Published:Updated:

`ஒருவருக்கு மட்டும்தான் கொரோனா பாதிப்பு; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!' - அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

`கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து சமூகவலைதளத்தில் வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

ஓமனில் இருந்து தமிழகத்துக்கு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இதில் பங்கேற்று மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

கொரோனா
கொரோனா

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கரிடம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசியவர், ``தமிழகத்தில் ஒருவரைத் தவிர வேறுயாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது. 2 நாள்களாக காய்ச்சல் இல்லாததால், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாம் செயல்பட்டு வருகிறோம். இன்று நடந்த இந்த கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டனர். என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்பது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். மத்திய அரசின் நெறிமுறைகளை அவர்களிடம் பகிர்ந்துள்ளோம். அவர்களுக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தது; அதை விளக்கியுள்ளோம். தனியார் மருத்துவர்கள் எப்படி நோயாளிகளைக் கையாள வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளோம்” என்றார்.

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

அதன்பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எங்கெங்கு உள்ளன?

கிண்டியில் உள்ள ஆய்வகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாளை முதல் மாதிரிகளை அனுப்பி ஆய்வு செய்துகொள்ளலாம். மத்திய அரசிடம் இதற்கான அனுமதியை வாங்கிவிட்டோம். தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய மூன்று இடங்களில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், விரைவில் அந்த ஆய்வகங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும்

101 வயது சீன முதியவரின் நம்பிக்கை... காணாமல்போன கொரோனா!

மேலும் பேசியவர், ``ஊடகங்களில் கேள்வியும் என்னுடைய பதிலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்க வேண்டும். பொதுமக்களின் பயத்தையும், பதற்றத்தையும் தணிக்க வேண்டும். அதேநேரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சந்திப்பை நாம் ஏற்படுத்துகிறோம். உங்களுடைய கேள்வியும் என்னுடைய பதிலும் அப்படித்தான் இருக்க வேண்டும். மருத்துவத்துறையின் தர்மத்தை மீறி என்னால் எந்தக் கருத்தையும் கூறமுடியாது.

மருத்துவமனையில் விஜயபாஸ்கர்
மருத்துவமனையில் விஜயபாஸ்கர்

இந்திய மருத்துவத்தில் இந்த கொரோனாவைக் குணப்படுத்த முடியும் எனச் சிலர் சொல்கிறார்களே..?

பாரம்பர்யமிக்க 5 இந்திய மருத்துவத் துறைகளை கையாளக்கூடிய துறை இருக்கிறது. அதில் மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். நிபுணர்களிடம் நீங்கள் செல்லுங்கள்; அவர்கள் ஆய்வு செய்வார்கள். எதையும் உறுதிப்படுத்தாமல் அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் பொதுமக்களிடம் சொல்லக் கூடாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் எந்த மருந்துகளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அதில் தவறு இல்லை. சில உணவுகளை எடுத்துக்கொண்டாலும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

நிலவேம்பை எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவற்றை உட்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், கேன்சர் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள் அதிகமாகக் கூட்டம் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்; கவனமாக இருங்கள் என்கிறோம். அதையும் மீறிச் செல்ல வேண்டும் என்றால் தற்காப்புக்காக மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறோம்.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் மாஸ்க் போட வேண்டிய நிலையும் இல்லை. நாம் யாரும் மாஸ்க் அணிய வேண்டிய தேவையில்லை. `கைகளைக் கழுவுவதற்கான பிரத்யேகமான மருந்து கிடைக்கவில்லை' என்கிறார்கள். சாதாரண சோப்புகளைப் பயன்படுத்தி நன்றாக கைகளைக் கழுவினால் போதுமானது. தமிழகத்தில் பயப்படக்கூடிய சூழ்நிலை இல்லை. சமூகவலைதளத்தில் வரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம். அதையும் மீறி யாராவது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளத்தில் வதந்திகளைப் பரப்பினால் சமூக நல்வாழ்வுத்துறையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்

அடுத்த கட்டுரைக்கு