Published:Updated:

சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி; தனி வார்டில் சிகிச்சை

வீல் சேரில் சசிகலா
வீல் சேரில் சசிகலா ( ANI )

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன் முடிவுகளில் அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகவிருக்கிறார். இந்தநிலையில், சிறையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தநிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சிறை மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து பெங்களூரு சிவாஜி சாலையில் உள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சசிகலாவின் உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது மூச்சுத்திணறல் எதுவும் இல்லை. அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார் - ப்வரிங் மருத்துவமனை இயக்குநர் மனோஜ்

பவ்ரிங் அரசு மருத்துவமனையிலுள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா. மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும்போதும் ஆதரவாளர்களை நோக்கி உற்சாகத்தோடு கையசைத்தார் .

விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

நுரையீரலின் பாதிப்பு 16/25 என்ற அளவில் இருப்பதால், அவருக்குத் தீவிர சிகிச்சை தேவையென்றும் அதோடு, அவர் மருத்துவர்களின் தொடர் கணிக்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் தற்போது தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சி.டி ஸ்கேனை அடுத்து செய்யப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு