Published:Updated:

பிரேமலதா குறிப்பிட்ட `ஆன்டி வைரல்' ஊசி... கொரோனா சிகிச்சையில் அதன் பங்கு என்ன?

விஜயகாந்த்துக்கு ஆன்டிவைரல் ஊசி - பிரேமலதா விளக்கம்
விஜயகாந்த்துக்கு ஆன்டிவைரல் ஊசி - பிரேமலதா விளக்கம்

தே.மு.தி.க சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலும் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், அது உடனடியாக சரிசெய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.

Vijayakanth
Vijayakanth

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் மருத்துவர்கள் விஜயகாந்துக்கு ஆன்டி வைரல் ஊசி போட்டனர். அதன் பிறகு, அவருக்கு பாதிப்பு குறைந்துவிட்டது. தற்போது லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார். அதற்கு முன்பு தே.மு.தி.க சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலும் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. உலகமே எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கொடிய வைரஸ் தொற்றை உடனடியாகச் சரிசெய்ய முடியுமா என்று பலர் கேள்வியும் எழுப்பியிருந்தனர். இதையடுத்து கோவிட்-19 தொற்றுநோய்க்கு என்ன ஆன்டி வைரல் ஊசி போடப்படுகிறது. அது உடனடியாக நோயைக் குணப்படுத்துமா என்ற சந்தேகத்தை தொற்றுநோய் மருத்துவரும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவருமான அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.

Infectious Disease expert Dr.Ashwin Karupan
Infectious Disease expert Dr.Ashwin Karupan

"கோவிட்-19 பாதிப்பில் தீவிர தொற்றுடையவர்களுக்கு ரெம்டெஸ்விர் (Remdesivir) என்ற ஆன்டிவைரல் ஊசி கொடுக்கப்படும். முதல்முறை 200 மில்லிகிராம் மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம். அதன்பிறகு 100 மில்லி அளவில் ஒரு நாளைக்கு இரண்டு முறை செலுத்த வேண்டும். 7 முதல் 8 நாள்களுக்கு கொடுக்க வேண்டி வரும். நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு அதற்கு எதிரான ஆன்டிபாடி உருவானவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து கொடுக்கப்படும்.

இந்த மருந்தை கோவிட்-19 தொற்றுக்குச் செலுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) அனுமதித்தபோது இதை சிகிச்சைக்காகப் பயன்படுத்தக் கூடாது. பரிசோதனை முயற்சிக்காகச் (Investigative drug) செலுத்தலாம் என்று அறிவுறுத்தியிருந்தது. அப்படியென்றால் தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு மட்டுமே அந்த மருந்தை வழங்க முடியும்.

அதன் பிறகு, கடந்த மாதத்தில் மறுஅறிவிப்பை வெளியிட்ட எஃப்.டி.ஏ கோவிட்-19 லேசானது முதல் மிதமான பாதிப்புள்ளவர்களில் ஆபத்தான வகையைச் (High risk category) சேர்ந்தவர்களுக்கு வழங்கலாம் என்று தெரிவித்தது. இந்த மருந்தானது உடலில் கொரோனா வைரஸின் அளவைக் (Viral Load) குறைக்கும். அதனால் 5 நாள்களில் குணமடைபவர்கள் சற்று முன்பாகவே மூன்று நாள்களில் குணமடையலாம். ஆனால், மருந்து செலுத்தியவுடன் நோய் உடனே குணமாவது என்பது சாத்தியமே இல்லை.

Injection
Injection

மேலும் இந்த மருந்து யாருடைய உடலில் வேலை செய்யும், யாருக்கு வேலை செய்யாது என்பதையும் உறுதியாகக் கூற முடியாது. அதனால்தான் ரெம்டெஸ்விர் மருந்தைப் பரிசோதனை முயற்சியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

வீட்டில் எப்போதும் 20 பேர்; குழப்பிய 2 அறிக்கைகள்! - தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்
அடுத்த கட்டுரைக்கு