Published:Updated:

`விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு!’ - தமிழக மக்களுக்கு முதல்வரின் அட்வைஸ்

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அரசின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீதும் வதந்திகளை பரப்புபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களிடம் உரையாற்றினர். முதல்வரின் உரையிலிருந்து, `தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பேசுகிறேன். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி காட்டுத்தீபோல் பரவி வருவதை நாம் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளின்படி 21 நாள்கள் நாம் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்

இந்த வைரஸ் தாக்கத்தை எப்படி தடுப்பது என்பதை அறிந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு நேரடியாக கைகள் மூலமாகவும் பரவுகிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக ரூ.3,750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 10,158 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், கூடுதலாக படுக்கை வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்புத் தொகுப்பாக ரூ.1,000, 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோக திட்டத்துடன் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

அம்மா உணவகத்தின் மூலம் சுவையான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் இந்த மாதம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரண்டு நாள்களுக்கான ஊதியம் சிறப்பு நிதியாக கூடுதலாக வழங்கப்படும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிகமிக அவசியம். கொரோனா நோயின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் தானாகவே முன்வந்து தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் குடும்பத்தையும், சமுதாயத்தையும் நாட்டையும் பாதுகாக்கும்.

உங்கள் குடும்பம் எப்படி உங்களுக்கு முக்கியமோ அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இந்த 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறையல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க அரசு விடுத்துள்ள உத்தரவு. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.

வெறிச்சோடிய சென்னை
வெறிச்சோடிய சென்னை

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவே, யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள். கூட்டமாகக் கூடுவதைத் தவிருங்கள். வெளியில் சென்றுவந்தால் கைகளைக் கழுவுங்கள். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். `விழித்திரு... விலகியிரு... வீட்டிலேயே இரு’ என்பதை நாம் அனைவரும் கடைப்பிடிப்போம். அரசின் உத்தரவுகளை மீறுபவர்கள் மீதும் வதந்திகளை பரப்புபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு