Published:Updated:

`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி?!’ - காசர்கோட்டில் அரசு அலுவலகங்களுக்குப் பூட்டு

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மாநிலத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். வைரஸ் தொற்று வந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கேரள மாநிலத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஐந்துபேர் எர்ணாகுளம் மாவட்டத்திலும் ஆறுபேர் காசர்கோட்டிலும் ஒருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆகியுள்ளது. 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 225 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். 12 பேருக்கு தொற்று ஏற்பட்டதை நாம் மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எர்ணாகுளத்தில் ஏற்கெனவே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று தனியாக கண்காணித்தோம், அவர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

காசர்கோட்டில் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளாமல், கோழிக்கோடு, காசர்கோடு எனப் பல இடங்களுக்குச் சுற்றிச்சென்றுள்ளார். அவர் கிளப், வீட்டு விசேஷம் என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். எனவே, அதிதீவிரமாக காசர்கோடு மாவட்டம் கண்காணிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தில் ஒரு வாரம் அரசு அலுவலகங்களும் மூடப்படுகிறது. இரண்டு வாரம் வழிபாட்டுத் தலங்களும் கிளப்புகளும் அடைக்கப்படும். கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

மாநிலத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். வைரஸ் தொற்று வந்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளில் வைரஸ் தொற்று உள்ளவர்கள் வந்தால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தக் கூடாது. அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். சிலர் உணர்ச்சிவசப்பட்டு சமுதாயத்துக்கு தீங்கை விளைவிக்கக் கூடாது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

பிரதமருடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியதில், அவர்கள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எடுத்துள்ளார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே, 22-ம் தேதி கேரளத்தில் அரசுப் பேருந்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது. மொத்த வியாபாரிகளை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் எனக் கூறினார். அது நல்ல ஆலோசனை என்பதால் அதைச் செயல்படுத்த உள்ளோம். காசர்கோடு மாவட்டத்தில் எல்லாத் தேர்வுகளையும் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் அலுவலகத்துக்கு வருகிறார்கள், 50 சதவிகிதத்தினர் வீடுகளில் இருந்து பணி செய்யலாம். வாரத்தின் 5 நாள்கள் மட்டுமே பணி நாளாக இருக்கும். சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். ஊழியர்கள் வீட்டில் கண்காணிக்கப்பட்டால் மருத்துவச் சான்றின் அடிப்படையில் 14 நாள்கள் மருத்துவ விடுமுறை அளிக்கப்படும். ஆண்டு வரவு கணக்கு ஏப்ரல் மாதம் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.

பிரதமரிடம் ஊரக வேலை உறுதித்திட்ட நாள்களை நூறில் இருந்து நூற்று ஐம்பதாக உயர்த்திக் கேட்டுள்ளோம். அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு மானியம், குறைந்த வட்டியில் சிறு கடன் வழங்க வங்கிகளை அறிவுறுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பிரதமரின் வீடியோ கான்ஃபரன்சில் வலியுறுத்தியுள்ளோம்.

`குணமடைந்த 71,740 பேர்; பாதிப்பில்லா 3வது நாள்!’ - நம்பிக்கையூட்டும் வுகான் #Corona

கேரளத்தில் 22 தனியார் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் 4,400 தனி அறைகள் உள்ளன. அதைக் கொரோனா கேர் சென்டர்களாக மாற்ற முடிவு செய்துள்ளோம். மாஸ்க், கிளவுஸ், ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்றவை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கை கொண்ட குடும்பங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வெளியில் தனியாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு, மருந்து வாங்குவதில் பிரச்னை இருக்கும். எனவே, அவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு