Published:Updated:

`சிக்கல் இருந்தா டவுன்லோடு பண்ணாதீங்க!' - ஆரோக்கிய சேது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்

செயலியைப் பயன்படுத்துபவரின் பதிவுகள் 30 நாள்களுக்குள் தானாகவே நீக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த திணறிவருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாட்டில் தனிமனிதர்களுக்கிடையே வைரஸ் பரவலைக் கண்காணிக்கவும் எச்சரிக்கவும் அறிவுரை வழங்கவும் மத்திய அரசால் ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்துவோரின் தகவல் பாதுகாப்பு குறித்தும் தனியுரிமை குறித்தும் பல விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலின் பயன்பாட்டில் சிக்கல் இருப்பதாகக் கருதுபவர்கள் அதைப் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

எதிர்க்கட்சியினர் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தப்படுவதில் உள்ள பாதுகாப்புச் சிக்கல்கள் பற்றி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தனர். இந்தநிலையில், இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,``ஆரோக்கிய சேது பயன்பாட்டில் யாருக்கும் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்" என்று கூறினார்.

தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்தும் தனியுரிமையை மீறுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்ததற்கு பதில் அளித்துள்ள ரவிசங்கர் பிரசாத்,``தீவிரவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்குத் தனியுரிமைகள் எதுவும் இல்லை.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

உலகையே கதிகலங்கச் செய்துள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில், ஆரோக்கிய சேது நமக்கு அருகில் உள்ள கோவிட் -19 நோயாளிகள் குறித்து எச்சரிக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொடர்பில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறியவும் உதவுகிறது’’ என்று கூறினார். அதோடு, செயலியைப் பயன்படுத்துபவரின் பதிவுகள் 30 நாள்களுக்குள் தானாகவே நீக்கப்படும் என்றும் அதிகபட்சமாக அனைத்துத் தரவுகளும் 180 நாள்களுக்குள் நீக்கப்படும் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ரயில் பயணங்கள் மேற்கொள்பவர்கள் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தி அதன் கேள்விகளுக்குப் பதிலளிப்பது கட்டாயமாக உள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தங்களது 2G போனிலும் கூட மிஸ்ட் கால் செய்து ஆரோக்கிய சேது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வசதியும் ஆரோக்கிய சேது-IVS என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

``ஆரோக்கிய சேது செயலி, ஒரு அதிநவீனக் கண்காணிப்பு அமைப்பு. எந்தவொரு நிறுவனத்தின் மேற்பார்வையும் இல்லாமல் ஒரு தனியார் இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகிறது. தொழில்நுட்பம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆனால் குடிமக்களின் அனுமதியின்றி அவர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுத்துவதை ஏற்க முடியாது" என்று ராகுல்காந்தி ட்விட்டரில் கடந்த 2ம் தேதி பதிவிட்டிருந்தார்,

அடுத்த கட்டுரைக்கு