Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: கார் முதல் ஆலோசனைக் கூட்டம் வரை..! - கையில் வேப்பிலைக் கொத்துடன் வந்த அரசு அதிகாரி

வேப்பிலையால் முகத்தை மூடியுள்ள இராஜகோபால்
வேப்பிலையால் முகத்தை மூடியுள்ள இராஜகோபால்

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆணையர் ராஜகோபால் கையில் வேப்பிலைக் கொத்தை வைத்துக்கொண்டு வாய் மற்றும் மூக்கை மூடியபடி வந்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலர்களுக்கான கூட்டம் ஒன்றில் உயரதிகாரியான தலைமை ஆணையர் ஒருவர், தன்னை கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக கையில் கொத்தாக வேப்பிலையை வைத்து வாய், மூக்குப் பகுதியை மூடியபடி கலந்துகொண்டார். மேலும், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கூட்ட அரங்கம் என பல இடங்களில் வேப்பிலை தோரணமாக கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.

வேப்பிலையுடன் ராஜகோபால்
வேப்பிலையுடன் ராஜகோபால்

இந்தியாவில் இரண்டாம்கட்ட கொரோனா அலை வேகமாகப் பரவிவருவதாகக் கூறப்படும் நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கலெக்டர் கோவிந்தராவ் பல்வேறு முன்னெடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பதுடன் தீவிரமாக அதைச் செயல்படுத்தியும்வருகிறார்.

தொடக்கத்தில் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். தமிழக அரசு கொரோனா தடுப்புக்காகப் பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. மாஸ்க் போடாமல் வெளியே செல்பவர்களுக்கு போலீஸார் ரூ.200 அபராதம் வசூலிக்கின்றனர். ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்த எந்தவிதமான அச்ச உணர்வும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

கொரோனா அச்சத்தில் ராஜகோபால்
கொரோனா அச்சத்தில் ராஜகோபால்

தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு கட்சித் தலைவர்கள் ஈடுபட்டபோது சமூக இடைவெளி எதுவும் பின்பற்றப்படவில்லை. அதை அரசு தடுக்கத் தவறியதையும் மக்கள் சுட்டிக்காட்டிப் பேசிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அதன் ஆணையர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த அதன் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால், கையில் வேப்பிலைக் கொத்தை வைத்துக்கொண்டு வாய் மற்றும் மூக்கை மூடியபடி வந்தார். கூட்டம் நடைபெற்ற இடத்தில் தனது இருக்கைக்கு முன் போடப்பட்டிருந்த மேஜையிலும் வேப்பிலைக் கொத்தை வைத்திருந்தார். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் கொரோனாவின் பாதிப்பை உணர்ந்ததால் எச்சரிக்கையாக இருப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற அதிகாரிகள் பேசி வியப்படைந்தனர்.

காரில் வேப்பிலை
காரில் வேப்பிலை

இது குறித்து கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பேசினோம், `மாவட்ட அளவிலான பொது அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதல் கலந்துகொள்வதற்காக ராஜகோபால் வந்த காரின் முன்னிருக்கைக்கு எதிரே உள்ள கண்ணாடிப் பகுதியில் கொத்துக் கொத்தாக வேப்பிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

காரைவிட்டு இறங்கிய ராஜகோபால் கையில் கொத்தாக வேப்பிலையை வைத்துக்கொண்டு மாஸ்க் அணிந்திருந்தபோதும் வாய் மற்றும் மூக்கை மூடியபடி கூட்ட அரங்குக்குச் சென்றார். முன்னதாகவே கலெக்டர் அலுவலக நுழைவாயில் மற்றும் கூட்ட அரங்கின் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் வேப்பிலைகளை தோரணமாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தனர்.

மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால்
மாநில தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால்

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை கூட்டம் நடைபெற்றது. அப்போது அடிக்கடி வேப்பிலைக் கொத்தை மூக்கில்வைத்து எடுத்து கொண்டே இருந்தார் ராஜகோபால். பின்னர் கூட்டம் முடிந்து கிளம்பினார் அவரை வழியனுப்புவதற்காக கலெக்டர் கோவிந்தராவ், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜய் ஆகியோர் நுழைவு வாயில் வரை வந்தனர். கலெக்டர், எஸ்.பி ஆகியோர் மாஸ்க் அணிந்திருந்தனர். எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்ஜய், ராஜகோபாலிடம் ஏதோ சொல்ல முகத்தில் வேப்பிலையை வைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டு பேசினார்.

இதையடுத்து கார் பகுதிக்கு வந்த பிறகு ராஜகோபால் ஏறிச் செல்ல, கார் சீட், கண்ணாடி முன் பகுதி என காரின் பல இடங்களில் வேப்பிலைகள் இருந்ததைப் பார்த்த அதிகாரி ஒருவர் `இவர் அளவுக்கு எச்சரிக்கையாக இருந்தால் நிச்சயம் கொரோனா பாதிப்புக்கு ஆளாக மாட்டோம்’ என கமென்ட் அடித்தார். உயரதிகாரி ஒருவர், அதுவும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கையில் வேப்பிலை, கலெக்டர் அலுவலகம் முழுக்க வேப்பிலை தோரணம் கட்டவைத்து வந்திருந்தது வேப்பிலையின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்ததாகவும் பலர் பேசிக்கொண்டனர்.

கொரோனா அச்சத்தில் ராஜகோபால்
கொரோனா அச்சத்தில் ராஜகோபால்

சிலர் அவரின் இந்தச் செயலை கமென்ட் அடித்தனர். பொதுமக்கள் கொரோனா விஷயத்தில் அலட்சியமாகவே இருக்கின்றனர். நிச்சயம் ஆணையர் ராஜகோபாலின் செயலைப் பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்ற பேச்சும் எழுந்தது. இருந்தாலும், கோயில் திருவிழாக்களில் கட்டுவதுபோல் கலெக்டர் அலுவலகத்தில் வேப்பிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் வியப்பும் பரபரப்பும் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு