Election bannerElection banner
Published:Updated:

ஆக்ஸிஜன் கேட்டதால் கிரிமினல் வழக்கு... உத்தரப்பிரதேசத்தில் இப்படியும் ஓர் அட்டூழியம்!

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஷஷாங்க் முதலில் தன்னுடைய தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் உதவி தேவையென்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் பாலிவுட் நடிகர் சோனு சூட் டேக் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி ட்விட்டரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷஷாங்க் யாதவ் என்பவர் தன் தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் உதவுமாறும் பதிவிட்டிருந்தார். தன்னுடைய தாத்தாவுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், உதவி வேண்டுமென்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அமேதி நகரத்தைச் சேர்ந்த காவல்துறையினர், பொய்யான வதந்தியைப் பரப்பி, மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் விளைவிப்பதாகக் குற்றம்சாட்டி, ஷஷாங்க் மீது கிரிமினல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அதைப் பற்றிப் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் விரேந்த்ர சிங், ``ஷஷாங்க் யாதவ் உத்தரப் பிரதேச அரசைக் குறி வைத்து, ஆக்ஸிஜன் விநியோகம் பற்றியும் கொரோனா தொற்று பற்றியும் பொய்யான வதந்திகளைப் பரப்பியுள்ளார். விசாரணையின்போது, இவருடைய பொய்யான ட்வீட் காரணமாக, பலரும் அரசின் மீது குற்றம் சாட்டத் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது" என்று கூறினார்.

ஷஷாங்க் முதலில் தன் தாத்தாவுக்கு உதவுமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் பாலிவுட் நடிகர் சோனு சூட் டேக் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த ட்வீட்டை ஷஷாங்க்கின் நண்பர் தி வயர் இதழில் பணிபுரியும் அர்ஃபா கானும் ஷெர்வானி என்ற பத்திரிகையாளரிடம் காட்டி உதவி கேட்கவே, ஷெர்வானியும் ஷஷாங்கின் தாத்தாவுக்கு உதவி கேட்டு, மத்திய அமைச்சர் மற்றும் அமேதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானியையும் டேக் செய்து ட்வீட் போட்டிருந்தார்.

ஆனால், இதில் எந்தப் பதிவிலுமே அவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. இது நடந்து அடுத்த 30 நிமிடங்களில் ஸ்மிருதி இரானி, ஷஷாங்க் எண்ணுக்குப் பலமுறை அழைத்ததாகவும் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் கூறியதோடு, மாவட்ட நீதிபதி மற்றும் அமெத்தி காவல்துறையிடம் இதைக் கவனிக்குமாறு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் அவருடைய தாத்தா உயிரிழந்துவிட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா பேரிடர் காலகட்டத்தில், மக்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்பும் வகையிலான பதிவுகளை இடுவது குற்றம் என்று அமேதி காவல்துறை தெரிவித்துள்ளது. கோவிட் சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது உண்மைதான். ஆனால், அந்த ஒரு நோய் மட்டும்தான் இப்போது கவனிக்கப்பட வேண்டியது என்ற போக்கு ஆபத்தானது. மற்ற நோயாளிகளுக்குத் தேவையானவையும் செய்துதரப்பட வேண்டும். அந்த விஷயத்தில் அமேதி மாவட்ட நிர்வாகம் தோற்றுவிட்டது. அதன்விளைவாக ஷஷாங்கின் தாத்தா உயிரையும் இழக்க நேரிட்டது.

ஏப்ரல் 24-ம் தேதியன்று, பத்திரிகையாளர்களிடம் உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ஸிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, ஷஷாங்க் ட்விட்டரில் ஆக்ஸிஜன் தேவையென்று உதவி கேட்டதும் காவல்துறையினர் அதற்காக அவரைக் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு