Published:Updated:

நடிகர் விவேக் திடீர் மரணம்... தடுப்பூசி சர்ச்சை... உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

Vivek
Vivek ( Photo: Vikatan / Kalimuthu.P )

நடிகர் விவேக் மரணத்துக்கும், இறப்பதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரங்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் விவேக் மரணம், தடுப்பூசியால் நிகழ்ந்திருக்குமா என்பதே இப்போது பலருடைய கேள்வியாக இருக்கிறது. விவேக், அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, ''விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும், நேற்று அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று டாக்டர்களை முன்னிலையில் பேட்டியளித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று (17 ஏப்ரல் 2021) அதிகாலையில் விவேக் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பிறகு, அவருடைய மரணத்தையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து ஆங்காங்கே விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Covid-19 Vaccination
Covid-19 Vaccination

``அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை'' என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். ஆனாலும் கூட தடுப்பூசி சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

சரி, கோவிட் தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் மரணம் வரை கொண்டு செல்லுமா? ஒருவர் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகு மரணித்தால், அவருடைய மரணத்திற்கு இதுதான் காரணம் என்று கண்டுபிடிக்க முடியுமா?

``நிச்சயமாக இரண்டுக்குமான தொடர்பைக் கண்டுபிடிக்க முடியும்'' என்கிறார் சமூகச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தி.

``ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு இறந்தால், என்ன காரணத்தால் மரணம் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க உலக சுகாதார நிறுவனம், பிரைட்டன் அளவுகோல்களை (Brighton Collaboration Criteria) வைத்துள்ளது. ஒருவர் தடுப்பூசியால் இறக்கவில்லை எனில் அவர் வேறு எந்தக் காரணத்தால் இறந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும் என்பதுதான் அந்த அளவுகோல். தடுப்பு மருந்துக்குப் பிறகான விளைவுகள் மரணம்வரை செல்வதற்கு அதிதீவிர ஒவ்வாமை காரணமாகக் கூறப்படுகிறது. இது, மருந்தை எடுத்துக்கொண்ட அரை மணிநேரத்தில்தான் நடக்கும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் கூறுகிறார். அப்படி மட்டும்தான் இருக்கும் என்று சொல்லமுடியாது. 2 முதல் 4 மணிநேரத்தில்கூட பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உச்சமாக, 24 மணிநேரம் கழித்துகூட அதிதீவிர ஒவ்வாமை வரமுடியும்.

Covid-19 Vaccination
Covid-19 Vaccination

மார்ச் 29-ம் தேதி வரை இந்தியளவில் 180 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு இறந்துள்ளனர் என்பது, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகான பாதிப்புகளைக் கண்டறியும் கமிட்டியில் (AEFI Committee) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 51 சதவிகிதம் பேரின் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு. அடுத்ததாக, பக்கவாதம் வந்து இறந்துள்ளனர்.

இந்நிலையில்தான், தடுப்பூசி போட்ட மறுநாளே நடிகர் விவேக் மரணித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை, அதாவது மரணத்துக்கான காரணத்தை ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியும். இயற்கையாக நிகழும் மாரடைப்பில் இருப்பதைவிட, தடுப்பூசியால் நிகழும்போது அடைப்பு ஓரிடத்தில் மட்டும் இருக்காது. இதயத்திலேயே பல இடங்களில் இருக்கும். நுரையீரல் மற்றும் மூளையிலும் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவேக் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டபோது அவருடைய மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்திலும் பிரச்னை இருந்திருக்கிறது. சுயநினைவு இல்லாமல்தான் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆக, தடுப்பூசி காரணமா இல்லையா என்பதை நுண்திசுப்பிணி ஆய்வு (histopathological examination) மேற்கொண்டு, குறிப்பிட்ட தடுப்பு மருந்தினுடைய நோய் எதிர்ப்புப் பொருள்கள் உடலில் எங்கெல்லாம் படிந்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

இறப்புக்குக் காரணம் தடுப்பூசியா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க இன்னும் பல ஆய்வுகளும் உள்ளன. இந்த ஆய்வுகளைச் செய்வதற்கு முழுமையான உடற்கூராய்வைக்கூட செய்யத் தேவையில்லை. அறிகுறிகளின் அடிப்படையிலான உடற்கூராய்வு (Clinical Autopsy) செய்தாலே கண்டுபிடித்துவிட முடியும்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

2016-ம் ஆண்டு NCBI ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வறிக்கை, தடுப்புமருந்து எடுத்து 24 மணிநேரம் கழித்தும் அதிதீவிர ஒவ்வாமை ஏற்படலாம் என்று உறுதி செய்துள்ளது. உண்மை இப்படியிருக்க, அறிகுறி அடிப்படையிலான உடற்கூராய்வைக்கூட செய்யாமல் மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அறிவியல் அடிப்படையற்றது. ஒருவேளை தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால், இந்த மரணம் நிகழ்ந்திருக்குமா என்கிற ரீதியில் ஆய்வு செய்யவேண்டும். அந்த மாதிரியான ஆய்வுகள் முறையாக இந்தியாவில் செய்யப்படுவதில்லை.

விவேக் மரணத்துக்குப் பிறகு, உடற்கூராய்வு செய்யாமல் எப்படி வீட்டுக்கு அனுப்பினார்கள்? அவருடைய மரணத்துக்கும், இறப்பதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரங்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார் புகழேந்தி.

சென்னை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஜெயந்தியிடம், புகழேந்தி முன்வைக்கும் விஷயங்கள் குறித்துக் கேட்டபோது, ``நடிகர் விவேக்குக்கு ஆஞ்சியோகிராம் செய்து பார்த்தபோது, 100 சதவிகிதம் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஒருநாளில் மட்டுமே அவரோடு சேர்த்து 830 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே. கண்டிப்பாக, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

``தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட பிறகு உயிரிழப்பவர்களின் உடலை உடற்கூராய்வு செய்வதன் மூலம் இறப்புக்கான காரணங்களை ஆதாரத்தோடு சொல்லிவிட முடியும் என்கிறார்களே. ஏன் அதைச் செய்வதில்லை'' என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

COVAXIN
COVAXIN
`வடிவேலுவுடன் நடிச்ச படத்துக்கு பாராட்டு, டிரெட் மில் பரிசு!' - விவேக் நினைவுகள் பகிரும் கோவை சரளா

அதற்கு அவர், ``AEFI விதிமுறைகளின்படி நிச்சயம் உடற்கூராய்வு செய்யவேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால், தடுப்பூசி போட்ட பிறகு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோருடைய உறவினர்கள் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை. அப்படி உறவினர்கள் தரப்பிலிருந்து மறுப்பு வரும்பட்சத்தில் உடற்கூராய்வு செய்வதில்லை. மற்றபடி, அனைவருக்கும் உடற்கூராய்வு செய்கிறோம்" என்று கூறினார். மேலும், விவேக்குக்கு உடற்கூறாய்வு செய்யாமல் விட்டதற்கும், அவருடைய உறவினர்கள் வேண்டாம் என்று தவிர்த்ததுதான் காரணமா என்று கேட்டதற்கு, ``அந்த விவரங்கள் இன்னும் எங்களுக்கு வரவில்லை. அவர் குறித்த தகவல்கள் வந்தபிறகே தெரியவரும்" என்று கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உயிரிழந்தால், மரணத்துக்கான காரணத்தை உரிய அறிவியல் ஆய்வுகளின் மூலம் அரசாங்கம் ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்து வெளியிடுவதுதான் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு