Published:Updated:

`மருத்துவமனை க்வாரன்டீனைவிட வீடு பெட்டர்!' - கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா

அமைச்சர் ஷைலஜா
அமைச்சர் ஷைலஜா

இன்ஸ்டிட்யூஷனல் க்வாரன்டீனில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன. இந்த நேரத்தில், பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது ஆபத்தானதே.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முன்மாதிரியாகத் திகழ்கிறது கேரள மாநிலம். இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுபவர் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே ஷைலஜா. முதன்முதலில் இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரள அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

corona
corona

இந்நிலையில், அமைச்சர் கே.கே. ஷைலஜா, `கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை வீட்டிலேயே க்வாரன்டீன் செய்வதுதான் சிறந்தது' எனக் கூறியுள்ளார். இந்தக் கோட்பாடு சரி என, கடந்த நாள்களில் அதைச் செயல்படுத்தியதன் மூலம் கேரள மாநிலம் நிரூபித்தும் காட்டியுள்ளது. இதனால் சமூகப் பரவலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நோய்த்தொற்றின் விகிதம் மற்ற மாநிலங்களைவிட அங்கு குறைந்தே காணப்படுகிறது.

கே.கே. ஷைலஜா மேலும் கூறுகையில், ``சம்பந்தப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும்போது, 'நம்மால் நம் குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாதே' என்று அவர்களுக்கு ஒருவித எச்சரிக்கை உணர்வு இருக்கும்.

ஷைலஜா
ஷைலஜா

அந்த எச்சரிக்கை உணர்வே அவர்களைப் பொறுப்புணர்வுடனும் மற்றவர்களுக்குத் தொற்றுப் பரவாத வகையில் பாதுகாப்புடனும் இருக்க வைக்கும். மக்கள் கவனமாக இருப்பார்கள். இதனால் சமூகப் பரவலை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த யுக்தியைப் பயன்படுத்தியே இரண்டாம் அலையை நாங்கள் கட்டுப்படுத்தினோம்.

மேலும், இன்ஸ்டிட்யூஷனல் க்வாரன்டீனில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன. இந்த நேரத்தில், பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது ஆபத்தானதே. இதோடு, வெளி மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் கேரள மக்கள் ஊர் திரும்பும்போது, போதிய இட வசதியுடன் அவர்களைத் தனிமைப்படுத்த நம்மால் இயலாது. இதனால்தான் நாங்கள் அவர்களை வீட்டிலேயே க்வாரன்டீன் செய்துகொள்ள ஊக்கப்படுத்துகிறோம்.

`மக்கள்தொகையில் பாதிப் பேருக்குக் கொரோனா பரவும்..’ - இந்தியாவின் நிலையைக் கணித்த மருத்துவர்கள்

இதற்குப்பின் உளவியல் பார்வையும் உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்படும்போது வீட்டு உணவே கிடைக்கும். அது அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கும். இவற்றையெல்லாம் ஆலோசித்துதான், வீட்டு க்வாரன்டீன் சிறந்தது என்று நிச்சயமாக நான் சொல்கிறேன். மத்திய அரசும் தனது இன்ஸ்டிட்யூஷனல் க்வாரன்டீன் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய இருப்பதாகத் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

corona
corona

இதுவரை, முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என இரண்டு கட்டங்களிலும் கேரள அரசு வெற்றிகரமாகக் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த வீட்டு க்வாரன்டீன் அணுகுமுறை அவர்களுக்கு எந்தளவுக்குப் பயனளிக்கவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு