வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால், கொரோனா தடுப்பு விதிமுறைகளில் கூடுதல் கவனம் தேவை என்று மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,``பல்வேறு நாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த ஒரு மாத காலமாகப் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாகவே உள்ளது. அதிலும் கடந்த சில நாள்களாகப் புதிதாகத் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20-க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு காரணமாக இறப்பு ஏதும் இல்லை என்ற நிலை இருக்கின்றது.

நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால், கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்வது முக்கியம். தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது. அவர்களைத் தடுப்பூசி முகாம்களுக்கு வரவழைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 88 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய வைரஸ் வந்தாலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
