Published:Updated:

கொரோனா: `எங்களை பார்த்து சிரித்தார்கள்..!’ - ஆக்ஸிஜன் பிரச்னையை எப்படி சமாளித்தது `மும்பை மாடல்’?

கமிஷனர் இக்பால்
கமிஷனர் இக்பால்

`எங்களை பார்த்து சிரித்தவர்களுடன் கொரோனா ஆக்ஸிஜன் விவகாரத்தை சிறப்பாக கையாண்ட விதத்தை எப்படி பகிருந்து கொள்ள முடியும்’ என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. நாடு முழுவதும் ஆக்ஸிஜன் என்ற கோஷம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்பிரச்னையை மும்பை மாநகராட்சி சத்தமே இல்லாமல் சாதித்து காட்டியதோடு கொரோனாவையும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இப்போது எப்படி இது சாத்தியமானது என்று மத்திய அரசும், டெல்லி அரசும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

கமிஷனர் இக்பால்
கமிஷனர் இக்பால்

மும்பையில் ஆக்ஸிஜன் பிரச்னையை எப்படி சமாளித்தார்கள் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சஹல் அளித்த பேட்டியில் கூறியதாவது, ``கொரோனா பிரச்னையின் தீவிரம் குறித்து உண்மையிலேயே புரிந்து கொண்டால் மட்டுமே `மும்பை மாடல்’ மற்ற நகரங்கள் மற்றும் இதர மாநிலங்களில் பயனளிக்கும். இரண்டு மாதத்திற்கு முன்பு மத்திய அரசு பணியில் என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள் எனக்கு போன் செய்து எப்படி மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா இருக்கிறது என்று கேட்டு சிரித்தனர். யாராவது எங்களைப்பார்த்து சிரிக்கிறார்கள் என்றால் அவர்களுடன் எப்படி `மும்பை மாடலை’ பகிர்ந்து கொள்ள முடியும்.

பேரழிவுகள் ஏற்படும் போது கற்றுக்கொள்ளவோ அல்லது வேறு இடங்களில் பின்பற்றப்படும் மாடலை பின்பற்றவோ நேரம் இருப்பதில்லை. சுப்ரீம் கோர்ட் சொன்ன பிறகு டெல்லி மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் என்னுடன் பேசினார்கள். மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கும்படி நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அப்படி செய்வதால் மருத்துவமனைகளால் ஆக்ஸிஜன் இருப்பை கொண்டு சமாளிக்க முடியாமல் போகலாம். இருக்கின்ற ஆக்ஸிஜனை சரியாக பிரித்து கொடுத்தல் மற்றும் ஆக்ஸிஜன் கையிருப்பு வைத்தல் போன்றவை மிகவும் முக்கியம் என்பதை எடுத்துக்கூறினேன்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்
ஆக்ஸிஜன் சிலிண்டர்

மும்பையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் ஏப்ரல் 16ம் தேதி இரவு மாநகராட்சி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இரவோடு இரவாக அம்மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 168 நோயாளிகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றினோம். இதில் அனைவரும் காப்பாற்றப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு பிறகு ஆக்ஸிஜன் பயன்பாடு தொடர்பாக தனிக்கை செய்யும்படி அனைத்து மாநகராட்சி மருத்துவமனைக்கு சுற்றறிக்கை அனிப்பப்பட்டது.

நோயாளியின் ஆக்ஸிஜன் அளவு 94 ஆக இருக்கும் போது அளவுக்கு அதிகமாக ஆக்சிஜன் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டோம். ஆக்ஸிசிஜன் பிரச்னையை கையாள முதல்வர் உத்தவ் தாக்கரே எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். இதனால் என்னால் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடிந்தது. இது போன்ற சுதந்திரம் இநிதியா முழுக்க என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. கொரோனாவின் மூன்றாவது அலை வந்தாலும் அதனை சமாளிக்க மும்பை தயாராக இருக்கிறது. கூடுதலாக 5,500 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் ஆக்ஸிஜன் வசதி கொண்டவையாகும்” என்று தெரிவித்தார்.

மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை இப்போது வெகுவாக குறைந்திருக்கிறது. சரியான திட்டமிடல் மூலம் இதனை சாதித்து காட்டியிருக்கின்றனர் என்கிறார்கள். .

அடுத்த கட்டுரைக்கு