Published:Updated:

`நீங்க எப்படி வீட்டுக்கு வந்தீங்க..?'- சுகாதார ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேடவாக்கம் பெண்மணி

கொரோனா பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ்

அப்போது அந்தப் பெண் வீட்டில் இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ந்த உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் `உங்களுக்குத்தான் கொரோனா ‘பாசிட்டிவ்’ உள்ளதே, நீங்க எப்படி வீட்டிற்கு வந்தீங்க?’ எனக் கேட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த 10-ம் தேதி மட்டும் 12 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அளவிலான பட்டியலில் `ரெட் அலர்ட்’ நிலையில் செங்கல்பட்டு இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தப்லீக் மாநாடு
தப்லீக் மாநாடு

டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்குச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் குடும்பத்தினர் அனைவரும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 12-ம் தேதி அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தி இருந்தார்கள். ஆனால் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என அன்றைய தினமே மருத்துவமனையில் மீண்டும் ஒரு மருத்துவ அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மேடவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு அந்தப் பெண் 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை வழக்கம் போல உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் மேடவாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பெண் வீட்டில் இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ந்த உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள் ‘உங்களுக்குத்தான் கொரோனா பாசிட்டிவ் உள்ளதே, நீங்க எப்படி வீட்டிற்கு வந்தீங்க?’ எனக் கேட்டுள்ளனர். எனக்குக் கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் அனுப்பிவிட்டதாக அவர்களிடம் கூறியிருக்கிறார் அந்தப் பெண்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும் ஆய்வில் மருத்துவமனையில் தனக்கு நெகட்டிவ் எனக் கொடுக்கப்பட்டிருந்த ரிப்போர்ட்டை அவர்களிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த மருத்துவப் பணியாளர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனையைத் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு நேற்று மாலையே மீண்டும் அந்தப் பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு