Published:Updated:

#COVID19: ஊர் அடங்கட்டும்; உலகம் இயங்கட்டும்... தப்பிப் பிழைக்கும் தந்திரம் இதுவே!

பால் விற்பனையாளர்
News
பால் விற்பனையாளர்

கொரோனாவைப் பார்த்துப் பயப்படுவதா... அல்லது தொடர் ஊரடங்கால் ஏற்படப்போகும் விளைவுகளை நினைத்துப் பயப்படுவதா... `To be or Not to be' என்ற இடத்திற்குக் கொரோனா நம்மை அழைத்து வந்து நிறுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்னையை நாம் எப்படி அணுக வேண்டும். உலகம் எப்படி இதைக் கையாள்கிறது?

தொழிலாளர் தினத்திற்குப் பிறகாவது... தொழிலாளர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் பாயுமா... தொழிற்சாலைகளின் சங்கொலி சத்தம் மீண்டும் கேட்குமா... வீட்டை விட்டு வெளியே சென்று நான்கு காசு சம்பாதித்து பிள்ளை பெண்டாட்டிக்கு கஞ்சி ஊற்ற முடியுமா... என்பது போன்ற ஏக்கம் நிறைந்த கேள்விகள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகின்றன.

வாழ்கையா... வாழ்வாதாரமா?

இன்னொருபுறம், To be or Not to be... `வாழ்வதா... சாவதா...’, `வாழ்கையா... வாழ்வாதாரமா... என்று முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு நம்மையும், நம் நாட்டின் தலைவர்களையும், கொரோனா தள்ளியிருக்கிறது என்பதே கசப்பான உண்மை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்க்கும்போது... சமூகப் பரவல் என்ற மூன்றாம் நிலையை அடைந்துவிட்டோமோ என்ற பயம் அடிநெஞ்சைக் கவ்வுகிறது. கோவிட்-19, இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ என்ற அச்சம், வயதான தாய்-தந்தையரையும், தாத்தா-பாட்டிகளையும், கண்ணீர் நனைந்த கண்களால் பதட்டத்தோடு பார்க்க வைக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
wheat Harvesting in Jammu
wheat Harvesting in Jammu
AP Photo/ Channi Anand

பணம், படிப்பு, பதவி... என எதுவுமே முக்கியமில்லை என்று முடிவெடுத்ததால்தான்… பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம், கோயில், குளம், கல்யாணம், கச்சேரி, சாவு, வாழ்வு என்று எதற்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே நாம் அடைந்து கிடக்கிறோம்.

இன்னொருபுறம், `விலகியே இரு; வீட்டுக்குள்ளேயே இரு', `வீட்டிலிருந்தே வேலையைச் செய்' போன்ற அறிவுறுத்தல்கள்... ஒரு சிலருக்கு உறுத்தல்களாகவே மாறிவிட்டன. `வீடு இருந்தால்தானே வீட்டுக்குள்ளே இருக்க முடியும். வீடே இல்லாத நாங்கள் என்ன செய்வது?' என்பது போன்ற எதிர்ப்பு குரல்கள் வருகின்றன. கட்டட வேலை செய்கிறவர்களும் கடைகளில் வேலை செய்கிறவர்களும், மேலும் பல அமைப்புசாரா தொழிலாளர்களும், ``நாங்கள் எப்படி வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது'' என்று கவலை பொங்க கோபமாக கேட்கிறார்கள். இவர்களின் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

``கொரோனாவுக்குப் பயந்து, இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டுக்குள்ளேயே ஒளிந்திருப்பது? வீட்டு வாடகையில் இருந்து, மருந்து மாத்திரைகளுக்காக ஆகும் செலவுவரை எல்லாவற்றையும் சமாளிக்க, வேலைக்குப் போனால்தானே காசு வரும்'' என்று வெளியே செல்ல அடித்தட்டு மக்களும், நடுத்தட்டு மக்களும் திமிறிக் கொண்டிருக்கிறார்கள். ``என்னை நம்பி இருக்கும் ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எப்படி மாதா மாதம் சம்பளம் கொடுப்பது... கொடுத்த கடனை எப்போது வாங்குவது. வாங்கிய கடனை எப்போது கொடுப்பது'’ என்பது குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலை முதலாளிகள் மற்றும் வணிகர்களின் குமுறலாக இருக்கிறது.

COVID-19 testing center in New Delhi
COVID-19 testing center in New Delhi
AP Photo / Manish Swarup

சாலை விபத்து நடக்கிறது என்பதற்காக சாலையை மூடலாமா?

``கோவிட் 19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவையே உதாரணம் எடுத்துக் கொண்டால், அங்கே 600 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்தால்... 100 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகிறது. 6 பேர் உயிர் இழக்கிறார்கள். அதுவே, நம் நாட்டை எடுத்துக் கொண்டால்... இங்கே 600 பேருக்கு டெஸ்ட் செய்தால்... 27 பேருக்குத்தான் தொற்று உறுதியாகிறது. ஒருவர் உயிர் இழக்கிறார். ஆனால் இதை இப்படி பார்த்து மனதை தேற்றிக் கொள்ள முடியாது. ஏனென்றால் எண்ணிக்கை ரீதியாக பார்க்கும் போது நமக்கு பகீர் என்கிறது. ஆம். கொரோனாவால் நம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை கடந்திருக்கிறது. ஆயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 25. சந்தேகமேயில்லை. நாம் இழந்திருப்பது விலைமதிப்பில்லாத உயிர்கள். ஆனால் இந்தச் சூழ்நிலையில் உணர்ச்சிவசப்படாமல் ஒரு ஒப்பீட்டை செய்தாக வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் புகையிலையினால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா - பத்து லட்சத்துக்கும் மேல். வருடா வருடம் நம் நாட்டில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் அதிகம். பல்வேறு காரணங்களுக்காக 2018-ம் ஆண்டு தங்கள் உயிர்களை மாய்த்து கொண்டவர்களின் எண்ணிக்கையோ 1.34 லட்சம். காசநோய்க்கு 2018-ம் ஆண்டு மட்டும் 4.4 லட்சம் பேர் பலியானார்கள். இந்த நோய், ஐந்து பேரை தாக்கினால் ஒருவர் உயிர் இழந்துவிடுகிறார்.

``சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. அதனால் நாட்டில் இருக்கும் சாலைகளை எல்லாம் மூடுங்கள்" என்று யாராவது சொன்னால், சாலை விபத்துக்களை தவிர்க்க அதுவா தீர்வு? ஆனால் கொரோனா விஷயத்தில் இப்படித்தான் நடந்துகொள்கிறோம்'' என்பது ஊரடங்கு போதும் என்கிறவர்களின் வாதம்.

``கொரோனாவில் இருந்து காப்பாற்றுகிறோம் என்று சொல்லி – அரசு, எல்லோரையும் மேலும் சில காலத்துக்கு வீட்டுக்குள் முடக்கிவிட்டதால், ஏற்கெனவே இருக்கின்ற வேலை இல்லாத் திண்டாட்டம் இன்னும் தலை விரித்தாடும். பட்டினிச் சாவுகள் ஏற்படும். அப்படி ஏற்படும் பட்டினிச் சாவுகள், கொரோனா சாவுகளைவிட அதிகமானதாக இருக்கும். உணவுப் பொருட்களுக்காகக் கடைகள் சூறையாடப்படும். கொலை, கொள்ளைகள் வரை அது போகும். சமூக ஒழுங்கு சீர்குலையும். ஊருக்கு ஊர் துப்பாக்கிச் சூடு நடக்கும். உயிர்ப் பலிகள் - கணக்கு வழக்கு இல்லாமல் உயரும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அப்போது ராணுவத்தை வரவழைக்க வேண்டியிருக்கும்'' - ஊரடங்கின் நீட்சியாக இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர்கள் சொல்லுகின்ற விஷயங்களை `அதீத கற்பனை', என்று கடந்து போய்விட முடியவில்லை.

Free food distribution in Ahmedabad
Free food distribution in Ahmedabad
AP Photo / Ajit Solanki

உயிரைப் பறிக்கும் கொரோனாவைப் பார்த்துப் பயப்படுவதா... அல்லது தொடர் ஊரடங்கால் ஏற்படப் போகும் விளைவுகளை நினைத்துப் பயப்படுவதா... To be or Not to be... என்ற இடத்திற்குக் கொரோனா நம்மை அழைத்து வந்து நிறுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

இந்தப் பிரச்சனையை நாம் எப்படி அணுக வேண்டும். உலகம் எப்படி இதைக் கையாள்கிறது? கொரோனாவைக் கட்டுப்படுத்த மூன்றே வழிகள்தான் இருக்கின்றன. அது

1.TEST

2.TEST

3.TEST என்று உலக சுகாதார மையம் சொல்கிறது. அதை தென்கொரியா போன்ற நாடுகள் வேதமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தின; ஓரளவு வெற்றியும் பெற்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த வழிமுறையைப் பின்பற்றின. எந்த அளவுக்கு அங்கே பரிசோதனைகள் நடக்கின்றனவோ, அந்த அளவுக்கு அங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது.­ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் பத்து லட்சத்தையும், உயிர் இழந்தோரின் எண்ணிக்கை ஐம்பாதாயிரத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவின் வர்த்தகம், வணிகம், நிதித்துறை என அனைத்துக்குமே தலைநகர் நியூயார்க்தான். இப்போது அது கொரோனாவின் ஊற்றுக்கண்ணாகவே மாறிவிட்டது. நியூயார்க்கில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருவிழா கணக்காக எப்போதும் இசை, நாட்டியம் என்று வண்ண விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உயிர்ப்பான நகரம், இன்று மரண ஓலங்களாலும், சவ வண்டிகளின் தொடர் சைரன் ஒலிகளாலும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. எந்தவித இறுதிச் சடங்குகளும் இன்றி, கொரோனா நோயாளிகளின் சடலங்களை அங்கே துப்புரவுப் பணியாளர்களே அடக்கம் செய்கிறார்கள்.

அங்கே இத்தனை அவலங்கள் அரங்கேறினாலும், ``ஊரடங்கு கூடாது. வணிகக் கூடங்களைத் திற. வேலைக்குச் செல்ல அனுமதி கொடு. பட்டினி போட்டுச் சாகடிக்காதே" என்று அங்கே ஒவ்வொரு ஊரிலும் உரிமைக் குரல் எழுப்பியபடி, மக்கள் ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறார்கள். பல மாகாணங்களின் ஆளுநர்களும் ஆட்சியாளர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், கொரோனாவுக்காகக் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் போவதாக அறிவிக்கிறார். பல மாநில கவர்னர்களும், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களும் ஊரடங்கை ஆதரிக்க... ஜனாதிபதி டிரம்ப்பும் கணிசமான பொதுமக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்து உலகம் உறைந்து போய் நிற்கிறது.

US President Donald Trump
US President Donald Trump
AP Photo / Evan Vucci

ஐரோப்பாவின் திட்டம் என்ன?

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு ஸ்பெயின். சின்னஞ்சிறு நாடான அந்த நாட்டில் சுமார் 2.3 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 23,000 -த்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். கொரோனா தொற்று அந்த நாட்டில் கோரத்தாண்டவம் ஆடியபோதும்கூட, அந்த நாடு பதறவில்லை. இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்வீடனும் இதேப் போலத்தான். அது தன் நாட்டின் எல்லைகளை வெளிநாட்டவர்களுக்கு மூடவில்லை. பல கல்வி நிலையங்களையும் வியாபார மையங்களையும் திறந்தே வைத்திருந்தது. சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு, மூத்த குடிமக்களை மட்டும் அது கேட்டுக் கொண்டது. `மக்களின் உயிரோடு இப்படி விளையாடலாமா?', என்று உலகின் பல்வேறு திசைகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி ஆக்ரோஷமாக இப்படி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஆனால் ஐரோப்பாவின் கவனம் முழுதும், Exit Plan - அதாவது `தப்பிக்கும் திட்டம் என்ன?' என்ற புதிருக்கு விடை கண்டுபிடிப்பதிலேயே நிலைகுத்தி நிற்கிறது. சுவிட்சர்லாந்து கொரோனா பற்றி தீவிரமாக ஒரு சில ஆய்வுகளை மேற்கொண்டது.

Indian Farmers
Indian Farmers
AP Photo: Anupam Nath

கொரோனாவுக்கு பேதம் உண்டா?

``ஏழை-பணக்காரன், ஆண்-பெண் என்று எந்தப் பேதமும் கொரோனாவுக்கு இல்லை என்று சொன்னாலும், கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரி எல்லா நாடுகளை ஒரே மாதிரி தாக்கவில்லை. குளிர்ப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத்தான் அது அதிகமாகத் தாக்குகிறது. இதுவே வெப்பமான நிலப்பரப்புகளில் அமைந்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதன் தாக்கம் குறைவாகத்தான் காணப்படுகிறது.

அதேபோல பிசிஜி என்கிற தடுப்பூசி போடப்படும் வழக்கம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளைவிடவும், அந்தப் பழக்கம் இல்லாத அமெரிக்கா போன்ற நாடுகளைத்தான் கொரோனா அதிகமாகத் தாக்குதிறது.''

ஆக, கொரோனா என்பது ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு மாதிரி வினைபுரிகிறது என்பதுதான் சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.

குளிர்ப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புமிக்க நாடுகளில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சீனா, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதற்கு அடுத்தபடியாக கொரோனா கடுமை காட்டியிருக்கிறது. அரைக்கோளத்துக்கு, அதாவது சதர்ன் ஹெமிஸ்பியரில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் ஒப்பீட்டு அளவில் பார்த்தால், அவை குறைந்த அளவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இருப்பதிலேயே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சிங்கப்பூர் போன்ற வெப்பமான நாடுகளில்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவாக இருக்கிறது.
குளிர்ப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற செல்வச் செழிப்புமிக்க நாடுகளில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சீனா, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதற்கு அடுத்தபடியாக கொரோனா கடுமை காட்டியிருக்கிறது. அரைக்கோளத்துக்கு, அதாவது சதர்ன் ஹெமிஸ்பியரில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் ஒப்பீட்டு அளவில் பார்த்தால், அவை குறைந்த அளவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இருப்பதிலேயே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சிங்கப்பூர் போன்ற வெப்பமான நாடுகளில்தான் கொரோனாவின் பாதிப்பு குறைவாக இருக்கிறது.

பயத்தை கண்டே பயம் கொள்ள வேண்டும்.!

``கொரோனாவைவிட மிகப் பெரிய எதிரி ஒன்று உண்டென்றால், அது பயம்தான். அது ஒரு சாதாரண ஃப்ளூதான். அதன் செயல்பாடுகள் புதிதாகவும் புதிராகவும் இருப்பதால்தான், உலகம் அதைக் கண்டு மிரள்கிறது. பல நாடுகள் ஊரடங்கு என்ற ஒற்றை தீர்வை தீவிரமாக செயல்படுத்த நிர்பந்திக்கப்பட்டன. ஆரம்பத்தில் இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள் கோவிட் சவாலை பதட்டமில்லாமல் நிதானமாகத்தான் கையாண்டன. 'மக்களுக்கு இந்தக் கிருமியை எதிர்த்து போரிடும் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) வந்துவிட்டால், பாதிப்பு அதிகம் இல்லாமல் இந்த நோயைக் கடந்துவிடலாம். அதனால் ஊரடங்கெல்லாம் வேண்டாம். சமூக இடைவெளிமட்டும் போதும்' என்பதுதான் இங்கிலாந்தின் நம்பிக்கையாகவும் திட்டமாகவும் இருந்தது. இங்கிலாந்து அரசுக்கு யோசனைகள் சொல்லும் இம்ப்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன்கூட இதை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டது. ஆனால் அதன் பிறகு அது வெளியிட்ட ஆய்வறிக்கை இங்கிலாந்தின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. கோவிட் 19 தொற்றுக்கு இங்கிலாந்தில் வரும் குளிர் காலத்திற்குள் ஐந்து லட்சம் பேரும், அமெரிக்காவில் 22 லட்சம் பேர் பலியாவார்கள் என்று அலறியது.

சார்ஸ் தொற்று உச்சத்தில் இருந்த போதுகூட இந்த இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன் இதே போன்று அலறியது. ஆனால், நல்வாய்ப்பாக அதன் கணித்தபடி இங்கிலாந்தை அந்த நோய் தாக்கவில்லை. ``ஆக சரியான திசையில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்தை மட்டுமல்ல. பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பூச்சாண்டிக்காட்டி ஊரடங்கு என்ற கோட்பாட்டை திணித்ததே இந்த இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன்தான்" என்று ஊரடங்கிற்கு எதிரான கருத்து கொண்ட விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் குற்றம் சுமத்துகிறார்கள்.

பிசிஜி தடுப்பூசி போடும் பழக்கம் கொண்ட நாடுகளைவிடவும், அந்தப் பழக்கம் இல்லவே இல்லாத நாடுகளையும், அந்தப் பழக்கத்தைக் கைவிட்ட நாடுகளையும்தான் கொரோனா பலமாகத் தாக்கியிருக்கிறது. இவை குளிர்ப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளாக இருக்கின்றன.
பிசிஜி தடுப்பூசி போடும் பழக்கம் கொண்ட நாடுகளைவிடவும், அந்தப் பழக்கம் இல்லவே இல்லாத நாடுகளையும், அந்தப் பழக்கத்தைக் கைவிட்ட நாடுகளையும்தான் கொரோனா பலமாகத் தாக்கியிருக்கிறது. இவை குளிர்ப்பிரதேசங்களில் அமைந்திருக்கும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளாக இருக்கின்றன.

இவர்களின் கருத்துக்கு இப்போது பல ஐரோப்பிய நாடுகள் செவிசாய்க்க ஆரம்பித்துவிட்டன. ``கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அதிகம் உதவாது. ஊரடங்கின் மூலம் கொரோனாவைத் தள்ளிப்போடலாமே தவிர, தவிர்க்கவோ, தப்பிக்கவோ முடியாது. தப்பிக்க வேண்டுமானால்... அதை நேருக்கு நேர் நாம் சந்தித்தாக வேண்டும். கொரோனாவை எதிர்த்துப் போரிடும் Herd Immunity என்ற சக்தியை சமூகம் பெற வேண்டும். ஒரு நாட்டில் எத்தனை பேருக்கு இந்த எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறதோ, அந்த அளவுக்குக் கொரோனாவில் இருந்து அந்த நாட்டை பாதுகாக்க முடியும். கட்டுப்பாடுகளும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருந்தாலே போதும். அதனால் ஒரேயடியாக முழு ஊரடங்கு வேண்டாம். கொரோனாவை எதிர்த்துப் போரிட முடியாத வயதானவர்களும், மருத்துவக் குறைபாடு உள்ளவர்களும் வீட்டுக்குள் உரிய பாதுகாப்புகளோடு இருக்கட்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. ஆனால், இளைய சமூகம் அவர்களிடமிருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து, அன்றாடப் பணிகளைச் செய்யட்டும்." - ஐரோப்பிய நாடுகளின் நோய்ப் பரவல் மற்றும் தடுப்பு மையத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஜூஹான் கீசெக்கே எடுத்து வைக்கும் வாதம் இது. இது வாதமோ பிடிவாதமோ - இதே அலைவரிசையில்தான் கணிசமான ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவில் பல மாகாணங்களும் சிந்திக்கின்றன.

அடுத்து... நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏற்கெனவே சொன்னதுபோல, நம் நாட்டில் இந்த வாதம், சற்றே வேறு ஒரு தொனியில் கேட்கிறது. ``கொரோனாவை எதிர்த்துப் போராட மக்களுக்கு உணவு வேண்டும். உணவு வேண்டுமானால், வேலை வேண்டும். வேலை வேண்டுமானால் உற்பத்தி வேண்டும். விநியோகச் சங்கிலி வேண்டும். அதற்குப் போக்குவரத்து வேண்டும். உலகம் மீண்டும் மறுபடி இயங்க வேண்டும். இதுதான் கொரோனாவில் இருந்து தப்பிக்க வழி''

``கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற சமூக விலகலும் ஊரடங்கும் வேண்டும். அதேசமயம், ஊரடங்கால் வேலை இழப்புகளோ அல்லது உற்பத்தியோ அதிகம் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும். கொரோனாவில் இருந்து தப்பிக்க இதுதான் Exit Plan'' என்று தொழிற்துறையைச் சேர்ந்த பலரும் வாதிடுகிறார்கள்.

சிகரெட் இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது. மதுப்பழக்கத்தை எல்லாம் திடீரென்று விட முடியாது. ஒரு நாள் ட்யூஷனை மிஸ் செய்தாலும், எதிர்காலமே இருண்டு போய்விடும்... இப்படி நமக்கு நாமே பல கற்பிதங்களை நிறுவி, அதை உண்மை என்றும் உறுதியாக நம்பி வந்தோம். இது எதுவுமே உண்மையில்லை என்பதை கொரோனா நிரூபித்தது. அப்படியிருக்க... கொரோனா பற்றி நாம் ஏற்படுத்தியிருந்த கற்பிதத்தை மட்டும் அது விட்டுவைக்குமா என்ன...? அதனால்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஊரடங்குதான் ஒரே வழி என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்த உலகம், இப்போது மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில், குறிப்பிட்ட துறைகளைச் சேந்த தொழிற்சாலைகள் இயங்கவும், வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என்று தொழிற்துறையினர் வைத்த கோரிக்கைகளை ஏற்று, அவை இயங்க அரசு அனுமதி கொடுத்தது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் (வயது வாரியாக)
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் (வயது வாரியாக)
Source: MoHFW

ஊரடங்கு தளர்த்தப்படுமா?

சரி, 'கொரோனாவுக்கு எதிராக நாம் தொடுத்திருக்கும் இந்தப் போரில் வெற்றி பெற வேண்டுமென்றால்...மே 3-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும்', என்று பல மாநில முதல்வர்களும் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில்... மத்திய அரசு என்ன முடிவெடுக்கும்?

ஆம், நடந்து கொண்டிருப்பது போர்தான். ஆனால் இது விசித்திரமான போர்... மருத்துவர்களும், மருத்துவத் துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் முன்னணியில் அணிவகுத்து நிற்கும் போர்! சக்கரவியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே போகவும் தெரியவேண்டும். எதிரியை தாக்கிவிட்டு, தப்பித்து வெளியே வரவும் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் சமயம் பார்த்து... ஒவ்வொரு கட்டங்களாக உடைத்துக் கொண்டு வெளியே வர வேண்டும். அவசரப்பட்டு திடுதிப்பென்று உடனடியாகவும் வெளியே வருவதும் ஆபத்து.

இந்திய மக்கள் தொகை (வயது வாரியாக)
இந்திய மக்கள் தொகை (வயது வாரியாக)
Source: MoHFW

இதைத்தான் மே 3-ம் தேதிக்குப் பிறகு அரசு செய்யும் என தெரிகிறது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று கொரோனாவின் தாக்கத்துக்கு ஏற்ப, நாட்டின் பல பகுதிகளில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்படலாம். அங்கே பல துறைகளும் தொழிற்சாலைகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் இயங்க அனுமதியும் கொடுக்கப்படலாம்.

இனி வரப்போகும் நாட்களை எல்லாம், `நாளை என்பது மற்றுமொரு நாளே' என்று அசட்டையாக கடந்து போக முடியாது. இனி விடியப்போகும் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாட்கள். விழிப்போடும் செயல்பட வேண்டிய நாட்கள்.

கோவிட் 19
சவால் அல்ல... சந்தர்ப்பம்!

முறிந்து போயிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்புக்குச் சிகிச்சை அளித்து, மீண்டும் நிமிர்த்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கொடுக்கும் இந்த யோசனைகள், ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியவை:

முன்குறிப்பு: ஏழை எளியவர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தவிர பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இந்த நேரம்வரை எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் வெளியிடப்பட்ட கருத்துகள் இவை.

சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்
சர்வதேச பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்

கடந்த பத்தாண்டுகளைவிட, வரப்போகும் பத்தாண்டுகளைச் சிறப்பானதாக மாற்ற, அரசுக்கும் நமக்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்புதான் கொரோனா என்கிற சவால்.

- சீனா மீது உலகம் நம்பிக்கை இழந்துவிட்டது. அங்கே தொழில் நடத்துவதும் அதிக செலவு பிடிப்பதாக இருக்கிறது. அதனால் பல சர்வதேசக் கம்பெனிகள் இந்தியா பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பு உள்ள இந்த நேரத்தில், தவறான சமிக்ஞைகள் எதையும் கொடுத்துவிடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ''தொழிலாளர்கள் எவருக்கேனும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டால், தொழிற்சாலையின் நிர்வாகம் தண்டிக்கப்படுமா'' என்ற விவாதங்கள், செய்தி என்ற பெயரில் பரவி கலக்கத்தை ஏற்படுத்திய வேலையில், `சாந்தப்படுத்துகிறேன் பேர்வழி' என்று அரசிடமிருந்து வெளியான அறிக்கை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது போன்ற தவறுகள் முதலீடு செய்ய வருகிறவர்களைத் திரும்ப அனுப்பிவிடும்.

நம் நாடு சமகாலச் சரித்திரத்தில் சுவைத்த மிகப்பெரிய வெற்றி, மென்பொருள் துறையில் நாம் பிடித்திருக்கும் இடம்! நம் நாட்டின் மிகப்பெரிய வளம், பொறியியல் படித்த ஏராளமான இளைஞர்கள். இந்தத் துறை இங்கே வளர்வதற்கான சூழலை மட்டுமே அரசு ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற சூழலை உருவாக்குவதில்தான் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வித் துறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். மின்சாரம் தங்கு தடையில்லாமல் நியாயமான விலையில் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கவும்... அதை அவர்கள் யாரிடமிருந்து வேண்டுமானாலும் பெறுவதற்கான சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும். சரக்குகளுக்கான ரயில் கட்டணம் கட்டுப்படியாகக்கூடிய அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

- மாநில அரசுகள் தங்களின் பங்குக்குச் சொத்துப் பதிவுக் கட்டணங்களைக் குறைப்பதுடன், ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டக்ஸையும்அதிகப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைக்க இடம் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

- நாட்டின் நிதித்துறை, சவாலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. சரிந்துவரும் ரூபாய் மதிப்பு, கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அடி... என வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பலமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், அவை சொந்தக்காலில் நிற்க... சிறிது காலத்துக்கு அரசு கட்டாயம் தோள் கொடுக்க வேண்டும்.

பிரத்யேகமான பட்ஜெட்

- கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீள்வது என்பது மிகப் பெரிய வேலை. அதனால் கோவிட்-19 என்ற பெயரிலேயே மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரத்யேகமான பட்ஜெட் போட வேண்டும். இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி நேரடியாக நிதியளிக்க வேண்டும்.

- வங்கித்துறை முதல் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருக்கும் முக்கியமான பலரும் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் இருப்பதால் நிதியின் ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது. வருவது வரட்டும் என்று துணிந்து ரிஸ்க் எடுத்தால்... தோல்வியைச் சந்திக்க நேருமோ என்ற அச்சத்தில் இன்று பலரும் துணிந்து முடிவுகள் எடுக்க தயங்குகிறார்கள். இதுதான் மிகவும் ஆபத்தானது. நன்கு சிந்தித்து தைரியமாகச் செயல்பட வேண்டிய காலம் இது.

COVID-19 testing center in New Delhi
COVID-19 testing center in New Delhi
AP Photo / Manish Swarup

- சவால் வரும்போதுதான் சந்தர்ப்பமும் வரும். அதனால் வங்கித் துறையிலும் நிதித்துறையிலும் செய்ய வேண்டிய சீர்திருத்தத்தையும் மறுமலர்ச்சியையும் செய்ய, இதுவே சரியான தருணம்.

- உலகம், நம் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என்பதற்கு உதாரணம், சோதனையான இந்தக் காலகட்டத்தையும் மீறி நடந்திருக்கும் ஜியோ - ஃபேஸ்புக் ஒப்பந்தம். ஆகவே கோவிட்டை நினைத்து நாம் முடங்கிவிடத் தேவையில்லை. நம்மைப் பற்றி எந்த அவநம்பிக்கையும் தேவையில்லை. ஒப்பீட்டு அளவில் பார்த்தால், நம்மைவிட உலக நாடுகள் பலவும் பலவீனமாகத்தான் இருக்கின்றன. தேவையான அளவுக்கு அந்நியச் செலாவணி, அடிமட்டத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் விலை... என்று பல விஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. நாடு சகஜநிலைக்கு வெகு விரைவில் திரும்பும் என்ற மனநிலையில்தான் நம் நாட்டில் நுகர்வோர்கள் இருப்பதாக மேகின்ஸி நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆக காற்று நமக்கு சாதகமாகத்தான் வீசுகிறது. எல்லாவற்றையும்விட, மாறுதலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் நமக்கு இணை வேறு யாருமில்லை.

நாளை நமதே..!

இந்த கோவிட் 19 சிக்கலை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது? மே 3-ம் தேதிக்குப் பிறகும் லாக் டௌன் நீட்டிக்கப்படுமானால் அதுகுறித்து உங்கள் கருத்து என்ன? இங்கே கமென்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்...