Published:Updated:

கொரோனாவால் இந்தியாவில் இறந்தது 4.8 லட்சம் பேரா, 47 லட்சம் பேரா? | Fact Check

கொரோனா மரணம்

ஏற்கெனவே தடுப்பூசிகளை அங்கீகரிப்பது தொடர்பான விஷயத்தில் இந்திய அரசுக்கும் WHO அமைப்புக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டது. கொரோனா மரணக் கணக்கு விவகாரத்தில் அந்த மோதல் இன்னும் அதிகமாகியுள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் இறந்தது 4.8 லட்சம் பேரா, 47 லட்சம் பேரா? | Fact Check

ஏற்கெனவே தடுப்பூசிகளை அங்கீகரிப்பது தொடர்பான விஷயத்தில் இந்திய அரசுக்கும் WHO அமைப்புக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டது. கொரோனா மரணக் கணக்கு விவகாரத்தில் அந்த மோதல் இன்னும் அதிகமாகியுள்ளது.

Published:Updated:
கொரோனா மரணம்
"அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் மோடி பொய் சொல்வார். மத்திய அரசு கணக்குக் காட்டுவது போல கொரோனாவுக்கு இந்தியாவில் 4.8 லட்சம் பேர் மட்டும் இறக்கவில்லை. 47 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கும் குடும்பங்களுக்கு மரியாதை கொடுங்கள். ஒவ்வொரு மரணத்துக்கும் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குங்கள்."
ராகுல் காந்தி
இப்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கொரோனாவுக்கு உண்மையிலேயே இறந்தவர்கள் எத்தனை பேர்? யாருக்குமே விடை தெரியாத இந்தக் கேள்விக்கு விடை தேட முயன்றது உலக சுகாதார நிறுவனம் (WHO). இதுதொடர்பாக அந்த அமைப்பு மே 5-ம் தேதி வெளியிட்ட ஒரு கணக்கை, உலகின் பல நாடுகள் எதிர்க்கின்றன, நிராகரித்துள்ளன. இந்தியா அதில் முதல் வரிசையில் நிற்கிறது. அந்த WHO கணக்கை வைத்தே மோடி அரசை சாடியிருக்கிறார் ராகுல் காந்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் காந்தி - மோடி
ராகுல் காந்தி - மோடி

'உண்மையில் அரசு சொன்ன கணக்கைவிட 10 மடங்கு அதிகம் பேர் இந்தியாவில் இறந்திருக்கிறார்கள். உலகிலேயே அதிக அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியது இந்தியாதான்' என்கிறது WHO.

ஒரு நூற்றாண்டில் உலகம் சந்தித்திருக்காத பெருந்தொற்றாக 2020 துவக்கத்தில் பரவியது கொரோனா. அப்போது முதல் 2021 டிசம்பர் வரை கொரோனாவின் விளைவால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதே WHO வெளியிட்டுள்ள கணக்கு. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து 'கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 54 லட்சத்து 20 ஆயிரம்' என்று அறிவித்திருக்கும் நிலையில், 'உண்மையில் கொரோனாவுக்கு ஒரு கோடியே 49 லட்சம் ஏர் இறந்திருக்கலாம்' என கணக்கு சொல்கிறது WHO. கிட்டத்தட்ட ஒரு கோடி கூடுதல் மரணங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக இந்தியாவில்தான் மரணங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்துக் காட்டப்பட்டதாகச் சொல்கிறது WHO. 2020 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான இரண்டு ஆண்டு காலத்தில் 4 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் இறந்திருப்பதாக மத்திய அரசு புள்ளிவிவரம் தருகிறது. ஆனால், "இந்தியாவில் கொரோனாவின் விளைவுகளால் இந்தக் காலத்தில் சராசரியாக 33 லட்சத்திலிருந்து 65 லட்சம் பேர் வரை இறந்திருக்கக்கூடும். எங்கள் கணக்கீடுகள்படி, 47 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம்" என்கிறார் WHO புள்ளிவிவரப் பிரிவின் தலைவரான சமீரா அஸ்மா.

கொரோனா தொற்று இல்லாத முந்தைய ஆண்டுகளின் இறப்புக் கணக்கு, இப்போது அது எவ்வளவு அதிகமாகியிருக்கிறது, கொரோனா ஊரடங்கு காரணமாக தவிர்க்கப்பட்ட விபத்து மரணங்கள் போன்ற விஷயங்களை வைத்தே WHO இந்தக் கணக்கைப் போட்டது. கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை மட்டுமே இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கொரோனா காரணமாக சிகிச்சை பெற முடியாத சூழலில் இறந்த புற்றுநோயாளிகள், உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாமல் இறந்த இதயநோயாளிகள் என்று கொரோனாவின் மறைமுக பாதிப்பால் இறந்தவர்களையும் கொரோனா மரணமாகவே கருதியது WHO. ஒட்டுமொத்த பாதிப்பைக் கணக்கிட்டே இந்த எண்ணிக்கையை வரையறுத்ததாகக் கூறுகிறது WHO.

சமீரா அஸ்மா
சமீரா அஸ்மா
"துயரச்சூழல் காரணமாக அற்ப ஆயுளில் மறைந்தவர்களின் உயிரை நாம் மதிக்க வேண்டும். உண்மையை அறிந்துகொள்வதன் மூலமே எதிர்காலத்தில் நாம் சரியாக கொள்கைகளை வகுத்து திட்டங்களை அமல்படுத்த முடியும்."
என்கிறார் WHO-வின் சமீரா அஸ்மா
"பெருந்தொற்றின் தாக்கம் எப்படி இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள இந்தக் கணக்கு உதவும். ஒவ்வொரு நாடும் தங்கள் சுகாதாரக் கட்டமைப்புக்கு இன்னும் அதிக நிதி ஒதுக்கி எப்படி வலுப்படுத்த வேண்டும் என்பதை உணர இது பயன்படும்."
என்கிறார் WHO தலைவர் டெட்ராஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

WHO வெளியிட்ட இந்தக் கணக்கை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தியாவின் கோவிட் வொர்க்கிங் குரூப் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா அதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்.

* உலகின் பல நாடுகளில் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வது துல்லியமாக இல்லை. ஆனால், இந்தியா இந்த விஷயத்தில் பெருமளவு முன்னேறிவிட்டது. இந்தியாவில் 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையைவிட 2018-ல் பதிவு செய்யப்பட்டது ஐந்து லட்சம் அதிகம். 2018-ம் ஆண்டைவிட 2019-ல் பதிவானது ஏழு லட்சம் அதிகம். 2019-ம் ஆண்டைவிட 2020-ல் பதிவான மரணங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் அதிகம். மரணங்களைப் பதிவு செய்வது இந்தியாவில் அதிகரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. இப்போது இந்தியாவில் நிகழும் சுமார் 98-99 சதவிகித மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, இந்தியா சொல்லும் கணக்கு சரி. WHO சொல்லும் அளவுக்கு மரணங்கள் இந்தியாவில் நிகழ வாய்ப்பே இல்லை.

WHO - உலக சுகாதார நிறுவனம்
WHO - உலக சுகாதார நிறுவனம்

* கொரோனா மரணங்கள் கணக்கில் 15 முதல் 20 சதவிகித அளவுக்கு வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஏனெனில், கொரோனா காலத்தில் நிகழ்ந்த இதர நோய் மரணங்களையும் 'கொரோனா கட்டுப்பாடுகளால் சிகிச்சை எடுக்க முடியாமல் நேர்ந்த மரணம்' என்று கணக்குக் காட்டுகிறது WHO. ஆனால், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் 30 நாள்களுக்குள் இறந்தால் மட்டுமே அதைக் கொரோனா மரணமாகக் கருதுகிறது இந்தியா. எனவே, சிறிய அளவில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், 10 மடங்கு அதிகம் என்பது பொய்.

* எந்தப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதை WHO கணக்கிடுகிறது எனக் கடந்த நான்கைந்து மாதங்களில் 10 முறை கடிதம் எழுதி இந்தியா கேட்டது. எதற்கும் சரியான விளக்கங்கள் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக நடந்த கூட்டங்களில் மூன்று முறை இந்தியா ஆட்சேபனை தெரிவிக்க முயன்றது. ஆனால், ஒருமுறை மட்டுமே இந்தியாவின் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பு தரப்பட்டது. அதையும் WHO பொருட்படுத்தவில்லை.

* போர்ச்சூழல் இருக்கும் இராக் போன்ற நாடுகளில் பிறப்பு, இறப்பு பதிவுகளைச் செய்வதே சாத்தியமில்லை. அதுபோன்ற நாடுகளை முதல் பிரிவில் வைத்தது WHO. சில நாடுகளில் அறியாமை காரணமாக பிறப்பு, இறப்புகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அதுபோன்ற நாடுகளை இரண்டாவது பிரிவில் வைத்தது WHO. இந்தியாவை இந்த இரண்டாவது பிரிவில் சேர்த்து கணக்குகள் போட்டது WHO. இதையும் இந்தியா எதிர்த்தது. 'கிட்டத்தட்ட 98 முதல் 99 சதவிகிதம் மரணங்கள் பதிவு செய்யப்படும் நாட்டை ஏன் இந்தப் பிரிவில் சேர்க்கிறீர்கள், எங்கள் பதிவாளர் ஜெனரலிடம் இருக்கும் பதிவு விவரங்களைக் கணக்கிடலாமே' என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

பல்ராம் பார்கவா
பல்ராம் பார்கவா

WHO அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவா, டெல்லி எய்ம்ஸ் தலைவர் ரண்தீப் குலேரியா போன்றோர் அதை விமர்சனம் செய்தார்கள்.

"இந்தியாவின் 17 மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், சில மீடியாக்கள் ஆர்.டி.ஐ மூலம் பெற்ற புள்ளிவிவரங்கள், இணையதளங்களில் வெளியான தகவல்கள் ஆகியவற்றை வைத்தே இந்தக் கணக்கைப் போட்டதாக WHO சொன்னது. இப்படி ஆதாரமற்ற தகவல்களை வைத்து கணக்கு போட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தோம். கடந்த நவம்பரில் '13 லட்சம் கூடுதல் மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்தன' என்றார்கள். 15 நாள்களுக்குப் பிறகு அதை '33 லட்சம்' என்றார்கள். எப்படி இவ்வளவு வித்தியாசம் வருகிறது என்று கேட்டபோது தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. கடைசியில் '10 மடங்கு அதிக மரணம்' என்று அறிக்கை தருகிறார்கள்" என்கிறார் மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் பாதிப்புகளும் மரணங்களும் வெவ்வேறு விதமாக இருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பு கொண்ட ஒரு தேசத்தில், சில பகுதிகளில் நடந்ததை மட்டும் வைத்து ஒட்டுமொத்த நாட்டுக்கும் கணக்கு போடுவது அபத்தமாக இருக்கும் என்ற வாதத்தையும் WHO கேட்கவில்லை என்பது மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆதங்கம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
ஏற்கெனவே தடுப்பூசிகளை அங்கீகரிப்பது தொடர்பான விஷயத்தில் இந்திய அரசுக்கும் WHO அமைப்புக்கும் பஞ்சாயத்து ஏற்பட்டது. கொரோனா மரணக் கணக்கு விவகாரத்தில் அந்த மோதல் இன்னும் அதிகமாகியுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து பிறப்பு, இறப்புப் பதிவுகளை சேகரித்து ஒட்டுமொத்தமாகத் தொகுப்பது இந்தியாவில் சீக்கிரம் நடப்பதில்லை. 2020-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களே சில நாள்களுக்கு முன்புதான் வெளியானது. சரியான புள்ளிவிவரங்களை உரிய நேரத்தில் இந்தியா அளித்திருந்தால் இந்தச் சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism