Published:Updated:

கொரோனா தடுப்பு… தாராவி முதல் கண்ணகி நகர் வரை சாதித்த வரலாறு!

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

இந்தியாவில் `வுகான்’களாக மாறும் என்று அச்சுறுத்தலை ஏற்படுத்திய மும்பை தாராவி முதல் சென்னை கண்ணகி நகர் வரையிலான பல பகுதிகள் கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன.

ஆரம்பத்திலிருந்து இப்போது வரை, இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனா பாதிப்பில் முதலிடம் வகித்துவருகிறது. அங்கு, ஒரு லட்சத்து 30,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்; 6,000 பேர் மரணமடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் மகாராஷ்டிராவில் தீவிரமடைந்துவரும் நிலையில், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்திய தாராவியில் கொரோனா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தாராவி
தாராவி

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி, மும்பை நகரில் அமைந்துள்ளது. மும்பை நகரின் மையப்பகுதியில் மட்டுங்கா, சயான், மாஹிம், பந்த்ரா ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தாராவி அமைந்துள்ளது. அங்கு, சுமார் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக மும்பை சென்ற தமிழர்கள்தான் அங்கு பெருமளவில் வசிக்கிறார்கள். கமல்ஹாசன் நடித்த `நாயகன்’, ரஜினிகாந்த் நடித்த `காலா’, ஆஸ்கர் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் தாராவியைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பலவிதமான நோய்த்தொற்றுகளை தாராவி எதிர்கொண்டுள்ளது. ஆனாலும், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது, மக்கள் நெருக்கம் மிக அதிகமாக இருக்கும் தாராவியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பரவலாக எழுந்தது. அங்கு எப்படி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது என்பது புரியாமல், பிர்ஹாம் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் திகைத்தனர். ஆனாலும், `வைரஸைத் துரத்தியடி’ என்று சில உத்திகளை உடனடியாக வகுத்துக்கொண்டு களமிறங்கிய அதிகாரிகள், தாராவியிலிருந்து வைரஸைத் துரத்தியடித்து மத்திய அரசு உட்பட பல தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

தாராவியில், மே மாதம் 4.3 சதவிகிதமாக இருந்த வைரஸ் தொற்று, இப்போது 1.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதாவது, வைரஸ் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை மே மாதம் சராசரியாக 43 ஆக இருந்தது. தற்போது 19 ஆகக் குறைந்துள்ளது. மும்பையின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தாராவியில் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் மிகவும் குறைவு. அங்கு 80 சதவிகித மக்கள் பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்கள். அங்கு பத்துக்கு பத்து அளவுக்கு கொண்ட அறைகளில் 8 முதல் 10 பேர் வரை வசிக்கிறார்கள். எனவே, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது சாத்தியமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு பகுதியில் வைரஸைக் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய சாதனை. இது எப்படி சாத்தியமானது?

``தொற்று வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், வைரஸைத் துரத்தியடிக்கும் உத்தியைக் கையாண்டோம். இதுபோன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில், வைரஸைத் துரத்தியடிக்கும் உத்தி மட்டுமே கைகொடுக்கும் என்று தீர்க்கமாக நம்பினோம். ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டி அனைவருக்கும் உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் சோதனைகளை நடத்தினோம். கொரோனா அறிகுறி இருப்பவர்களை அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் தங்கவைத்தோம். இங்கு, `ஸ்போர்ட்ஸ் கிளப்'புகள் நிறைய உண்டு. அவற்றைத் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றினோம். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களை அமைத்தோம். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து உரிய திட்டமிடல்களுடன் செய்தோம்.

தாராவி
தாராவி

குறிப்பாக, ரம்ஜான் நோன்பு காலத்தில், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களுக்கு தேவையான பழங்களும் உணவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதிசெய்தோம். இதன் மூலமாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றோம். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். எனவேதான், கொரோனா வைரஸைத் துரத்தியடிக்கும் நடவடிக்கையில் எங்களால் வெற்றிபெற முடிந்தது” என்று பிர்ஹாம் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தாராவியைப் போலவே, சென்னைக்கு அருகே அமைந்துள்ள கண்ணகி நகரிலும் கொரோனா வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தொடர்பாக தினமும் வெளியிடப்படும் புள்ளிவிவரம் தமிழகத்தையே அலறவைக்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இத்தகைய சூழலில், கண்ணகி நகரில் கொரோனா பரவல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறது.

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

சென்னை நகரில் கூவம் மற்றும் அடையாறு கரையோரம் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர். கண்ணகி நகரில் சுமார் ஒரு லட்சத்து 30,000 பேர் வசிக்கிறார்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்குச் சாத்தியமற்ற இந்தப் பகுதி, தமிழ்நாட்டின் வுகானாக மாறும் என்று அஞ்சப்பட்டது. ஆனாலும், ஆரம்பத்திலேயே அதிகாரிகள் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததால், தற்போது அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஏப்ரல் 30-ம் தேதி கொரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்தது. தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெ.ராதாகிருஷ்ணன்
ஜெ.ராதாகிருஷ்ணன்

இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளரும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நாம் பேசியபோது, "கண்ணகி நகரில் ஆரம்பத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்தபோதிலும், அதைக் கட்டுப்படுத்துவதற்குத் தீவிரமான நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளும் தன்னார்வ அமைப்பினரும் மேற்கொண்டனர். தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டன. முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைக்கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் அவசியம் குறித்து அங்கு தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

காய்ச்சல் ஏற்பட்ட நபர்களை வீடுவீடாகச் சென்று கண்டறிவதற்காக 150 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு மக்களின் ஒத்துழைப்பு இருந்தது. அரசு சொன்ன அனைத்து விதிமுறைகளையும் மக்கள் கடைப்பிடித்தார்கள். இப்போது அங்கு கொரோனா தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?

இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் பிடவா நகரிலும் வெற்றிகரமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகளால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. ஜூன் 21 நிலவரப்படி அங்கு மொத்தம் 14,536 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அருகே உள்ள டெல்லியுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. டெல்லியில் 56,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

ஜூன் 21 நிலவரப்படி டெல்லியில் கொரோனாவால் மரணமடைவோரின் சதவிகிதம் 3.72 சதவிகிதம். ராஜஸ்தானில் குணமடைவோரின் சதவிகிதம் 77.5 சதவிகிதமாகவும் மரணமடைவோரின் விகிதம் 2.3 சதவிகிதமாகவும் உள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தாண்டி நாட்டின் பல பகுதிகளில் கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நம்பிக்கையை அளிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு