Published:Updated:

அச்சுறுத்தும் அமைதி, கொட்டிக்கிடந்த அன்பு... சுய ஊரடங்கு சென்னையில் எப்படி இருந்தது? #ChennaiQuarantineRounds

சென்னை ரங்கநாதன் தெரு
சென்னை ரங்கநாதன் தெரு ( படங்கள்: சந்துரு செல்வம் )

கடற்கரை, ரயில்நிலையங்கள் முதல் கடைவீதிகள் வரை... மிகுபுனைவின் மிச்சம் - அசாத்திய அமைதியில் சென்னையின் ஒருநாள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

(போதுமான முன்னேற்பாடுகளோடும் மருத்துவர்களின் ஆலோசனைகளோடும் நடந்த நகர்வலம் இது!)

மக்கள் ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தொற்றிக்கொண்ட பரபரப்பு சனி இரவு உச்சம் தொட்டது. மளிகைக்கடைகளில், கறிக்கடைகளில், ஏ.டி.எம்களில், ஒயின்ஷாப்களில்(?) என எங்கும் மனிதத் தலைகள் முட்டி மோதின. 'நாளை மற்றுமொரு நாளில்லை' எனத் தெரிந்துவிட்டதன் அறிகுறி. அடைத்துக் கட்டிய துணிப்பைகளும் குறுகுறுப்பை தேக்கி வைத்த முகங்களுமாய் மக்கள் வீடடைந்தபோது இப்பெருநகரத்தை ராஜா ஏற்கெனவே தாலாட்டத் தொடங்கியிருந்தார். வழக்கத்தைவிட தாமதமாகவே கண்களைத் தட்டியது தூக்கம்.

மெரினா சாலை
மெரினா சாலை
சந்துரு செல்வம்

சென்னையின் ஞாயிறு காலைகள் சோம்பல் தெறிப்பவை. ஓடிக்களைத்து அசந்து தூங்கும் குழந்தைபோல சின்னச் சின்ன சலனங்கள்தாண்டி பெரிதாக எந்தப் பரபரப்பும் இல்லாத பொழுதுகள். ஆனால் இந்தமுறை செயற்கை மயக்கத்தில் இருந்தது நகரம். சடசடத்தபடி இருக்கும் ராஜீவ் காந்தி சாலையில் வண்டிகள் மட்டுமல்ல அவை போன தடங்கள் கூட இல்லை. ஆங்காங்கே ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர்கள் மட்டும் நான்கைந்து பேராய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் பேசுபொருளும் இந்தப் புதிய சென்னையைப் பற்றி இருந்திருக்கக்கூடும். ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தின் சீருடை அணிந்த பெண் மட்டும் வேகமாகக் கடந்துசென்றார். பயத்தைப் பெரும்பாலும் வெல்கிறது பசி!

ஆயிரக்கணக்கான வண்டிகள் கடக்கும் பெருங்குடி டோல்கேட்டில் ஆளரவமே இல்லை. சில காகங்கள் மட்டும் இந்த ஒருநாள் போரில் வென்றவைபோல கரைந்துகொண்டிருந்தன. கொஞ்சம் தூரத்தில் இன்னும் சில புள்ளினங்களின் கொண்டாட்ட ஒலி கேட்டது.

பெருங்குடி டோல்கேட்
பெருங்குடி டோல்கேட்
சந்துரு செல்வம்

'கடைசியாக ஓ.எம்.ஆர் பிரதான சாலையில் பறவைகளின் கீச்சொலியை எப்போ கேட்டீங்க?' எனக் கேட்டார் உடன் வந்த நண்பர். அந்தச் சாலையில் நான் கேட்டதெல்லாம் வாகனக் கசகசப்புகளை மட்டும்தான். 'நினைவுல இல்ல' என்றேன். 'அநேகமா ஓ.எம்.ஆர் சாலை ஆ.எம்.ஆர் சாலையா ஆகுறதுக்கு முன்னால யாராவது கேட்டிருப்பாங்க' என்றார். பெருங்குடி மட்டுமல்ல, நீண்டுகிடந்த அந்தச் சாலையின் பல கி.மீக்கள் தூரத்திற்குப் பறவைகளின் ஒலியைத்தாண்டி இலை அசையும் சத்தம்கூட இல்லை. அதே சமயம், எங்கள் வாகனத்தைவிட்டு கொஞ்சம் தள்ளித்தான் இந்தச் சாலையை தினமும் பயன்படுத்தும் லட்சக்கணக்கான உயிர்களும் பதைபதைப்புடன் கூடடைந்திருக்கின்றன என்றும் இவ்வமைதிப் படலத்திற்குள் உறைந்தபடி அமர்ந்து அவர்களும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எண்ணங்கள் எழ, சிலிர்த்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பிரிந்து கிழக்குக் கடற்கரைச் சாலையை அடைந்தோம். சென்னையின் செல்லக்குழந்தையான அந்தச் சாலை கேட்பாரற்று வீழ்ந்துகிடந்தது. பெட்ரோல் நிலையங்கள், சாலை முழுவதும் சுத்தப்படுத்தி மருந்து தெளித்துக்கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் தாண்டி ஒரு துளி இயக்கமில்லை. திருவான்மியூர் வழியாக அடையாறு வந்தோம். திறந்துகிடந்த சில பூக்கடைகளும் அவற்றில் தொங்கிய பெரிய மாலைகளும் எதையோ கடத்தின.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்
சந்துரு செல்வம்
சாந்தோம்
சாந்தோம்
சந்துரு செல்வம்

சாந்தோம் கடந்தவர்களை வரவேற்றது கடற்காற்று. தங்கத்தாளில் சுற்றப்பட்ட நீலச்சவ்வுமிட்டாயைப் போல தகதக மணற்பரப்பில் சலனமற்றுக் கிடந்தது கடல். மற்ற தருணங்களில் இழுத்துத் தழுவும் கடல் ஏனோ இப்போதுமட்டும் தலையிட விரும்பாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதைப்போல இருந்தது. மொத்தச் சென்னையிலும் ஓரளவிற்கு வாகனப்போக்குவரத்து இருந்தது இந்தக் கடற்கரைச் சாலையில் மட்டும்தான். அதுவும் வார் மெமோரியல்வரைதான். கடற்கரைக்குக் கொஞ்சமும் சளைக்காமல் அந்நியப்பட்டுக்கிடந்தது சென்னை துறைமுகம்.

சில தினங்களுக்கு முன் கலர்களும் கொண்டாட்டமுமாய் இருந்த மின்ட் தெருவை இப்போது அடையாளம் காட்டியது மூடப்பட்ட கதவுகளின் இடுக்கு வழியே சன்னமாய்க் கேட்ட இந்திப்பாடல்கள் மட்டுமே. ராயபுரம், தண்டையார்பேட்டை வரை முழுக்கப் போர்த்திய இறுக்கத்தில்தான் கிடந்தன.

மின்ட் தெரு
மின்ட் தெரு
சந்துரு செல்வம்
மின்ட் தெரு
மின்ட் தெரு
சந்துரு செல்வம்
விடுமுறையே எடுக்காமல் ஓயாது உழைத்தவரை இழுத்துப் பிடித்து கட்டாய ஓய்வில் அனுப்பிவிட்டதைப் போல இருந்தது இந்த மொத்த மாநகரமும்.

நகரெங்கும் பரவியிருந்த வெறுமைக்கு நேர்மாறாய் இருந்தது சென்ட்ரல் நிலையம். உள்ளே போகும் வழி, பேருந்து நிழற்குடை, நடைபாதை என எங்கும் அசதியில் கிடந்தன மனித உடல்கள். அள்ளிவந்து கொட்டியதைப் போல அங்கே ஆயிரக்கணக்கில் சிதறிக்கிடந்த அத்தனை பேரும் வட மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள். அவர்கள் அனைவரின் முகங்களிலும் நிச்சயமில்லாத புறப்பாட்டைப் பற்றிய கேள்விகள். நாளைய நிதிநிலையைப் பற்றிய பயங்கள். ஒரு பக்கம் மருத்துவர்கள் அவர்களை கொரோனா ஸ்க்ரீனிங்கிற்கு உட்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

சென்ட்ரல் ரயில்நிலையம்
சென்ட்ரல் ரயில்நிலையம்
சந்துரு செல்வம்

நிலையத்தின் பக்கவாட்டு வாசலுக்கு அருகே நீண்டு நெடிந்து செல்கின்றன இருவரிசைகள். மதிய உணவை எதிர்நோக்கி நின்றிருக்கின்றன பல நூறு ஜோடிக் கால்கள். அண்டாவில் இருந்து அள்ளிக்கொட்டப்படும் உணவை வெறித்த விழிகளோடு, புழுதி படர்ந்த தலைகளோடு வாங்கிச் செல்கிறார்கள் அந்தத் தொழிலாளிகள். சட்டென ஏதோ ஒரு அகதிகள் முகாமிற்குள் நுழைந்ததைப் போல மனம் இறுக்கமாகிறது.

மதிய உணவு
மதிய உணவு
சந்துரு செல்வம்

இன்று உணவுவிடுதிகள் இருக்காதென்பதால் மாநகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே யோசித்து இரண்டாயிரம் பேருக்கு சமைத்து எடுத்துவந்துவிட்டதாகச் சொன்னார் அங்கிருந்த போலீஸ் அதிகாரி. உள்ளே அழுத்தும் கனத்தை கொஞ்சம் இலகுவாக்குகின்றன அவரின் சொற்கள். இம்மாநகரத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து சிங்காரச் சென்னையைக் கட்டமைத்த அந்த எளிய மனிதர்களுக்கு இந்நகரம் திருப்பிச்செலுத்திக்கொண்டிருக்கிறது பேரன்பை.

சென்ட்ரல் முதல் பெருங்களத்தூர் வரை... மக்களின் சுய ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை! ரவுண்ட் அப்

எழும்பூரின் பெரும்பாலான ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டதால் பெரிதாகக் கூட்டமில்லை. சராசரி நாளிலேயே அமைதியைப் பூசிக்கொள்ளும் அண்ணாநகர் வட்டாரங்கள் இப்போது பேரமைதியில் இருந்தன. பேருந்துகளற்ற தன் பிரமாண்டத்தை முதன்முறையாக மனிதர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தது கோயம்பேடு. பெரும்புள்ளிகளோடு உறவாடும் வடபழனியின் பிரதான சாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள் சில இளைஞர்கள். தங்கள் மிகுபுனைவின் ஏதோவொரு மிச்சத்தை அங்கே அவர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

கோடம்பாக்கம் வழியே தி.நகருக்குள் நுழைந்தோம். களைத்துச் சுருண்டிருக்கும் மலைப்பாம்பைப் போல ஓசையற்று நெளிந்தபடி இருக்கிறது தி.நகர் மேம்பாலம். சில இளைஞர்கள் அவ்வமைதியின் ஆச்சர்யம் தாங்காமல் மீண்டும் மீண்டும் ஏறி இறங்கியபடி இருந்தார்கள். மைக்ரோவிநாடியில் பல நூறு பாதங்களால் துண்டாடப்படும் ரங்கநாதன் சாலை அணைத்துவைக்கப்பட்ட இயந்திரம்போல சத்தம் காட்டாமல் அமர்ந்திருக்கிறது.

ரங்கநாதன் தெரு
ரங்கநாதன் தெரு
சந்துரு செல்வம்

அண்ணாசாலை வழியே கிண்டியை அடையும்போது மக்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே இப்பேரிடர் நீங்க உழைப்பவர்களுக்காகக் கைதட்டுவதாகச் செய்திகள் வந்தபடி இருந்தன. கொரோனாவைவிட கொடிய கிருமிகளிடத்தில் தினமும் உழன்று நகருக்கு ஆக்சிஜன் அளிக்கும் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களுக்கு, இக்கட்டான இவ்வேளையில் தன் உறவுகளை விடுத்து விபரீதத்திற்கு அருகே நிற்கும் காவல்துறையினருக்கு, உயிர்வளியை தேக்கிவைக்கப் போராடும் நோயாளிகளுக்கு உறையணிந்த கைகளின் வழியே இறுக்கிப்பிடித்து நம்பிக்கையளிக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவத்துறையினருக்கு அந்தச் சத்தம் நிச்சயம் கேட்டிருக்கும்.

வேளச்சேரி ஏரிக்குப் பின்னால் மெதுவாக இறங்குகிறது சூரியன். கனத்தை இன்னமும் கூட்டுவது போல சூழ்கிறது கருமை. மனித மனங்களின் இறுக்கத்தை இன்னமும் அதிகப்படுத்தும் நோக்கத்தோடு வியாபிக்கிறது இருள். தெருவில் இறங்கி நின்றேன். வேகமாய்க் கடந்துசென்ற ஒருவர் முக்கால்வாசி மூடிய ஷட்டருக்குள் கைநீட்டி பிஸ்கெட் பாக்கெட்களைப் பதற்றமாய் வாங்குகிறார். எங்கிருந்தோ மண் அதிர ஓடிவந்து அவரைச் சூழ்கின்றன சில நாய்கள். அவற்றைத் தடவிக்கொடுத்தபடி பிஸ்கெட்களைப் போட்டுக்கொண்டே மெல்ல நடந்து மறைகிறார். நாய்களின் குரைப்பொலி மட்டும் அடுத்த சில விநாடிகளுக்குக் கேட்டபடி இருக்கிறது.

"எல்லாக் காரிருளுக்குப் பின்னாலும் ஒரு பெருவிடியல் இருக்கிறதுதானே!"
கொரோனா சோஷியல் டிஸ்டன்ஸிங்... சென்னை குப்பங்களில் நிலைமை என்ன? #SpotVisit
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு