Election bannerElection banner
Published:Updated:

ஸ்டெர்லைட் இன்றியே நம்மால் சமாளிக்க முடியுமா... ஆக்ஸிஜன் உற்பத்தியில் நடப்பது என்ன? #Explainer

A health worker fixes an oxygen cylinder
A health worker fixes an oxygen cylinder ( AP Photo )

இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது? நோயாளிகளுக்குக் கொடுக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கப்படுவது எப்படி?

கோவிட்-19 தொற்றுநோயின் தீவிர பாதிப்புகளைச் சமாளிக்க இந்தியா முழுவதுமுள்ள மருத்துவமனைகள் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கொரோனா நோயாளிகளைக் குணமாக்குவதற்கான போராட்டத்தைவிட அவர்களுக்குச் சிகிச்சையளிக்கத் தேவைப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காகவே இந்திய மருத்துவமனைகள் போராட வேண்டியதாக உள்ளது. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் எப்பாடு பட்டாவது ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைத் தீர்த்து, மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

A COVID-19 patient wearing oxygen mask waits inside an auto rickshaw to be attended and admitted to a dedicated COVID-19 government hospital in Ahmedabad, India
A COVID-19 patient wearing oxygen mask waits inside an auto rickshaw to be attended and admitted to a dedicated COVID-19 government hospital in Ahmedabad, India
AP Photo/Ajit Solanki
கொரோனா: `மே 2-ம் தேதி வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை!’ - தேர்தல் ஆணையம் அதிரடி #NowAtVikatan

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது என்பது, இப்போதைய அவசர நிலைக்குச் சாத்தியமில்லாததாக இருக்கிறது. ஆகவே, இந்தியாவிலேயே ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளை உடனடியாக அரசு மேற்கொண்டாக வேண்டும். அதற்காக, டாடா போன்ற பல தனியார் பெருநிறுவனங்களை அரசு நாடிக்கொண்டிருக்கிறது. அதில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று. டாடா போன்ற பெருநிறுவனங்களிடம் க்ரையோஜெனிக் கன்டெய்னர்கள் இருப்பதால், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து, அவற்றைப் பரவலாக விநியோகிப்பது எளிது என்று கூறப்படுகிறது

சரி, இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது? நோயாளிகளுக்குக் கொடுக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கப்படுவது எப்படி?

ஆக்ஸிஜன் தயாரிப்பது எப்படி?

நாம் சுவாசிக்கும் காற்றிலிருக்கும் துகள்கள், மாசுப் பொருள்கள் எதுவுமின்றி, 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கலவையைக் கொண்ட சிலிண்டர்தான் ஆக்ஸிஜன் சிலிண்டர்.

நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, இவற்றை மட்டும் பிரித்தெடுக்கும் யூனிட்டுகளை காற்று பிரித்தெடுக்கும் யூனிட் (Air Seperation Unit, ASU) என்று கூறுவார்கள். இங்கு பல்லாயிரக்கணக்கான டன்கள் வாயுவைப் பிரித்தெடுப்பார்கள். இங்கு பிரித்தெடுக்கப்படும் பெரும்பான்மை வாயு, இரும்பு, எஃகு தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகிறது. அது, பன்னாட்டுச் சந்தையில் சுமார் 5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்டுள்ளது. உலகிலேயே ஆசியாதான் 40% காற்று பிரித்தெடுக்கும் யூனிட்டுகளையும் வாயுக்களுக்கான பெரிய சந்தையையும் கொண்டுள்ளது.

A Kashmiri worker moves an oxygen cylinder as they stock them inside a hospital in Srinagar
A Kashmiri worker moves an oxygen cylinder as they stock them inside a hospital in Srinagar
AP Photo / Mukhtar Khan

காற்றில் இருக்கும் பல்வகையான வாயுக்களை, திரவ வடிவத்துக்கு மாற்றி தனித்தனியே பிரித்தெடுக்கும் வேலையைத்தான் இந்த யூனிட்டுகள் செய்கின்றன. அதிலிருந்து, பிரித்தெடுக்கப்படும் ஆக்ஸிஜன் வாயுவை தனியே இணைக்கப்பட்டிருக்கும் அலுமினிய சிலிண்டர்களுக்கு அனுப்புகிறார்கள். பெரியளவிலான ஆக்ஸிஜன் வாயுவைச் சேமித்து வைக்க டாடா நிறுவனத்தைப்போல் க்ரையோஜெனிக் கன்டெய்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, மருத்துவமனைகள் பெரிய பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிக்கொண்டு, அவற்றின் மூலம் சிறு சிறு சிலிண்டர்களுக்கு விநியோகிக்கின்றன.

மருத்துவமனைகள் இதுபோன்ற பெரிய டேங்குகளை வாங்கி, அவற்றில் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பழக்கத்தையே பின்பற்றுகின்றன. தமிழகத்திலுள்ள பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளிலும்கூட, முந்தைய தி.மு.க ஆட்சியில் இதுபோன்ற ஆக்ஸிஜன் சேமிப்புக்கான வசதிகளே செய்துவைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளிலேயே ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள எந்தத் தொழில்நுட்ப வசதியும் இதுவரை கிடையாது. திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்குகளை (Liquid Oxygen Storage Tank) அமைத்து அதில் சேமிக்கப்படும் திரவ ஆக்ஸிஜனை மருத்துவமனையில் இருக்கும் மற்ற ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு அனுப்புகிறார்கள்.

Empty tankers are loaded on a train wagon at the Kalamboli goods yard in Navi Mumbai, Maharashtra state, India, before they are transported to collect liquid medical oxygen from other states
Empty tankers are loaded on a train wagon at the Kalamboli goods yard in Navi Mumbai, Maharashtra state, India, before they are transported to collect liquid medical oxygen from other states
AP Photo / Rafiq Maqbool

ஏன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது?

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. அதில் இருப்பதிலேயே பெரியது, 1.5 மீட்டர் உயரத்துக்கு, 60 கிலோ எடையுடன் இருக்கும். அதில், சுமார் 7,800 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சேமிக்கப்பட்டிருக்கும். சிகிச்சையில் இருக்கும் கோவிட்-19 நோயாளி ஒருவருக்கு ஒரு மணிநேரத்துக்கு 130 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆகவே, இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் அதிகபட்சம் சில மணிநேரத்துக்குதான் தாக்குப்பிடிக்கும்.

இப்போது இந்தியா இரண்டு பிரச்னைகளைச் சந்திக்கிறது. ஒன்று, ஆக்ஸிஜன் பற்றாக்குறை. மற்றொன்று, அதை விநியோகிப்பது.

அரசுத் தரப்பு வாதத்தின்படி, நாளொன்றுக்கு இந்தியாவில் 7,000 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசு ஆவணங்களின்படி, இப்போதைய தேவை ஒரு நாளைக்கு 8,000 டன். கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னால், நாளொன்றுக்கு 700 டன்களே நாட்டின் மொத்தத் தேவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த அளவு அதிகரித்துள்ளது. இருப்பினும், உண்மையில் இப்போதைய தேவை குறைத்து மதிப்பிடப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

oxygen plant outside a dedicated COVID-19 government hospital in Ahmedabad, India
oxygen plant outside a dedicated COVID-19 government hospital in Ahmedabad, India
AP Photo/Ajit Solanki

இன்று நாடு முழுக்க உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் பெரும்பாலும் மருத்துவமனைகளுக்கே அனுப்பப்பட்டாலும்கூட, நீர் சுத்திகரிப்பு மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து அனுப்பப்படுகிறது. அவையனைத்தும் தினமும் சுமார் 2,500 டன் ஆக்ஸிஜனை பயன்படுத்துகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் 4,500 டன் மட்டுமே தினமும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது. எனவே இப்போதைய பற்றாக்குறை நாளொன்றுக்கு 3,500 டன்னாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது நமக்கு சுமார் 8,000 டன் ஆக்சிஜன் தினமும் தேவைப்படுகிறது. இந்நிலையில், 50,000 டன் இறக்குமதி என்கிறார்கள். இது ஏழு நாள்களுக்கே போதாது. குறிப்பாக, மேன்மேலும் ஆக்சிஜன் தேவை உயர்ந்து வரும் நிலையில், இப்படி இறக்குமதி செய்து ஈடுகட்ட முடியாது. தட்டுப்பாடு மேலும் நீடிக்கும் என்றே தெரியவருகிறது.

இந்நிலையில், பலரும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்குப் பெரிய தொழிற்சாலைகளையோ பெருநிறுவனங்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை, சின்னதாக ஒரு சிமென்ட் ஷீட் போட்ட கூடாரத்திலேயே தயாரிக்க முடியும் என்று கூறி வருகின்றனர். இது சாத்தியமா என்பதைத் தெரிந்துகொள்ள விநாயகா மிஷன்ஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முனைவர்.பார்த்திபனிடம் பேசினோம். அவர், ``அரசு அனுமதி இருந்தால் ஒரு கூடாரத்திலேயேகூட ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். அத்தகைய சிறிய உற்பத்தி நிலையங்களில் நாளொன்றுக்கு 500 முதல் 750 டன் வரை உற்பத்தி செய்ய முடியும். இந்த திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும்போது, காற்று பிரித்தெடுக்கும் யூனிட்டுகள் மற்றும் மிகக் குறைந்த வெப்பநிலையில் திரவ ஆக்ஸிஜனை வைப்பதற்கான கட்டமைப்புகள் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

People stand in queues to refill oxygen in cylinders in New Delhi, India
People stand in queues to refill oxygen in cylinders in New Delhi, India
AP Photo
`லவங்கம், ஓமம், கற்பூரம் மோந்தால் ஆக்ஸிஜன் அளவு சீராகுமா?' - வாட்ஸ்அப் ஃபார்வேர்டும் உண்மையும்

மேலும், மருத்துவமனைகளிலேயே Pressure Swing Adsorption என்று கூறுகிறார்களே அது சாத்தியமா என்று கேட்டபோது, ``Pressure Swing Adsorption என்ற செயல்முறையின் வழியே ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். ஆனால், அது காற்று பிரித்தெடுக்கும் யூனிட்டுகளில் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவுக்குத் தூய்மையாக இருக்காது. அதுமட்டுமன்றி, மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் இருக்கும் வாயு 99% தூய்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நோயாளிகளுக்கு வழங்க முடியும். இல்லையேல் அதை தொழிற்சாலை தேவைகளுக்குத்தான் பயன்படுத்த முடியும்" என்று கூறினார்.

விழுப்புரத்தில் ஏற்கெனவே இத்தகைய சிறிய ஆக்ஸிஜன் உற்பத்தி யூனிட்டுகள் செயல்படுகின்றன. உடனடியாக இத்தகைய சிறு சிறு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை மருத்துவமனைகளுக்கு அருகிலேயே தற்காலிகமாக அமைத்து, உயிர் வளி உற்பத்தியை விரைவுபடுத்தி, பற்றாக்குறையைத் தீர்க்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சிறு உற்பத்தி நிலையங்களை அமைத்து அரசே தயாரிக்க முடியும் என்கிறபோது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துதான் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு