Published:Updated:

``இறுதிப் பயணமே வாழ்ந்த வாழ்க்கைக்கான மரியாதை; ஆனால் எங்களுக்கு நேர்ந்தது..." - மருத்துவரின் கடிதம்

மருத்துவரின் கடிதம்
மருத்துவரின் கடிதம்

`கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் வீர மரணம் அடைவதை சக மருத்துவர்களான நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம்.’

அன்புச் சொந்தங்களுக்கு,

வணக்கம்.

மருத்துவம் என்ற உன்னத தொழிலைச் செய்து வரும் நான் கண்ணீரில் தோய்ந்து இப்படி ஒரு கடிதத்தை எழுத நேரிடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

doctors
doctors

கொரோனா - இந்த ஒற்றை வார்த்தைதான் உலகத்தையே சோப்புப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறது. இன்றைய தேதியில் உலகம் முழுவதும் 20 லட்சம் மக்களுக்கு மேல் இந்த நோயால் கட்டுண்டிருக்கிறார்கள். கொரோனாவுக்கு உயிரைப் பறிகொடுத்தவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர். இந்தியாவிலும் 17,000 பேருக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 500 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 2,000 பேர் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும் நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 6,53,798 பேர் உலகம் முழுவதும் நோயிலிருந்து மீண்டெழுந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றனர் என்ற நம்பிக்கை செய்தி ஒரு பக்கம் ஆறுதல் அளிக்கிறது. இவர்கள் எல்லோரும் மீண்டெழுந்தது என்பது, எங்களைப் போன்ற மருத்துவர்களாலும் மருத்துவத் துறையைச் சேர்ந்த செவிலியர்கள், பணியாளர்கள் மூலமாகவும்தானே சாத்தியமாயிற்று.

Representational image
Representational image

நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்தினருடன் வீடுகளுக்குள் வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால், நாங்களோ எங்கள் உறவுகளைப் பிரிந்து, கொஞ்சும் எங்கள் குழந்தைகளைப் பிரிந்து, வியர்வை பூத்து வழியும் கவச ஆடைக்குள் எங்கள் கண்ணீரையும் மறைத்துக்கொண்டு கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருக்கிறோம்.

கொரோனாவை நிகழ்கால உலகப்போர் என்றே சொல்லாம். எப்படி ஒரு நாட்டின் எல்லைகளில் ராணுவப் படை வீரர்கள் எதிரிகளிடம் சண்டையிட்டு நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்களோ, அதுபோல கொரோனா கிருமியிடமிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற நாங்களும் புறமுதுகிடாமல் நேருக்கு நேராகக் கொரோனாவை எதிர்த்து நின்று, இரவு பகலாகக் கடுமையாக உழைத்து வருகிறோம். இப்படி கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்கொள்வது என்பது, ராணுவ வீரர்களைவிட மிகவும் சவாலாகவும் மிகுந்த ஆபத்தாகவும்தான் இருக்கிறது.

கைதட்டுவதோ, விளக்கேற்றுவதோ, ஊக்கத்தொகையோ, இழப்பீட்டுத் தொகையோ எங்களுக்குப் பெரிதல்ல.
மருத்துவரின் கண்ணீர்க் கடிதம்
நேற்று அமெரிக்கா; இன்று நோபல் அறிஞர்..! - வுகான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதா?

உலகம் முழுவதும் 10% - 15% மருத்துவத் துறையினர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் மூன்று மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உயிரிழந்தார். கடந்த வாரம், மூத்த எலும்பியல் மருத்துவர் லட்சுமி நாராயணா, கொரானா பாதித்த நபருக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டதால் நோய்த்தொற்று தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

அடுத்ததாக, சென்னையைச் சேர்ந்த தனியார் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சைமன் ஹெர்குலீஸ் கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவைசிகிச்சை செய்தபோது அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் வீர மரணம் அடைவதை சக மருத்துவர்களான நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம். ஒரு விதை விழுவதால் முளைக்கும் மரம் பல பழங்களைத் தருவதைப்போல், ஒரு மருத்துவர் மரணிப்பதற்கு முன்பு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிக் கொடுக்கிறார். தங்கள் உயிரையும் கொடுத்து உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு மக்களாகிய நீங்கள் கொடுக்கும் பரிசுதான் எங்களைத் துயரத்தில் ஆழ்த்துகிறது.

கொரோனா
கொரோனா

இந்த மூன்று மருத்துவர்களின் இறுதிச் சடங்குகளையும் அமைதியாக நடத்தவிடாமல், நடத்தவேவிடாமல் அந்தந்தப் பகுதி மக்கள் செய்த இடையூறுகள் எங்கள் கண்களைக் குளமாக்குகின்றன. காரணம், உயிரற்ற அவர்கள் உடம்பிலிருந்து கொரோனா பரவிவிடுமோ என்ற மூடநம்பிக்கையால் எழுந்த பயம். 'உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம்' என்று சுடுகாடுகளில் எழும்பின மனிதம் வற்றிப்போன குரல்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் இறுதிப் பயணம் கௌரவமானதாக அமைவதே அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைக்கும் மரியாதையாக இருக்கும். ஆனால், கொரோனாவால் உயிரிழந்த இந்த மருத்துவர்களின் வாகனத்தைக் கல்லெறிந்து உடைக்கும் அளவுக்கு அப்படி என்ன தவறு செய்தார்கள் அவர்கள்? தன்னலம் பார்க்காமல் மருத்துவ சேவை செய்ததுதான் அவர்கள் செய்த தவறா?

Doctors death
Doctors death

மருத்துவர் ஜெயமோகனின் மரணம், இன்னொரு துயர சம்பவம். மாநிலத்திலேயே பன்னிரண்டாம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பிஎஸ் படிப்பு முடித்து, கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இரையாகாமல் மலைப்புற மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தவர் மருத்துவர் ஜெயமோகன். கொரானா தடுப்புப் பணியில் ஈடுபட்டபோது பூச்சிச்கடியால் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார். 'அவர் இறப்புக்குக் கொரோனா காரணமில்லை' என்று சான்றிதழே பெற்றபோதும், அவர் இறுதிக்காரியத்தை நடத்தவிடவில்லை மக்கள்.

கொரோனா ஒரு தொற்றுநோயாக இருந்தாலும் ஒருவர் உயிரோடு இருக்கும்போது தும்மல், இருமல் மற்றும் தொடுதல் மூலமாக மட்டுமே பரவ முடியும். இறந்த பின் அந்த உடலை சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட உறைகளால் முழுவதுமாக பாதுகாப்பாக மூடிவிடுவதால், அதன் மூலம் எந்தவிதத் தொற்று அபாயமும் ஏற்படாது. கூடுதலாக, சிதையைத் தகனம் செய்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகளே இல்லை.

Doctor
Doctor

ஆனால், இந்த உண்மையை அறியாமல், அறியாமையால் சிலர் செய்யும் அபத்தமான செயல்களால் புனிதமான தொண்டில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மனதளவில் தளர்ந்துபோயுள்ளனர். சில மருத்துவர்கள், இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்த பின்னர், ஏன்தான் மருத்துவம் படித்தோம் என்று வாய்விட்டுக் கதறி அழுகின்றனர். எத்தனையோ நோயாளிகளின் கண்ணீரைத் துடைத்த மருத்துவர்களுக்கு, இப்போது மக்கள் பரிசாகக் கொடுத்திருப்பது அதே கண்ணீரைத்தான்.

மக்களாகிய நீங்கள் ஊரடங்கில் வீட்டில் முடங்கியதுபோல, மருத்துவர்களும் முடங்கினால் நிலைமை என்னவாகும்? கொத்துக்கொத்தாக மனித சடலங்கள்தான் இந்த நிலத்தை ஆக்கிரமிக்கும். மருத்துவர்கள் கொரோனாவிடம் மட்டும் போரிடவில்லை. காசநோய், ஹெச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் தொற்று, டெங்கு, பன்றிக்காய்ச்சல் என ஒவ்வொரு தொற்றுநோய்களுடனும் நாள்தோறும் போராடிக்கொண்டேதான் இருக்கிறோம். இந்தத் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும்போது அவை மருத்துவர்களையும் தாக்கிய சோக வரலாறுகள் பல உள்ளன. தொற்றுக்கு பயந்தோ, மரணத்துக்கு பயந்தோ மருத்துவர்கள் தங்கள் சேவையை நிறுத்தியதாக எந்த வரலாறும் இல்லை.

Doctors sacrifice
Doctors sacrifice

கைதட்டுவதோ, விளக்கேற்றுவதோ, ஊக்கத்தொகையோ, இழப்பீட்டுத் தொகையோ எங்களுக்குப் பெரிதல்ல. நாங்கள் கேட்பது இரண்டே இரண்டுதான். அரசு, கொரானா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரத்துறைப் பணியாளர்களை அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டுகிறோம்.

மக்களாகிய உங்களிடம் கேட்பது, நாங்கள் உயிருடன் இருக்கும்போதும் இறக்கும்போதும் எங்களைப் பாதுகாப்பாகவும் கண்ணியத்தோடும் நடத்துங்கள் என்பதை மட்டும்தான்.

`சீன மருத்துவர் மூலம் பரவிய கொரோனா?' - மறுக்கும் தென்கொரியா; விலகாத கிம் உடல்நிலை மர்மம்
Fighting corona
Fighting corona

ஆயுதம் ஏந்திய படைவீரர்கள் நாட்டின் எல்லையில் நெஞ்சுரத்தோடு போரிட்டு எதிரிகளை வீழ்த்தி நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். அந்த வீரத்துக்கும் தியாகத்துக்கும் ஈடான நெஞ்சுரத்தோடுதான் நாங்களும் கொரோனா களப்பணிகளில் நிற்கிறோம். நாளை எங்களுக்கு என்ன ஆகும் என்று தெரியாதுதான். இருந்தாலும், நாங்கள் இருக்கும்வரை இந்தக் கொரோனா தொற்றிலிருந்து உங்களைக் காப்பாற்றும் பணியைச் செய்துகொண்டே இருப்போம்.

இப்படிக்கு

மக்களிடம் மனிதத்தைத் தேடும் ஒரு மருத்துவன்.

தொகுப்பு : ஜெனி ஃப்ரீடா

அடுத்த கட்டுரைக்கு