Published:Updated:

கோவிட்-19 சிகிச்சை மையத்திலிருந்து வீரபாபு விலகியது ஏன்? - விளக்கும் சென்னை ஆணையர்

வீரபாபு விலகியது ஏன் - விளக்கும் ஆணையர் பிரகாஷ்
வீரபாபு விலகியது ஏன் - விளக்கும் ஆணையர் பிரகாஷ்

வீரபாபு பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கோவிட்-19 சித்தா பராமரிப்பு மையம் இனிமேலும் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை சாலிகிராமத்திலுள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வந்த கோவிட்-19 சித்த மருத்துவ மையத்தை நடத்தி வந்த சித்த மருத்துவர் வீரபாபு அதிலிருந்து விலகியுள்ளார். அவர் பொறுப்பிலிருந்து விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

கோவிட்-19 தமிழகத்தில் பரவத் தொடங்கியபோது சென்னையில் லேசான கோவிட்-19 தொற்று ஏற்பட்ட 69 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்கி பரிசோதிக்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு நோயாளிகள் வீடு திரும்பினர். இதையடுத்து தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையம் நடத்துவதற்கு சித்த மருத்துவர் வீரபாபு, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றார். ஜூன் 3-ம் தேதி முதல் அந்த மையம் செயல்பட்டு வந்தது.

சித்த மருத்துவர் வீரபாபு
சித்த மருத்துவர் வீரபாபு

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பராமரிப்பு மையத்தின் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்று மாலை சென்னை மாநகராட்சி ஆணையரையும் சந்தித்தார். அரசின் இலவச பராமரிப்பு மையத்தில் கட்டணம் வசூலித்தார் என்ற புகாரின் காரணமாகத்தான் விலகுகிறார் என்றும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.

பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த இரு நாள்களிலேயே அதே சாலிகிராமம் பகுதியில் ரூ.10 கட்டணத்தில் சிகிச்சையளிக்கும் உழைப்பாளி மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார் வீரபாபு. சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவத்தின், ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

வீரபாபு பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கோவிட்-19 சித்தா பராமரிப்பு மையம் இனிமேலும் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "இதுவரை 5,000 நபர்களுக்கும் மேல் சிகிச்சை அளித்துவிட்டேன். எனக்குச் சிறிது ஓய்வு தேவை. அதனால் சித்தா பராமரிப்பு மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அவர் சொந்த விருப்பத்தின் பெயரில்தான் மையத்திலிருந்து வெளியே செல்கிறார்" என்று கூறினார்.

கோவிட்-19 மையம் தொடர்ந்து இயங்குமா?

மேலும் சித்த மருத்துவ மையம் தொடர்ந்து இயங்குமா என்று கேட்டபோது, "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவச் சிகிச்சை அளிக்க விரும்புவதாக சித்த மருத்துவர் வீரபாபு மாநகராட்சியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சிகிச்சை வழங்குவதற்கு ஜவஹர் பொறியியல் கல்லூரியில் இடம் தரவும் அங்கு அனுமதிக்கப் படுபவர்களுக்கான உணவுச் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன் அடிப்படையில், அவர் உணவுக்காக அளித்திருந்த ரசீதுகளைச் சரிபார்த்து இதுவரை ரூ.13 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் ரசீதுகளும் சரிபார்க்கப்பட்டு சில தினங்களில் தொகை வழங்கப்படும்.

சித்த மருத்துவர் வீரபாபு
சித்த மருத்துவர் வீரபாபு

அவர் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் கட்டணம் வசூலித்தார் என்பது குறித்து மாநகராட்சிக்கு எழுத்துபூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது ஜவஹர் பொறியியல் கல்லூரியில் இயங்கிவரும் சித்த மருத்துவ மையம் தொடர்ந்து செயல்படும். அங்கு மாநகராட்சியின் சார்பில் அலோபதி மருத்துவர்களும் அரசு சித்த மருத்துவர்களும் ஷிஃப்ட் முறையில் சிகிச்சை அளிப்பார்கள்" என்று தெரிவித்தார்.

கோவிட்-19 மையத்தை காலி செய்யும் சித்த மருத்துவர் வீரபாபு... பின்னணியில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு