எலுமிச்சை சாறு, கபசுரக் குடிநீர், புதினா சோறு... கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?

களப்பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும் தினமும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலகர்களுக்கு ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவை நேற்று முதல் வழங்கப்படுகின்றன. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருந்துப் பணிகள் கழகத்தின் மாவட்டக் கிடங்குகளிலிருந்து இம்மருந்துகள் உடனடியாக அந்தந்தத் துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, களத்தில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் அடுத்த 10 நாள்களுக்கு தினமும் இம்மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

களப்பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு, மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும் தினமும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
``கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுதான் இப்போதுள்ள மருத்துவ நடைமுறை. இதற்கு தேவைப்படும் உணவுகளைத் தினந்தோறும் வழங்குகிறோம். காலை 7 மணிக்கெல்லாம் காபி, பிஸ்கட் அளிக்கப்படுகிறது. 8.30 மணிக்கு காலை உணவாக இட்லி சாம்பார் அளிக்கின்றோம். அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள்ளேயே வாக்கிங் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 10 மணிக்கெல்லாம் 60 மில்லி கபசுர குடிநீர் கொடுக்கப்படுகிறது. இதை அவசியம் அனைத்து நோயாளிகளும் பருக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக காலை 11 மணியளவில் எலுமிச்சம் பழத்தின் தோல், இஞ்சி இரண்டையும் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி தேவையான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்த சாறு பருகக் கொடுக்கிறோம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. இத்துடன் சிறிதளவு வேகவைத்த கொண்டக்கடலை, சுண்டல், வேர்க்கடலையும் கொடுக்கப்படுகிறது.
மதியம் 1 மணியளவில், வெள்ளை சாதம், சாம்பார், மல்லி ரசம், தயிர், பொரியல், ஒரு முட்டை மதிய உணவாக வழங்கப்படுகிறது. நோயாளிகளின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒருநாள் விட்டு ஒருநாள் காரக் குழம்பும் வழங்குகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நோயாளிகளுக்கு பிரத்யேகமாகப் புதினா சோறு அளிக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கெல்லாம் காபி, மூன்று பிஸ்கட் வந்துவிடும். நோயாளிகள் அவர்களது மொபைலை உடன் வைத்துக்கொள்ளலாம். இதில் பலர் செய்திகள் பார்ப்பதுடன், படம் பார்த்து பொழுதைக் கழித்துக்கொள்கிறார்கள். இரவு 7 மணியளவில் ஒரு பூவன் வாழைப்பழம் எல்லா நோயாளிகளுக்கும் வழங்கப்படுகிறது.

இரவு உணவாக வெள்ளை சாதம், ஒரு கூட்டு, பூண்டு மல்லி ரசம், சாம்பார் வழங்கப்படுகிறது. இரவு 10 மணியளவில் அனைவருக்கும் 50 மில்லி பூண்டு கலந்த பால் பருக கொடுக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது எட்டு முதல் 14 நாள்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த பின்னரும் 14 நாள்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மீண்டும் சோதனை நடத்தப்படும். வைரஸின் தாக்கம் ஏதுமில்லை என்பது தெரிந்தவுடன் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்” என்றனர்.
இதுபோக, கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்தால் மேற்கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது; இல்லையெனில், இயல்பு வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான உணவையும் அரசே வழங்குகிறது. காலையில் உப்புமா அல்லது பொங்கல், மதியம் சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு. இரவு சப்பாத்தி உணவாக வழங்கப்படுகிறது. ஒருவேளை மட்டும் கபசுரக் குடிநீர் பருகக் கொடுக்கப்படுகிறது.

மாவட்டத் தலைநகரிலுள்ள ஒவ்வோர் அரசு தலைமை மருத்துவமனையிலும் டெண்டர் எடுத்து உணவு சப்ளை செய்பவர்களிடம்தான் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான உணவை தயாரிக்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அம்மா உணவக சமையலர்கள் மூலமாகவும் சமைத்து வழங்கப்படுகிறது.