Published:Updated:

`அதை விடுங்க... ஊர்ப் பக்கம் மழை எப்படி?’ குடிகாரர்கள் பேச்சை மாற்றுவது ஏன்? - மயக்கம் என்ன? - 5

மது குடிப்பது உடலுக்குக் கேடு
மது குடிப்பது உடலுக்குக் கேடு

நீங்கள் குடிநோயாளி என்றால் உங்களின் முதல் மருத்துவர் நீங்கள்தான். `நான் அளவுக்கு மீறி மது குடிக்கிறேன்... இது அபாயமானது, கேவலமானது’ என்பதை முதலில் நீங்கள் மனம்விட்டு, மானத்தைவிட்டு ஒப்புக்கொள்ள வேண்டும்.

மதுக்கடைகளை ஜோராகத் திறந்துவிட்டார்கள். ரேஷன் கடைகளில்கூட ஒருபோதும் நிற்காத குடிநோயாளிகள் கட்டைப் பை நிறைய மதுபாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள். வருமானம் இல்லாத இந்தக் காலகட்டத்தில் எதை எல்லாம் விற்று, அடகுவைத்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை. மதுவுக்கு முன்னால் சமூக இடைவெளி எல்லாம் எம்மாத்திரம்? ``டேய் கொரொனா, தைரியம் இருந்தா என் முன்னாடி வாடா!” என்று குடிநோயாளிகள் சலம்பும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வலம்வருகின்றன. மருந்தே கண்டுபிடிக்கப்படாத கொரொனாவைக் கண்டு குடிநோயாளிகளுக்கு கொஞ்சமும் அச்சம் இல்லை. ஏனெனில், கொரொனாவைவிட கொடிய நோய் குடிநோய். உயிரை உருக்கும் புற்றுநோயைக் குணப்படுத்த மருந்து கண்டறிந்துவிட்டார்கள். உயிரைச் சிறுகச்சிறுகக் கொல்லும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டிக்கக்கூட மருத்துவம் தயாராகிவிட்டது. ஆனால், ஜாலிக்காகக் குடித்து சிறுகச் சிறுக அதற்கு அடிமையாகிவிடும் குடிநோயாளிகளை முற்றிலுமாக மீட்க இதுவரை மருந்து கண்டறியப்படவே இல்லை. மனக்கட்டுப்பாடுதான் ஒரே மருந்து என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?

மதுக்கடை
மதுக்கடை

அதுதான் ஏகப்பட்ட மருத்துவமனைகள் இருக்கின்றனவே... ஆல்கஹால் அனானிமஸ் போன்ற மீட்பு நிலையங்கள் இருக்கின்றனவே... 30 நாள்களில், மூணு மாதங்களில் குணப்படுத்தி ஜம்மென்று அனுப்பி வைத்துவிடுகிறோம் என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றனவே... அப்புறம் எப்படி என்கிறீர்களா?

மதுவால் கெட்டுப்போன கல்லீரல், நுரையீரல், இரைப்பை, நரம்புகள் என உடலின் இன்னபிற உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குணப்படுத்தும் வேலையைத்தான் இவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், மறுபடி குடிக்கத் தூண்டும் குடிஈர்ப்பு நோய்க்கு மருந்து கிடையாது. ஆல்கஹால் அனானிமஸ் நிலையங்களில் கவுன்சலிங்தான் கொடுக்கிறார்கள், மனமாற்றத்துக்கு மருந்து கொடுப்பது இல்லை. ஏனென்றால், குடிநோய் என்பது உடல் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டும் அல்ல; மனம் சம்பந்தப்பட்ட பிரச்னையும்கூட. நீங்கள் குடிநோயாளி என்றால் உங்களின் முதல் மருத்துவர் நீங்கள்தான். `நான் அளவுக்கு மீறிக் குடிக்கிறேன்... இது அபாயமானது, கேவலமானது’ என்பதை முதலில் நீங்கள் மனம்விட்டு, மானத்தைவிட்டு ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்குதான் சிக்கல் என்கிறார்கள் டாக்டர்கள். ஏனெனில், எந்தக் குடிநோயாளியுமே, `என்னையும் மீறி திரும்பத் திரும்ப குடிக்கிறேன்... ஒரு நாளைக்கு ஆறு குவார்ட்டர் வரை அடிக்கிறேன்’ என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார். டாக்டரோ வேறு யாருமோ, `தினமும் எவ்வளவு குடிக்கிறீங்க?’ என்று கேட்டால் `ச்சும்மா கொஞ்சமா குடிப்பேங்க...’ என்ற அளவில்தான் சமாளிப்பார்கள் குடியர்கள். `எப்பவாச்சும்தான் குடிப்பேன்... டென்ஷன் ஆயிட்டா மட்டும் கொஞ்சம் சாப்பிடுவேன்’ என்று சமாதானம் சொல்லிக்கொள்வதுதான் குடிநோயாளியின் இயல்பு. ஏனெனில், அவருடையே மூளையில் ஆல்கஹால், இந்த ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து வைத்துவிட்டது. எனவே, மறுத்தல் என்பது குடிப்பவரின் அடிப்படைக் குணாதிசயம். அதனால்தான் குடிநோயாளி அவ்வளவு சீக்கிரம் மருத்துவரிடம் செல்ல மாட்டார். தனக்கு இருக்கும் நோயின் பாதிப்புகளைப் பற்றி மனைவி உட்பட எவரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார். பணக் கஷ்டம் நிறைய இருக்கும். நிறைய கடன் வாங்கி இருப்பார். அதையும் குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார். பணப் பிரச்னையைப் பகிர்ந்துகொண்டால், குடியைப் பற்றிய பேச்சு வருமே. அப்படியே யாராவது அவரது குடிப்பழக்கத்தைப் பற்றி அக்கறையாகக் கேட்டாலும், `அதை விடுங்க. ஊர்ப் பக்கம் மழை எப்படி?’ என்று குற்ற உணர்வை மறைக்க பேச்சை மாற்றுவார். பெரும்பாலும் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுவதையும் நெருங்கிச் சென்று பேசுவதையும் குடியர்கள் தவிர்த்துவிடுவார்கள். இதுவும் அவர்களுடைய குணாதிசயம்தான்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

அப்படியே ஒருவர் மனம் மாறி மதுவை விட்டுவிட்டார்... தொடர்ந்து பல ஆண்டுகள் தவிர்த்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த நபரும் சரி... அவர் மீது அக்கறை கொண்டவர்களும் சரி... அவரது ஆயுள்நாள் முழுக்க அவரைக் கண்காணித்து... குடிமறுப்புபற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த அளவுக்கு `தாகம்’ உள்ளே பதுங்கி இருக்கும். தன்னுடைய சொந்த வீட்டை பெட்டி, படுக்கைகளுடன்... பொண்டாட்டி, பிள்ளைகளுடன் இன்னொருவன் உரிமை கொண்டாட, அனுபவிக்க யாராவது அனுமதிப்பார்களா? சொல்லும்போதே நரம்பு புடைக்க ஆத்திரம் வருகிறது அல்லவா? ஆனால், குடிநோயாளிகள் அதைத்தான் செய்துவருகிறார்கள். ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமான சொத்து மூளை. அதை வைத்துதான் உடலின் இன்னபிற பாகங்கள் இயங்குகின்றன. ``மூளை ஒருவரின் வீடு என்றால், இன்னபிற பாகங்கள் பெட்டி, படுக்கை, பொண்டாட்டி, பிள்ளைகள்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். மூளைக்குச் செல்லும் ஆல்கஹால் டெட்ரா ஹைட்ரோ ஐசோகுயினோலின்’ (Tetrahydroisoquinoline) என்ற வேதிப் பொருளாக உருவெடுக்கிறது. இந்த அசுரன் மூளைக்கு உள்ளே சென்றதும் மொத்த சுரப்பிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து, அடிமைப்படுத்திவிடுகிறான். சுரப்பிகளின் வேலைகளையும் இவனே கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடுவான். அதுவும் தப்புத் தப்பாக உத்தரவிடுவான். குடித்தவர்கள் சொன்னதையே சொல்லி `டார்ச்சர்’ பண்ணுவதும்கூட இவனுடைய ஏடாகூடத்தால்தான். குடிநோயாளிகள் தங்கள் மூளையை இவனுக்கு மொத்தமாகக் குத்தகைக்கு விட்டுவிடுகிறார்கள்.

இதன் உச்சக்கட்டம் என்ன தெரியுமா? போதையில் கத்த ஆரம்பித்தால், கத்திக்கொண்டே இருப்பார்கள். காரணம் இல்லாமல் கோபப்படுவார்கள்; மூர்க்கமாகச் சண்டை போடுவார்கள். குறிப்பாக, இவர்களுக்கு நல்லது கெட்டது, அசூயை எல்லாம் தெரியாது. பக்கத்தில் இருப்பவர் மீது கூசாமல் வாந்தி எடுப்பார்கள். புளிச்சென்று எதிராளியின் காலடியில் எச்சில் துப்புவார்கள். பேச்சுவாக்கிலேயே சிறுநீர்கூட கழிப்பார்கள். எல்லாச் சுரப்பிகளையும் மது அசுரன் காலி பண்ணிவிடுவதால், ஒருகட்டத்தில் அந்த நபர் அவசியமான சில செயல்களில் ஈடுபடவே கூட அசுரன் தேவைப்படுவான். கொஞ்சம் போதை தெளிந்தவுடனேயே ஒரு கட்டிங்கை போடுவதும்கூட `நிலை’க்கு வரத்தான். குடிநோயாளிகளுக்கு ஏற்படும் இன்னொரு முக்கியமான பிரச்னை... தீவிர வயிற்றுக் கோளாறு. எந்நேரமும் வயிற்றில் லேசாக வலி இருந்துகொண்டே இருக்கும். மலச்சிக்கல் இருக்கும். எந்நேரமும் `நெம்பர் டூ’ வருவதுபோல அடிவயிறு கனக்கும். ஆனால், `உட்கார்ந்தால்’ வராது. சிலருக்கோ மறுபடி மது அருந்தினால்தான் `டூ’ வரும். பொதுக் கழிப்பறைகள் பலவற்றில் காலி குவார்ட்டர் பாட்டில்கள் கிடப்பதன் மர்மமும் அநேகமாக இதுதான். மானம் போன பிறகு இவர்கள் மறைந்து குடிக்கவா இங்கே வருகிறார்கள்?

nilgiri tasmac
nilgiri tasmac

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் மையப் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை... உள்ளே எட்டிப் பார்க்கும்போதே துர்நாற்றம் வீசுகிறது. `பார் இருக்கு... ஆனா, இல்லை’ கதைதான். அதாவது, அனுமதி இல்லாத பார். அங்கு 50 வயதை நெருங்கிய அழுக்கு மனிதர் ஒருவர் அடிக்கடி வருகிறார் என்று சொல்லி, அடையாளம் காட்டினார் ஒரு சோர்ஸ். எத்தனையோ பேர் அங்கு வர, அவர் மட்டும் தனித்துத் தெரிந்தார். அவரது இடது கை எப்போதும் அவரது பின்பக்கத்தை சிரமப்பட்டு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருந்தது. கவுன்ட்டருக்குள் கைவிட்டு மட்டரக மது பாட்டிலை வாங்கி, அங்கேயே நின்று குடித்துவிட்டு வெளியேறினார். பிறகு, ரோட்டின் ஓரமாக ஒதுங்கி, சுற்றும்முற்றும் பார்த்தபடி நடந்த அவர் ஒருகட்டத்தில் நடக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்தார். நெருங்கிப் போய்ப் பார்த்தபோது, அவருடைய வேட்டியில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. முற்றிப்போன மூல வியாதியின் உச்சக்கட்ட தாக்குதலை அனுபவித்த வலி தாங்க முடியாமல் கதற ஆரம்பித்தார்.

டாஸ்மாக் ஐ.ஏ.எஸ் அதிகாரியைத் தூக்கியடிக்கத் துடிக்கும் 10 பேர் - மயக்கம் என்ன? - 4

கல்லீரல் சிரியாஸிஸ் எப்படியோ... நரம்புத் தளர்ச்சி எப்படியோ... அதே அளவுக்கு குடிநோயாளிகளை மோசமாகத் தாக்கும் இன்னொரு நோய்... மூலம். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் குடியைத் தொடர்ந்துகொண்டே இருந்தால், நின்று சித்ரவதை செய்து கொல்லும் எமன்.

- (தெளிவோம்)
அடுத்த கட்டுரைக்கு