Published:Updated:

`கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருமே டிஸ்சார்ஜ்!' - நம்பிக்கை தரும் ஈரோடு நிலவரம்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்

ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் ஒருவர் உயிரிழக்க, மீதமுள்ள 69 பேரும் சிகிச்சை முடிந்து குணமடைந்துவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்த சமயத்தில், ஈரோடு மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசே ஈரோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. மார்ச் 31-ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் 24 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. அன்றைய தேதியில், சென்னையிலேயே 25 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நாளாக நாளாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70-ஐ தொட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

`ஒரே நாளில் 26 பேருக்குக் கொரோனா; 3-வது இடம்!’ -  அச்சத்தில் ஈரோடு மக்கள்

அந்தச் சமயத்தில், சிகிச்சையிலிருந்த 70 வயது முதியவர் உயிரிழக்க, ஈரோடு மக்களிடம் கூடுதல் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாதிப்பு மேலும் அதிகமாகக்கூடும் எனப் பயந்து கிடந்தனர். ஆனால், நிலைமையோ தலைகீழாக மாறியது. ஈரோட்டைச் சேர்ந்த 4 பேர் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்தும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவனையிலிருந்தும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 60 பேர், பல கட்டங்களாக சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியது ஈரோடு மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. மீதம் 4 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தனர்.

சிகிச்சை பெற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கலெக்டர்
சிகிச்சை பெற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கலெக்டர்

ஈரோடு மக்களுக்கு நற்செய்தியாக, மீதமிருந்த நால்வரும் சிகிச்சையில் குணமடைந்து, இன்று மாலை வீடு திரும்பவிருக்கின்றனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழக்க, மீதமுள்ள 69 பேரும் பூரணமாகக் குணமடைந்திருக்கின்றனர்.

இதனையடுத்து ஈரோட்டில் கொரோனா பாசிட்டிவ் கேஸ்களே இல்லாத நிலை உண்டாகியிருக்கிறது. இது, ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கும் ஈரோடு மக்களுக்கும் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு