கூட்டமே இல்லாத பல இடங்களும் இருக்கின்றன. தடுப்பூசி தட்டுப்பாடு என்பது ஆரம்பத்தில் மூன்று, நான்கு வாரங்கள் இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை. தடுப்பூசி கிடைக்காத நிலையே கிடையாது. அதற்கு மேலும் யாருக்கேனும் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் இருந்தால் அந்த ஏஜென்சியை எங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். உதாரணத்துக்கு காசிமேடு மீனவர்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், எங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் அவர்களுக்கு நாங்கள் சிறப்பு ஏற்பாடு செய்து தருகிறோம். கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 11,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதல்லவா... அதுபோல செய்கிறோம்.

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் பல் அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளலாமா?

நீங்கள் சொல்வது போன்ற சிக்கல்கள் இதுவரை எங்களது கவனத்துக்கு வரவில்லை. தனிப்பட்ட நிறுவனங்கள் அப்படி நிர்ப்பந்திப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்தால், அந்தப் பகுதியில் தடுப்பூசி இல்லாத நிலை உருவாகாமல் பார்த்துக் கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவும் தயாராக உள்ளோம். திறக்காத கல்வி நிறுவனங்கள் குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது” என்றார்.

`வரும் முன் காப்பதே நலம்' என்பதை நன்கு உணர்ந்தவர்களே திறக்காத கல்வி நிறுவனங்கள் குறித்து இப்போது பேச முடியாது என்பது ஏற்புடையதல்ல. கல்லூரி திறக்கப்படும்போது மாணவர்கள் அலைக்கழிக்கப்படாமலிருக்க இப்போதே செயலாற்ற வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு