Published:Updated:

``கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூவரும் குணமடைந்தனர்!'' - கேரள பொதுச் சுகாதாரத்துறையின் வெற்றி

கேரளா முதல்வர் பினராயி விஜயன்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் ( ANI )

"கேரளாவில் செயல்படும் பொது சுகாதாரத்துறை, முழுவதுமாக மக்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. அதனால்தான், கொரோனா வைரஸின் பரவலை வெகு சீக்கிரத்திலேயே கட்டுப்படுத்த முடிந்தது."

கடந்த சில வாரங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், தற்போது COVID-2019 என அழைக்கப்படுகின்ற 'நாவல் கொரோனா வைரஸ்'. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸின் தாக்குதல் பயணம் அமெரிக்கா, சிங்கப்பூர் எனப் பல நாடுகளைக் கடந்து, கேரளாவின் வழியே இந்தியாவிற்குள்ளும் வந்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து இந்தியா திருப்பிய கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த மாணவருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கேரள சுகாதாரத்துறையின் சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

அதன்பிறகு, ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவர, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

காட்டுத்தீ போல பரவிவரும் இந்த வைரஸ், சீனாவில் பல உயிர்களைப் பலிவாங்கியிருக்கும் நிலையில், இதனால் இந்தியாவிலும் எவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்படப்போகிறதோ என்று அனைவரும் அச்சத்துடன் கேரளாவை பார்த்துக் கொண்டிக்கும் வேளையில், கேரளாவில் முதன்முதலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர், முழுவதுமாகக் குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை அறிவித்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`3000 ஆண்டுகள் பழைமையான மருத்துவம்’ - கொரோனாவுக்கு எதிராக பாரம்பர்ய முறையைக் கையில் எடுத்த சீனா

அதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்ற இரு மாணவர்களும்கூட குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேம்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்ட வல்லரசு நாடான சீனாவிற்கு இணையாக இந்தியாவின் ஒரு மாநிலமான கேரளாவும் தன் பகுதியில் பரவிவந்த கொரோனா வைரஸின் தாக்குதலை விரைவாகக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், ஏற்கெனவே வைரஸ் தாக்குதலுக்கு ஆட்பட்டிருந்தவர்களையும் முழுமையாகக் குணமடையவைத்துள்ளது.

இந்த வகையில், கேரள சுகாதாரத்துறையின் பங்கு கவனத்திற்குரியது. இதேபோல், நிபா வைரஸ் கேரளாவில் பரவியபோதும் அதைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத்துறை எடுத்த முயற்சிகள் ஏராளம்.

எனவே, கேரள சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் பற்றியும், இந்தியாவில் மருத்துவத்துறையின் செயல்பாடுகள் பற்றியும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்

"உலகிலேயே மேம்பட்ட மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகளில் ஒன்று சீனா. அதனால்தான், கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களிலேயே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. இதுவே, கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவிற்குப் பதிலாக இந்தியாவில் பரவியிருந்தால், நம் நாட்டின் மக்கள்தொகையில் பாதி குறைந்திருக்கும். அந்த லட்சணத்தில் இருக்கிறது நம் நாட்டில் மருத்துவத்துறையின் செயல்பாடுகள்.

சீனாவின் மருத்துவம் மேம்பட்டதாக இருக்கக் காரணங்கள் நிறையவே உள்ளன. ஒன்று, ரோபோட் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ பணிவிடைகள் செய்வது. இதனால் நோய் பரவுவது ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. இரண்டாவது, அவர்களின் கண்காணிப்பு. தற்போது கொரோனா வைரஸ் பரவலின்போது சீனாவின் அனைத்து நகரங்களும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தேவையில்லாமல் தெருக்களில் நடமாடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்
சென்னைவாசிகளுக்கு அதிகரிக்கும் சர்க்கரை அளவு... அதிரவைக்கும் காரணம்!

அதுபோல, சீனாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்கள் அனைத்தும் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் வைரஸ் நோய்க்கு டெஸ்ட் எடுக்க புனேவைத் தவிர குறிப்பிடத் தகுந்த இடம் வேறு எங்குமே அமைக்கப்படவில்லை. இந்தியாவில் தற்போதுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களும் மிகவும் மோசமாகவே உள்ளன.

இந்நிலையில், இந்திய அரசு மாவட்ட மருத்துவமனைகளைச் செயல்படுத்துவதற்கு, தனியார் துறைகளின் பங்கையும் ஏற்றுக்கொள்ள உள்ளது. தனக்கு லாபம் எதிர்பார்க்காமல் எந்த ஒரு தனியார் துறையும் எதிலும் ஈடுபடாது. மாவட்ட மருத்துவமனைகளைச் செயல்படுத்த அரசு - தனியார் பங்களிப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை

ஆனால், கேரளாவில் செயல்படும் பொதுச் சுகாதாரத்துறை முழுவதுமாக மக்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. அதனால்தான், கொரோனா வைரஸின் பரவலை வெகு சீக்கிரத்திலேயே கட்டுப்படுத்த முடிந்தது. மேலும், நிபா வைரஸ் தாக்குதலின்போதும் அதிக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது. கேரளாவில், மக்களின் கல்விக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், அவர்களின் சுகாதாரத்திற்கும் கொடுக்கப்படுகிறது.

மேலும், அங்கு பெண் கல்விக்கு முன்னுரிமை தரப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திலும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பெருமளவில் இருக்கிறது. கேரளாவில், மருத்துவ மேம்பாட்டிற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மருத்துவமனைகள் அரசு - தனியார் பங்களிப்பில் இயங்கும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சுகாதாரத்துறை
சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

மேலும், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தைவிட, தங்களிடம் ஏற்கெனவே உள்ள காப்பீட்டுத் திட்டங்கள் மேலாக உள்ளன என்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் ஏற்கவில்லை. மொத்தத்தில், அங்குள்ள அரசியல் அமைப்பு அங்குள்ள மக்களுக்காக மட்டும் செயல்படுவதால், கேரளா சுகாதாரத்தில் மேம்பட்ட மாநிலமாக உள்ளது" என்றார் டாக்டர் சாந்தி ரவீந்திரநாத்.

அடுத்த கட்டுரைக்கு