Published:Updated:

அச்சுறுத்தும் கொரோனா... அரசு, நிறுவனங்கள், பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?#LetsFightCovid-19

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

விமான நிலையங்களிலேயே போதுமான அளவு கண்காணிப்பு இல்லை என்பதால் கிட்டத்தட்ட தமிழகத்தின் நிலை தற்போது 'Out of Control' என்றுதான் சொல்ல வேண்டும்.

சமூகத்தில் ஒரு கொள்ளை நோய் பரவுகிறது என்றால் அதற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களால் மட்டுமே அதற்கான தீர்வைத் தந்துவிட முடியாது. தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்து, உள்கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும். அப்போது மருத்துவர்களும் அரசும் நினைத்தால் நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த விஷயத்தில் பொதுமக்களின் பங்கும் கணிசமான அளவு உள்ளது.

Corona Virus
Corona Virus

தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள், நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மற்றும் அரசு இயந்திரங்கள் ஆகியவை எப்படிச் செயல்பட வேண்டும் என்று அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.

பொதுமக்களின் கடமை என்ன?

சுரேஷ் குமார், தொற்றுநோயியல் மருத்துவர்:

Dr.Suresh Kumar
Dr.Suresh Kumar

கொரோனா வைரஸ் தொற்று பரவும் காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்வதற்கான விஷயங்களில் எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொள்ளவும். அதில் மிகவும் அத்தியாவசியமான விஷயத்துக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். மேலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்; முடிந்தால் மொத்தமாக நிறுத்த வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் எங்கெல்லாம் சென்றிருப்பார்கள், யாருடன் தொடர்பில் இருந்திருப்பார்கள் என்பதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதால், அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் நோய்ப் பரவலைத் தடுப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
சுரேஷ் சம்பந்தம், கிஸ்ஃப்ளோ நிறுவன சி.இ.ஓ.

சமூகத்தில் பெரிய பெரிய நிகழ்வுகள் எல்லாம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுகின்றன. அதனால் பொதுமக்களும் சிறிய பார்ட்டிகள், பிறந்தநாள் விழாக்கள், கெட் டுகெதர் நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதிகம் பேர் பயன்படுத்துவதால் கால் டாக்ஸிக்களில் பயணம் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. கட்டாயம் பயணித்தே ஆக வேண்டும் என்றால் வாகனத்தில் ஏ.சியைப் பயன்படுத்தாமல், ஜன்னல்களைத் திறந்து வைத்துப் பயணிக்கலாம்.

Travel
Travel

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையும் சில காலம் நிறுத்தி வைப்பது நல்லது. ஆன்லைனில் ஆர்டர் செய்து அந்தப் பொருள்களை டெலிவரி செய்யும் நபர்கள் பல இடங்களுக்குப் பயணிப்பார்கள். பல நபர்களுடன் தொடர்பிலிருந்திருப்பார்கள். இவையெல்லாம் நோய் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். தவிர்க்க முடியாத பட்சத்தில் உணவை ஆர்டர் செய்தால், டெலிவரி கொண்டு வரும் நபரையே அந்த கவரைப் பிரித்துத்தரச் சொல்லி, கவருக்குள் கையைவிட்டு உணவுப் பொட்டலத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

online shopping
online shopping

முதலில் கைகழுவிவிட்டு சாப்பாட்டு பொட்டலத்தைப் பிரிப்பதற்கு பதில், உணவைத் தட்டுக்கு மாற்றியபிறகு கைகழுவிவிட்டுச் சாப்பிடுவது நல்லது. சைவம், அசைவம் என எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். பச்சையான காய்கறிகளில் தயாரிக்கும் சாலட் போன்வற்றைத் தவிர்த்துவிடலாம். கடைகளிலிருந்து வெட்டிய, உரித்த காய்கறிகள், பழங்களை வாங்கிச் சாப்பிட வேண்டாம்.

நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?

சுரேஷ் சம்பந்தம், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி:

Suresh sambandam
Suresh sambandam

கொரோனா பரவுவதைத் தடுக்க சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான் (Social distancing) சிறந்த தீர்வு என்று கூறுகின்றனர். அதனால் எங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையை அமல்படுத்தியிருக்கிறோம். அடுத்த கட்டமாக ஊழியர்களுக்கு 10 நாள்கள் விடுப்பு கொடுத்துவிடலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம். இந்த விடுமுறை நாள்களை ஈடுசெய்ய கொரோனா தீவிரம் குறைந்ததும் பத்து வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் பணியாற்றலாமா என்றும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம்.

தற்போது காலையில் 10 மணியளவில் வீடியோ கான்ஃபிரென்சிங் மூலம் அன்றைய தினம் என்னென்ன வேலைகளைச் செய்யப் போகிறார்கள் என்பதை ஆலோசித்துவிடுவோம். மாலை 6 மணியளவில் மீண்டும் வீடியோ கான்ஃபிரென்சிங் மூலம் என்னென்ன வேலைகள் முடிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிய விவரங்களைப் பெற்றுவிடுவோம்.

Corporate companies
Corporate companies

ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுவதிலும் வீட்டிலிருந்து பணியாற்றுவதிலும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். நிறுவனத்திலும் பொருளாதார நிலைமைகளில் பாதிப்பு ஏற்படும். பத்து நாள்கள் வருவாயைக் கருத்தில்கொண்டு ஊழியர்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்து வேலை செய்ய வைத்தால் 100 நாள்களுக்கு அதனால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியது வரும்.

அதனால் இந்த நேரத்தில் நோய்ப் பரவலைத் தடுப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் விற்பனை இலக்குக்கெல்லாம் சிறிது தளர்வு கொடுக்கலாம் என்றிருக்கிறோம். ஊழியர்கள் இலக்கை எட்ட இயலாவிட்டாலும் அவர்களுக்கு 50 சதவிகிதம் ஊக்கத்தொகை வழங்கலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறோம்.

Goals
Goals

ஊழியர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். காரணம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி பயணம் செய்வதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் ஊழியர்களின் பெற்றோர்களும் வயதானவர்களாக இருப்பார்கள். அவர்களையும் நோய்ப் பரவலில் இருந்து பாதுகாக்க வேண்டும். இதுதவிர, பார்ட்டி, ஷாப்பிங், சினிமா தியேட்டர்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். இது போன்ற நடவடிக்கைகளைப் பிற நிறுவனங்களும் பின்பற்றினால் நோய் பரவாமல் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க முடியும்.

அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திராத், சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்

Dr.G.R.Ravindranath
Dr.G.R.Ravindranath

கொரோனா பாதித்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களைத் தனிமைப்படுத்தி 14 நாள்கள் கண்காணிக்க வேண்டும். தற்போது வெளிநாட்டுப் பயணிகளில் அறிகுறிகள் இல்லாதவர்களை விட்டுவிடுகிறார்கள். காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்ட முதல் நோயாளியின் விஷயத்தில் நடந்தது இதுதான். விமான நிலையப் பரிசோதனையில் அறிகுறிகள் தென்படாததால் அவரை அனுப்பிவிட்டார்கள். பின்னர்தான் நோய் உறுதிசெய்யப்பட்டது. இதனால் அறிகுறிகள் இல்லாதவர்கள் மேலும் கண்காணிப்பைத் தீவிரமாக்க வேண்டும்.

Quarantine
Quarantine

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் ஆய்வகங்கள் 51 உள்ளன. அவற்றின் திறனில் வெறும் 1.6 சதவிகிதத்தை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் சென்னை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே நோய் பரிசோதனை செய்யும் மையங்கள் உள்ளன. ஆனால் வெறும் 150 பேருக்குத்தான் கொரோனா வைரஸுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது அரசு.

தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய அனுமதி அளித்தால் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளியில் தெரிந்துவிடும் என்பதால் அதை மறைக்கிறது அரசு. அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்குச் செல்வோரின் கணிசமான எண்ணிக்கையிலானோரை பரிசோதனை செய்யாமலேயே அனுப்பிவிடுகின்றனர்.

Corona outfit
Corona outfit

அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுக்காக 300 படுக்கைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இவை போதவே போதாது. எனவே, உண்மை நிலவரத்தை மக்களுக்கு அறிவித்து, நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை, சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான கவச ஆடைகள், கையுறைகளும் போதுமான அளவில் இல்லை. ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வாங்கி வைத்துள்ள கவச ஆடைகளைத்தான் இதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, போதுமான அளவில் உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்குக் கொரோனா வைரஸைக் கையாளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். சீனாவில் நோய் கட்டுப்படுத்தப்பட்டு, நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோயைக் கட்டுப்படுத்துவதில் சீன மருத்துவர்களின் அனுபவத்தைக் கேட்டு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Corona
Corona

மாநிலத்தின் எல்லைப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குள் எந்தப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி வந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். விமான நிலையங்களிலேயே போதுமான அளவு கண்காணிப்பு இல்லை என்பதால் கிட்டத்தட்ட தமிழகத்தின் நிலை தற்போது 'Out of Control' என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு