Published:Updated:

இப்படித்தான் மறைக்கப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சி நிலவரம்; அரசின் பதில் என்ன?

அரசு உதவி மட்டுமல்ல, கொரோனாவால் இறந்தவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவ முன்வந்தாலும் அவர்களிடம் என்ன சான்றை அளிக்க முடியும் என்று மக்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் இல்லை.

* மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பெண்மணி அவர். அவரின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருபது நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். இறப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் `நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்ததால் அதை கொரோனா மரணமாகக் கணக்கில் கொண்டுவரவில்லை. ஐந்து வயதுக் குழந்தை மற்றும் வயிற்றில் மூன்று மாத சிசுவோடு பரிதவிக்கும் அந்தப் பெண், தமிழக அரசு அறிவித்துள்ள உதவிகள் தனக்குக் கிடைக்குமா என அப்பாவியாகக் கேட்கிறார்.

* தஞ்சாவூரைச் சேர்ந்தவர் இளஞ்சியம். அவரின் கணவர் முருகேசன் (43) கொரோனாவால் பாதிக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் மரணமடைவதற்கு சில நாள்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், `நெகட்டிவ்’ என ரிசல்ட் வரவே அது கொரோனா மரணத்தில் சேர்க்கப்படவில்லை. இறப்புக்கான காரணமாகக் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் Severe Acute Respiratory Infections (SARI), டைப் 2 டயாபடிஸ் (T2D), சுவாச செயலிழப்பு (respiratory failure), வைரல் நிமோனியா என்று குறிப்பிட்டுள்ளனர்.

இறப்பு
இறப்பு

- ஒன்றல்ல இரண்டல்ல; கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்து பதினைந்து நாள்களுக்கு மேல் சிகிச்சை பெற்று இறந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இறப்புக்கான காரணமாக இப்படியான காரணங்களைத்தான் குறிப்பிடுகின்றனர். `கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் நிலையில், இன்னொருபுறம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகள் இவர்களுக்குக் கிடைக்குமா… கிடைக்காதா என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. அரசு உதவி மட்டுமல்ல, கொரோனாவால் இறந்தவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உதவ முன்வந்தாலும் அவர்களிடம் என்ன சான்றை அளிக்க முடியும் என்று மக்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் இல்லை.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், `இறப்பை பதிவு செய்வது மட்டும்தான் எங்களது பணி; இறப்புச் சான்றிதழில் மரணத்துக்கான காரணம் குறிப்பிடப்பட மாட்டாது. மருத்துவமனையில் வழங்கப்படும் மரண அறிக்கையில்தான் அந்த விவரங்களெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்’ என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டால், `சம்பந்தப்பட்ட நோயாளி என்ன காரணத்தால் இறக்கிறார்’ என்று சிகிச்சையளிக்கும் மருத்துவர்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்று கையை விரிக்கின்றனர். இப்படியான சூழலில்தான் சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இரு மனுக்களும் அதில் நீதிபதிகள் கூறிய கருத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றன.

4 லட்சம் இழப்பீடு; இறப்புச் சான்றிதழ் வழங்க சீரான கொள்கை!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சீரான கொள்கையை வகுக்குமாறும் மத்திய மாநிலங்களுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோரின் முன்பு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்களில் ஒருவரான ரீபக் கன்சலுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பி.உபாத்யாய், ``கொரோனா காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்கின்றன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி, பேரிடரால் மரணிப்பவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது இந்திய அரசு. ஆனால், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணம் எதுவும் அரசால் அறிவிக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமல்லாது, கொரோனாவால் நிகழும் மரணங்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு கொரோனா மரணம் என்று இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். தகுந்த ஆவணங்கள் இருந்தால்தான் அவர்கள் பிரிவு 12 -ன் கீழ் இழப்பீடு கோர முடியும்” என்றார். மேலும் கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.

``இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மாதிரியான கொள்கை ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா?” என்று மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ``முறையான ஆவணம் அல்லது இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான ஒரே மாதிரியான கொள்கை இல்லையெனில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எந்த இழப்பீட்டினையும் பெற முடியாமல் போய்விடும்.

Law (Representational Image)
Law (Representational Image)
Photo by Bill Oxford on Unsplash

இறப்புச் சான்றிதழ் வழங்குவது குறித்து ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக மாநில அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே, நீங்கள் இதுதொடர்பான ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களை நீதிமன்றத்தில் முன்வைத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சீரான கொள்கையைப் பற்றியும் விளக்குங்கள்” என்றனர்.

அப்போது ``நுரையீரல் தொற்று அல்லது இதய பிரச்னை காரணமாகப் பலர் இறக்க நேரிடலாம். ஆனால், அந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக இருக்கலாம். இது இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவதில்லை” என்று நீதிபதி ஷா சுட்டிக்காட்டினார். கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான சீரான கொள்கை குறித்தும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படி நிவாரணம் வழங்குவது குறித்தும் மத்திய அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மரண எண்ணிக்கையை மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்!

இதுதொடர்பாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, ``நீதிபதி ஷா சுட்டிக்காட்டிய விஷயம் மிகவும் முக்கியமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருபது நாள்களுக்கும் மேலாக சிகிச்சைபெற்று உயிரிழப்பவர்கள் எவருக்கும் கொரோனா மரணம் என்று சான்றளிக்கப்படுவதில்லை. மாறாக நுரையீரல் தொற்று, இதய பிரச்னை அல்லது நிமோனியா காய்ச்சல் என்றுதான் குறிப்பிடுகின்றனர். அதுவும் இறப்புச் சான்றிதழில் அதைக் குறிப்பிடுவதில்லை. `மரண அறிக்கை’ என்று மருத்துவமனையில் வழங்கப்படும் ஒரு தாளில் எழுதித் தருகின்றனர். பல மருத்துவமனைகளில் அதில் முறையான சீல் கூட வைத்துக்கொடுப்பதில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சொந்தத் தொகுதியான சைதாப்பேட்டை தொகுதிக்குப்பட்டவர்களுக்கே இந்த நிலைதான் இருக்கிறது.

ஜி.செல்வா
ஜி.செல்வா

இதனால் இழப்பீடு தொடர்பான விஷயங்களுக்கு அணுக முடியாது. கொரோனா பாசிட்டிவ் ஆகி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் ஒருவர் சிலநாள்கள் கழித்து கொரோனா `நெகட்டிவ்’ ஆகி இறக்க நேரிட்டாலும் கூட அதை கொரோனா மரணமாகத்தான் அறிவிக்க வேண்டும். இறக்கும்போது வேண்டுமானால் அவர் உடலில் கொரோனா வைரஸ் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் இறப்புக்கு கொரோனாதான் காரணம். நுரையீரல் தொற்றோ… கடுமையான மூச்சுப் பிரச்னையோ எதனால் ஏற்படுகிறது... கொரோனாவால்தானே? அப்படியிருக்கும்போது அதை மறைப்பது எதற்காக?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் குறிப்பிட்ட சில நாள்கள்தான் கொரோனா வைரஸ் இருக்கும். சிலநாள்கள் கழித்து வைரஸ் போய்விடும். ஆனால், கொரோனா வைரஸ் உருவாக்கிய சேதாரங்கள் உடலில் இருக்கும். அதுதான் மரணத்தை ஏற்படுத்துகிறது. அப்படியான சூழலில், கொரோனா மரணம் என்று சான்றிதழ் என்று தர மறுப்பது அநியாயம். நாள்தோறும் வெளியிடப்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலமைச்சர் சொன்னதுபோல இது வெளிப்படையான மக்கள் நலன் சார்ந்த அரசாக இருந்தால் இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு முழுக்க உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இறந்தவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும். அதில் அனுமதிக்கப்படும்போது கொரோனா பாசிட்டிவ் ஆகியிருந்தவர்களைக் கணக்கெடுத்து அனைவரும் கொரோனாவால் மரணமடைந்தவர்களாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தொற்றின் உண்மையான வீரியத்தைக் கண்டறிய முடியும். அதிகளவில் மரணங்கள் நிகழ்ந்தால் அது அரசின் தோல்வியாகப் பார்க்கப்படுமோ, அதிக மக்களுக்கு நிவாரணம் தர வேண்டியிருக்குமோ என்று இதை மறைக்கக் கூடாது.

இந்தப் பேரிடரைப் புரிந்துகொள்வதற்கும் அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஒரு தொற்று வராமல் தடுப்பதற்கும் இந்த இறப்புக்கான காரணம் (cause of death) என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை பணம் செலவழிக்கக் கூடிய விஷயமாக அணுகாமல், நம் மக்களுக்குப் பேரிடர் காலத்தில் துணையாக இருப்பதுதான் அரசின் கடமை என்ற அறப் புரிந்துணர்வுடன் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

இப்படியெல்லாம் மறைமுகமாக மரணங்களை மறைத்தே 3 லட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் கணக்கு காண்பிக்கப்படுகின்றன என்றால் உண்மையில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கும்? நினைத்தாலே திக்கென்று இருக்கிறது. இப்படி உண்மையை மறைப்பதும் பேரிடராக அறிவித்துவிட்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்து மௌனம் சாதிப்பதும் சரியான நடவடிக்கை கிடையாது. நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசாங்கமும் மக்களின் நிலை அறிந்து செயலாற்ற வேண்டும். வெறுமனே அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் அது சென்று சேர வேண்டிய எல்லா மக்களுக்கும் சேரும் வகையில் நடைமுறைப்படுத்துவதும் மிகவும் முக்கியம்” என்றார்.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

தெளிவாக அறிவிக்கவில்லை என்றால் குழப்பமே மிஞ்சும்!

அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் லோகநாதன், ``கொரோனா பெருந்தொற்று என்பது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி பேரிடர் மேலாண்மைச் சட்டம் பிரிவு 12 உட்பிரிவு 3-ன் படி கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்கள் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் பெற சட்டப்படி தகுதிபெறுகின்றன. ஆனால், அரசு அதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நாட்டின் மோசமான பொருளாதார நிலையைக் காரணம் காட்டி, எத்தனை பேருக்கு நிவாரணம் வழங்க முடியும் எனக் கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கொரோனாவால் மரணித்த குடும்பங்களின் பொருளாதாரத்தையும் அரசு பார்க்க வேண்டும்.

முன் களப்பணியாளர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் எனக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த நிவாரணங்கள்கூட அதிகாரபூர்வமாக கொரோனா மரணம் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குத்தான் கிடைக்கும். இங்கு கொரோனாவால் நிகழும் மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கொரோனா மரணங்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் 23 வயதை எட்டும்போது இந்தத் தொகை வழங்கப்படும் எனவும் பி.எம் கேர் நிதியிலிருந்து இந்தத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயதை எட்டும்வரை மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவர்களின் உயர்கல்விக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டு அதற்கான வட்டியை அரசே செலுத்தும் எனவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு, அவர்கள் 18 வயதை எட்டும்வரை காப்பீட்டுத்தொகையை அரசே வழங்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு என இரு அரசுகளின் உதவியையும் பெற முடியுமா அல்லது ஏதேனும் ஒன்றுதானா… எனில் அதற்கான விதிகள் என்ன?

லோகநாதன்
லோகநாதன்

இதற்கான சான்றிதழ்கள் உறவினர்களிடம் கேட்கப்படுமா? அவர்கள் பெற்றோர்கள் கொரோனா காரணமாக மரணமடைந்திருந்தாலும் இறப்பு அறிக்கையில் கொரோனா மரணம் என்று குறிப்பிடவில்லை என்றால் அவர்களுக்குப் பலன் கிடைக்குமா? இப்படியெல்லாம் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். நிவாரணமோ உதவித் தொகையோ அறிவிக்கும்போதே அதற்கு யாரெல்லாம் தகுதி பெறுவார்கள், அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன, என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன் அந்த ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிடும்போது அதில் குழப்பமே மிஞ்சும். எனவே, தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தித் தீர்வை உருவாக்க வேண்டும்” என்றார்.

இறப்புச் சான்றிதழ் தொடர்பான மக்களுக்கு இருக்கும் குழப்பங்கள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் பேசியபோது, ``உடனடியாக என்னால் எதுவும் சொல்ல முடியாது. இதுதொடர்பாக ஆராய்ந்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு