Published:Updated:

`10 நாள்கள்; பல்வேறு நிகழ்ச்சிகள்!’ - சேலத்தில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று

மருத்துவமனை
மருத்துவமனை ( எம். விஜயகுமார் )

சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

''சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேர் சேர்க்கப்பட்டு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் 5 மசூதிகளில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தவர்கள். அப்படி வருகை தந்திருக்கும் மற்ற நபர்களும் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்புகொண்டு தங்களின் விபரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்'' என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

மசூதி
மசூதி

இந்தோனேசியாவில் இருந்து சேலத்திற்கு வந்த 4 மத போதகர்கள் மற்றும் கைடு ஒருவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் விபரம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 11-ம் தேதி இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 இஸ்லாமிய உலமாக்கள் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரை அழைத்துக்கொண்டு 12-ம் தேதி சேலத்திற்கு வந்தனர். 12-ம் தேதி சேலம் சூரமங்கலம் ரகமத் நகரில் உள்ள மசூதியில் மதப் போதனை செய்துள்ளனர். 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் மசூதியிலும், 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அம்மாப்பேட்டையில் உள்ள ஷேக் உமர் மசூதியிலும், 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சந்நியாசிக்குண்டு பகுதியில் உள்ள புஹாரியா மசூதியிலும், 22-ம் தேதி கிச்சிப்பாளையத்தில் உள்ள ஜனத்தூள் பிரதோஷ மசூதி எனப் சேலத்தில் 10 நாள்கள் தங்கியிருந்து 5 மசூதிகளில் மதப் போதனை செய்து வந்துள்ளனர்.

பரிசோதனை
பரிசோதனை

இதையடுத்து கடந்த 22-ம் தேதி காவல்துறைக்கு ரகசிய தகவல் சென்றதையடுத்து 11 உலமாக்கள், 1 வழி காட்டி, அவர்களோடு இருந்த 4 பேர் என 16 பேரை காவல்துறையினரும் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து வந்து சேலம் அரசு மருத்துவமனையில் தனி வார்ட்டில் சேர்த்தனர். பிறகு அவர்களுக்குச் சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 4 உலமாக்கள் மற்றும் 1 கைடு என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,``சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேர் சேர்க்கப்பட்டு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் 5 மசூதிகளில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்திருந்த அனைத்து நபர்களும் தாமாக முன்வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதார பணி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் 0427 2450022, 0427 2450023, 0247 2450498 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களின் விபரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தியுள்ளார்.

தூய்மை பணி
தூய்மை பணி

இஸ்லாமிய உலமாக்கள் 10 நாள்களாகத் தங்கியிருந்த 5 மசூதிகள், மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகள், அவர்கள் சென்ற இடங்கள் முழுவதும் அறியப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு