Election bannerElection banner
Published:Updated:

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி? - முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கருத்து!

விஜயபாஸ்கர் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - ஹெச்.வி.ஹண்டே
விஜயபாஸ்கர் - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - ஹெச்.வி.ஹண்டே

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் செய்தவை என்ன, செய்யாதவை என்ன என்பது பற்றி முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

21 நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு உட்பட வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் பாராட்டுகள் குவிந்தாலும், ‘எல்லாமே தாமதமான நடவடிக்கைகள்’ என்ற குற்றச்சாட்டுகளும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகிவிட்டார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் செய்தவை என்ன, செய்யாதவை என்ன என்பது பற்றி முன்னாள் இந்நாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ( தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் 2006-11)

''முதல்வரும், அமைச்சரும் பல விஷயங்களை மறைத்துவிட்டார்கள்'' எனத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறீர்கள், அப்படி மறைக்கப்பட்ட விஷயம்தான் என்ன?’’

''இதுவரை கொரோனா வைரஸ்க்குத் தமிழகத்தில் 35 பேர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையான தகவலாக இருக்க வாய்ப்பில்லை. பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது. பாதிப்பு இனிமேல்தான் வெளியில் தெரியவரும். மத்திய மாநில அரசுகள் கவனக்குறைவாக இருந்துவிட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே முடுக்கி விட்டிருக்க வேண்டும்.''

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

‘‘அரசு செய்யத் தவறிய விஷயங்களாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?’’

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லை. அதனால், வந்தபிறகு சரிசெய்வது மிகவும் சிக்கலான விஷயம். வெளிநாட்டில் பரவ ஆரம்பித்தபோதே உஷாராயிருந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இங்கு யாரையும் அனுமதித்திருக்கவே கூடாது. மாநில எல்லைகளையும் முன்பே மூடியிருக்கவேண்டும். ஊரடங்கு உத்தரவை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்திருக்கவேண்டும். சட்டமன்றக் கூட்டத்தொடரை நிறுத்தச் சொல்லி, கோரிக்கை வைத்த பிறகும் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். கூட்டத்தொடரை ஒத்தி வைத்திருந்தால், சட்டமன்றத்தையே மூடிவிட்டார்கள் என மக்களுக்கு ஒரு அச்சம் வந்திருக்கும். வைரஸ் பரவவில்லை கட்டுக்குள் இருக்கிறது என்று கடந்த வாரம் சனிக்கிழமை வரை சட்டமன்றத்தில் அமைச்சரும் முதலமைச்சரும் சொல்லிவந்தார்கள். திடீரென, செவ்வாய்க்கிழமை ( 24.3.2020) வேகமாகப் பரவுகிறது எனச் சொல்கிறார்கள்.

சட்டமன்றத்தில் அவர்கள் கொடுத்த நம்பிக்கைதான் மக்களுக்கு வைரஸின் தீவிரத்தன்மை புரியாமல் போனதற்குக் காரணம். ஊரடங்கு உத்தரவு அறிவித்த பிறகுதான் மக்களுக்கு ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அதேபோல. கீழ்மட்டத்தில் களப்பணிகள் சுத்தமாக நடைபெறவில்லை. உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். அந்த ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது, பன்றிக்காய்ச்சல் பரவியது. ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மீட்டிங் போட்டு ஆலோசனை செய்தேன். லேப்களை அதிகமாக்கினேன். இப்போது ஃபீல்ட் வொர்க் என்பதே சுத்தமாக இல்லை. மாவட்ட ஆட்சியர்கள்தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

”இனி என்ன செய்யவேண்டும்?’’

‘‘தமிழக அரசு மருத்துவமனைகளில் மொத்தமாகவே 1,000 வென்டிலேட்டர் கருவிகள்தான் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அரசு மருத்துவமனைகளிலேயே அனைவரும் கூடினால் அதுவும் ஆபத்துதான்.’’

ஹெச்.வி.ஹண்டே (சுகாதாரத்துறை அமைச்சர் 1980-86)

‘‘கொரோனா விஷயத்தில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

''பல வளர்ந்த நாடுகளே கோட்டைவிட்டபோதும், பிரதமர் மோடியும் அனைத்து மாநில முதல்வர்களும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வைரஸ் பாதிப்பிலிருந்து மிகப்பெரிய அழிவில்லாமல் மக்களைக் காப்பாற்றிவிட்டார்கள். அதிலும் தமிழக அரசு மிகச்சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் என்னைவிடவும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால், மூன்று வார ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நிதியுதவி செய்யவேண்டும்’’

ஹெச்.வி.ஹண்டே
ஹெச்.வி.ஹண்டே

''நிலைமை இப்போது கையை மீறிப்போய்விட்டது, ஊரடங்கு உத்தரவை முன்பே அறிவித்திருக்க வேண்டும்'' என்று சொல்லப்படுகிறதே?’’

'' எல்லா நாடுகளுமே சிறிது நாள்கள் கழித்து, பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தன. நம் பிரதமரும் அதைத்தான் செய்திருக்கிறார். முன்பே, அறிவித்திருக்கலாம். ஆனால், அதையும் அரசியலாக்கியிருப்பார்கள். ஏன், சி.ஏ.ஏ போன்ற விவகாரங்களை மடைமாற்றத்தான் மோடி கொரோனா பீதியைக் கிளப்புகிறார் என மம்தா பானர்ஜி சொன்னாரே... மோடி என்ன செய்தாலும் அதை விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதுதான் சரியான தருணம்’’

‘‘வென்டிலேட்டர் போன்ற கருவிகள் நமக்கே பற்றாக்குறையாக இருக்கும்போது கடந்த 24-ம் தேதி வரை ஏற்றுமதி செய்யப்பட்டது தவறு'' என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?’’

'' வென்டிலேட்டர் தயாரிப்பு என்பது நம் நாட்டில் மிகக்குறைவு. நாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துதான் பயன்படுத்திவருகிறோம். அதனால், இது போன்ற குற்றச்சாட்டுகள் தேவையற்றவை. நாம் இப்போது அதிகமாக இறக்குமதி செய்து வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை பாதிப்பு அதிகமானால் நமக்குப் பயன்படும். தற்போதைய பாதிப்புக்கு, நம்மிடம் இருக்கும் வென்டிலேட்டர்களே போதுமானது. ''

`அமெரிக்க ராணுவ லேப்; வுகானுக்கு எடுத்துவந்த வீரர்!’ -அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சீனா #Corona
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தும், கொரோனா தடுப்பு மருத்துவ நடவடிக்கைகளில் பிஸியாக இருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுவரை பொதுவாக அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்த விஷயங்களை வாசகர்களுக்காகத் தொகுத்திருக்கிறோம்:

‘‘வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரையும் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. விமான நிலையங்களில் 29,284 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 15,298 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து வந்த 43 பயணிகள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 1039 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் 933 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. 80 பேருடைய மாதிரிகள் இன்னும் பரிசோதனை நிலையில் உள்ளன.

ரிஸ்க் கன்டிஷனில் இருப்பவர்களை மட்டும்தான் அரசுக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். பலருக்கு வெளிநாட்டிலிருந்து, இங்கே ஏர்போர்ட்டில் இறங்கும்போது அறிகுறி தெரியாது. ஆனால், அவர்களின் உடலில் வைரஸ் தங்கியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அதனால்தான், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரையும் 14 நாள்கள் அவர்களின் வீட்டில் தனித்திருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறோம். தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களில், பெரும்பாலும் கணவனிடமிருந்து மனைவிக்கு, மகனிடமிருந்து அம்மாவுக்கு என்றுதான் பரவியிருக்கிறது. அதனால் அவர்களின் வீட்டிலும் தனியாகத்தான் இருக்கவேண்டும். வெளியிலும் வரக்கூடாது என அறிவுறுதியுள்ளோம். அவர்களின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியும் கண்காணித்து வருகிறோம், ஆனால் அதையும் மீறி பலர் வெளியில் செல்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அரசின் உத்தரவையும் மீறி அப்படி நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’’

கொரோனா தடுப்பு நடவடிகைகள் குறித்து மத்திய அமைச்சருடன் அலோசனை
கொரோனா தடுப்பு நடவடிகைகள் குறித்து மத்திய அமைச்சருடன் அலோசனை

‘‘இந்தச் சூழலை எதிர்கொள்ள தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?’’

‘‘தமிழக அரசு மருத்துவமனைகளில் 10,158 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் 350 படுக்கைகளுடன் தனி மருத்துவமனை 27.3.2020 முதல் செயல்பட இருக்கிறது. 225 சாதாரண படுக்கைகளும், தீவிர சிகிச்சைக்கு 125 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 125 படுக்கைகளில் 60 படுக்கைகள் அதி தீவிர சிகிச்சைக்காக ஒதுக்கப்படும். சிறப்பு மருத்துவமனையில் 40 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 178 டாக்டர்கள், 192 நர்ஸ்கள், 80 மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்கள், 150 சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த மருத்துவமனையில் பணிபுரிவார்கள். 24 மணி நேரமும் செயல்படும் பரிசோதனைக் கூடமும் அங்கு இருக்கும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாகப் பரிசோதனை மையம் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை, தேனி, திருநெல்வேலி, சேலம், திருவாரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. அந்தவகையில், தமிழகத்தில் செயல்படும் எட்டாவது கொரோனா ஆய்வு மையம் இது. புதிதாக 100 ஆம்புலன்ஸுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நம்மிடம் மொத்தம் 2,464 வென்டிலேட்டர் கருவிகள் இருக்கின்றன. புதிதாக, ஒரு கோடி முகக்கவசங்கள், 500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன'’

சுகாதார அதிகாரிகளுடன் அலோசனை
சுகாதார அதிகாரிகளுடன் அலோசனை

‘‘தமிழக அரசு மருத்துவர்களுக்கு, வெளிநாட்டில் இருப்பது போன்று தரமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. அதனால் மருத்துவர்கள் பணி செய்ய மறுப்பதாகச் செய்திகள் வெளியாகின்றனவே?’’

‘‘போதுமான அளவு அனைத்து உபகரணங்களும் கையிருப்பில் இருக்கின்றன. புதிதாகவும் ஆர்டர் செய்ய முயற்சி செய்துவருகிறோம். அதனால், இது போன்று வரும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம். தயவுசெய்து அரசுக்கு இந்த விஷயத்தில் அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்!’’

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு