Published:Updated:

தொடரும் ஊரடங்கு... மிரட்டும் கொரோனா; என்ன செய்யப்போகிறது காஷ்மீர்?

காஷ்மீர்
News
காஷ்மீர்

ஒரு மாத கால ஊரடங்கையே நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், கடந்த பத்து மாதங்களாக ஊரடங்கில் இருக்கிறது ஜம்மு – காஷ்மீர்!

ஊரடங்கு உத்தரவால் அடங்கிக்கிடக்கும் அனுபவம் இந்தியாவுக்குப் புதிது. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். பிற்பகல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருப்பதால், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்கள், பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு பெரும்பாலும் வெளியே வருவதில்லை.

காஷ்மீர்
காஷ்மீர்

வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் சிறுவர் சிறுமிகளைச் சமாளிப்பதற்குப் பெற்றோர்கள் படாதபாடு படுகிறார்கள். ஐந்து மாவட்டங்களில் நான்கு நாள்களுக்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. உணவுப்பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வீதிகளில் திரண்டார்கள். மதுரையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை என்ற குறையை அந்த மக்கள் கூட்டம் போக்கிவிட்டது. ‘எப்படா இந்தக் கொரோனா போகும்?’ என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் கேள்வியாகவும் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு மாத கால ஊரடங்கையே நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், கடந்த பத்து மாதங்களாக ஊரடங்கில் இருக்கிறது ஜம்மு – காஷ்மீர். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஜம்மு – காஷ்மீர் லாக் டௌன் நிலையில் இருக்கிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்காக, முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் முடங்கியது. இன்றுவரை அதில் பெரிய மாற்றம் இல்லை.

காஷ்மீர்
காஷ்மீர்

ஏற்கெனவே அங்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்துவரும் நிலையில், இப்போது கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்த தேசமும் முடக்கப்பட்டிருப்பதால், ஐ.டி துறையினர், பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு துறையினரும் அலுவலகங்களுக்குப் போக முடியாமல் வீட்டில் இருந்தே ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற முறையில் பணியாற்றுகிறார்கள். ஆனால், காஷ்மீரில் அது சாத்தியப்படவில்லை. காரணம், அங்கு கடந்த ஆண்டு இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் அது அளிக்கப்பட்டது. ஆனாலும், 4 ஜி சேவை இன்னும் அங்கு வழங்கப்படவில்லை. அதனால், ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்பது அவர்களுக்கு சாத்தியமாகவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே அது லாக் டௌனில் இருந்துவரும் பிரதேசம் என்றாலும்கூட, அங்கும் கொரோனா வைரஸ் புகுந்துவிட்டது. சவூதி அரேபியா சென்றுவந்த ஒரு பெண்மணிக்குக் கொரோனா தொற்று இருந்தது மார்ச் 18-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. மார்ச் 22-ம் தேதி 65 வயதுடைய ஒரு நபருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இப்போது, அங்கு சில பகுதிகளில் சமூகப்பரவல் என்கிற நிலைக்கு இப்பிரச்னை தீவிரமடைந்துள்ளது. அங்கு கவலைக்குரிய பிரச்னை என்னவென்றால், போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்பதுதான்.

காஷ்மீரில் ராணுவம்
காஷ்மீரில் ராணுவம்

சுமார் 68 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஷ்மீரில், 10 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், மொத்தமே வெறும் 200 வென்டிலேட்டர்கள்தான் அங்கு உள்ளன. ஏற்கெனவே பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்ட உடல்களைச் சுமந்து திரியும் காஷ்மீர் மக்களுக்குக் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் கொரோனாவால் மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகளையும் சவால்களையும்விட காஷ்மீர் மக்கள் சந்தித்துவருவது அதிகம்.

தேச முடக்கம் குறித்து பிரதமர் அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே, காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுவிட்டன. முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால் இங்கு போலவே அங்கும் அரசின் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். ஆனால், அப்படி அனுமதி பெற்று வெளியே வந்தாலும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் தாக்குவதாகச் செய்திகள் வருகின்றன.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளைக்கொண்ட மேலை நாடுகளெல்லாம் கொரோனாவைச் சமாளிக்க முடியாமல் கதறிக்கொண்டிருக்கும் நிலையில், போதுமான மருத்துவப் பணியாளர்கள் இல்லாமல், போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் கொரோனா தாக்குதலிலிருந்து காஷ்மீர் மீள்வது பெரும் சவாலுக்குரியது. மேலும், அங்கு சில பகுதிகளில் சமூகத்தொற்று என்ற நிலைக்குக் கொரோனா போயிருப்பது பெரும் கவலைக்குரியது.

மருத்துவ வசதிகளில் முன்னேறிய தமிழ்நாட்டிலேயே சுயப் பாதுகாப்புக் கருவிகள், என் 95 முகக் கவசங்கள் முழுமையாக மருத்துவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று புகார்கள் இருக்கும் நிலையில், காஷ்மீரில் எந்தளவுக்கு இந்த வசதிகள் இருக்கும்? அங்கு சாதாரண கையுறைகளும், சாதாரண கவுன்களையுமே மருத்துவர்கள் பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்குத் தரமான பாதுகாப்புக் கருவிகளை வழங்குமாறு கேட்ட மருத்துவர் ஒருவர்பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. மருத்துவர்களுக்கே இந்த நிலையென்றால், பொதுமக்களின் நிலை?

காஷ்மீரில் ராணுவம்
காஷ்மீரில் ராணுவம்

காஷ்மீரில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், ஏப்ரல் 26-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, அங்கு புதிதாக 40 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, ஜம்மு - காஷ்மீரில் இதுவரை 494 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவால் ஆறு பேர் மரணமடைந்துள்னர். 112 பேர் குணமடைந்துள்ளனர் என்பது ஓர் ஆறுதல். ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. நோன்பு தொடங்கியுள்ள அந்த மக்கள், ‘காப்பாற்றுங்கள் இறைவனே’ என்று தொழுகை மேற்கொண்டுவருகிறார்கள். தங்களின் குரலைக் கேட்க ஆட்சியாளர்கள் மறுக்கிறார்கள் என்பதால், இறைவனை மட்டுமே அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில், துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு ஜம்மு – காஷ்மீர் நிர்வாகத்தைக் கவனித்துவருகிறார். கொரோனா வைரஸ் அபாயத்துக்கு மத்தியிலும், கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய மூவரும் பொது பாதுகாப்பச் சட்டம் என்கிற கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

232 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சிறையிலிருந்து கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஃபரூக் அப்துல்லா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். உமர் அப்துல்லாவின் சகோதரியான சாரா பைலட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உமர் அப்துல்லாவை எப்போது விடுதலை செய்வீர்கள் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்குக் கேள்வி எழுப்பியது. அடுத்த இரண்டு நாள்களில் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், இன்னொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டது. ஆனாலும், மெகபூபா முப்தி மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. தன் தாயார் மெகபூபா முப்தி மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திர முர்முவுக்கு மெகபூபா முப்தியின் மகளான இல்திஜா கடிதம் எழுதினார். ஆனாலும், அவர் விடுதலை செய்யப்படவில்லை.

உமர் - மெகபூபா
உமர் - மெகபூபா

சிறையில் அடைக்கப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெகபூபா முப்தி, சப் ஜெயிலிலிருந்து வீட்டுச் சிறைக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக மாற்றப்பட்டார். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

கேட்க... பார்க்க நாதியில்லை... காஷ்மீர் மக்கள் பாவம்!