Published:Updated:

கொரோனாவால் வெடித்த மத சர்ச்சை - டெல்லியில் நடந்தது என்ன?

மதரீதியாக இது பிரச்னை ஆகிவிடும் என்பதால் காவல்துறை உதவியுடன் டெல்லி சென்றவர்கள் பட்டியலைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி கொரோனா தொற்றுள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். பலரை அடையாளம் காண முடியாததால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களே தற்போது இந்தப் பாதிப்பில் சிக்கியவர்களில் அதிகம் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, ஒருபுறம் பரபரப்பையும் மற்றொரு புறம் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் நேற்று (மார்ச் 31) காலையில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்தது.

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. தமிழகம் திரும்பிய 515 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளோம். மீதமுள்ள நபர்களின் தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தயவுசெய்து சுகாதாரத்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள். தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் டெல்லியில் மாநாட்டை நடத்தியது தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்தான் என்று முதலில் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால், டெல்லியில் நாங்கள் எந்த மாநாடும் நடத்தவில்லை என்றும் அமைப்பின் பெயர் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பள்ளிவாசலில் நடந்த மாநாடு `தப்லிக் ஜமாத்' என்கிற அமைப்பின் சார்பில் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தப்லிக் ஜமாத் தரப்பிடம் நாம் பேசினோம்...

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளிவாசல் இந்தியாவில் உள்ள அனைத்து தப்லீக் ஜமாத்துக்கும் தலைமையிடமாகும். இஸ்லாமியர்களை நல்வழிப்படுத்தி, அவர்களை தொழுகைக்கு அழைக்கும் இறைப்பணியை மட்டுமே இந்த ஜமாத் பல ஆண்டுகளாகச் செய்துவருகிறது. உலகம் முழுவதும் இந்த ஜமாத் சார்பில் இறைப்பணி நடந்து வருகிறது. அதனால் உலகின் பல நாடுகளிலிருந்தும் நிஜாமுதீனுக்கு குழுக்கள் வருவது வழக்கம். அங்கு எப்போதும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக் குழு தங்கியிருந்து மதப்பணிகளை மேற்கொண்டுவருவார்கள். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்களுடன் டெல்லி தலைமை ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மார்ச் மாதம் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாள்கள் முடிவு செய்துள்ளார்கள். அதற்காகத் தமிழகத்தில் உள்ள நிர்வாகிகள் ரயில் மூலம் டெல்லி சென்றடைந்தனர். அந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியவர்களைத்தான் இப்போது கொரோனா பாதிப்பு என்று சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்கள்’’ என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி சென்றுவிட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தப்லீக் ஜமாத் நிர்வாகி ஒருவர் நம்மிடம், ``நாங்கள் போகும்போது ரயிலில் சென்றோம். நாங்கள் டெல்லியில் கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது ரயில்கள் ரத்து என்கிற தகவல் வெளியானதால், 23-ம் தேதியே உடனடியாகக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியே வந்து விமானத்தைப் பிடித்து தமிழகம் திரும்பிவிட்டோம். டெல்லி விமான நிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலும் எங்களிடம் சோதனை செய்த பிறகே அனுப்பி வைத்தார்கள்.

நிஜாமுதினீல் மருத்துவ சோதனை
நிஜாமுதினீல் மருத்துவ சோதனை

ஆனால், திடீர் என இரண்டு நாள்களுக்கு முன்பாகக் காவல்துறையினர் எங்களில் சிலர் வீட்டுக்கு வந்து எங்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். எந்த நோய்த்தொற்று அறிகுறியும் இன்றி எங்களுக்கு உடல்நிலை நன்றாக இருந்தும் வெளியே அனுப்ப மறுக்கிறார்கள்” என்றார்.

கோவை மற்றும் ஈரோடு பகுதிகளிலிருந்து டெல்லி சென்று திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மதுரையிலும் கொரோனா தொற்று உறுதியானவர், டெல்லி சென்று திரும்பியவர்தான். எனவேதான் டெல்லி கூட்டத்துக்குச் சென்று வந்தவர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள் சுகாதாரத்துறையினர். அதேநேரம் தனிமைப் படுத்தியவர்கள் தரப்பிலிருந்து வேறுவிதமான புலம்பலும் கேட்கிறது.

``இஸ்லாமியர்களுக்கு எதிராக பி.ஜே.பி தரப்பு இதுபோன்று நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவத்துறை உறுதி செய்த பிறகு, கொரோனா இருப்பதாக எங்கள் பகுதியில் மைக் மூலம் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது எங்களை மனதளவில் பாதித்துள்ளது” என்று பலரும் குமுறுகின்றனர். மற்றொருபுறம் பி.ஜே.பி தரப்பிலும், டெல்லி சென்று வந்தவர்களால் இந்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவர்களாக முன்வந்து மருத்துவமனையில் சோதனை செய்துகொள்ளுங்கள். இதில் மதவேறுபாடு காட்ட வேண்டாம்’ என்று சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. இது இஸ்லாமியர்கள் மத்தியில் மேலும் பீதியை ஏற்படுத்திவிட்டது.

Nizamuddin area of New Delhi
Nizamuddin area of New Delhi
Photo: AP

இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பள்ளிவாசல் தலைமை நிர்வாகி மூலம் அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் ``கடந்த மார்ச் 23-ம் தேதி டெல்லி அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தபோதே பலரையும் வெளியேற்றி விட்டோம். 25-ம் தேதி மருத்துவக்குழுவுடன் அந்தப் பகுதி தாசில்தார் மர்கஸ்க்கு வந்து ஆய்வு செய்து, அங்கு வந்து சென்றவர்களின் பட்டியலை வாங்கியதோடு, அப்போது அங்கு தங்கியிருந்தவர்களின் உடல்நிலை பற்றியும் ஆய்வு செய்துள்ளார்கள். யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்கள். ஆனால், கடந்த சில நாள்களாக நிஜாமுதீனில் தங்கியிருந்தவர்கள் மூலமே கொரோனா தொற்று பரவியதாகக் கூறப்படும் செய்தி தவறு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பிரச்னை முடியும் வரை மர்கஸ் செயல்பாட்டை முடக்கி வைப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

அங்கிருந்து வந்தவர்களுக்கு எப்படித் தொற்று ஏற்பட்டது என்ற கேள்விக்கு, ``அங்கு வெளிநாட்டு ஜமாத் வந்து சென்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த நேரத்தில் யாருக்காவது ஒருவருக்கு இந்தத் தொற்று ஆரம்பகட்டத்தில் இருந்திருக்கலாம். அவர்கள் மூலம் அடுத்தடுத்த நபர்களுக்கு இது பரவியிருக்கும்” என்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தமிழகத்தில் ஆரம்பத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும் இந்தத் தொற்று வந்ததால் அதுகுறித்து விசாரித்தபோது டெல்லி விவகாரம் எங்களுக்குத் தெரியவந்தது. அதற்கு அடுத்த சில நாள்களில் கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்கள் பலரும் டெல்லி சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே என்பது உறுதியானது. இதை எங்களால் நேரடியாக வெளியே சொல்ல முடியவில்லை. மதரீதியாக இது பிரச்னை ஆகிவிடும் என்பதால் காவல்துறை உதவியுடன் டெல்லி சென்றவர்கள் பட்டியலைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி வந்தோம். ஆனால், பலருடைய இருப்பிடங்களை உறுதி செய்ய முடியாததாலும் பலர் தப்பித்துச் சென்றதாலுமே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. நோய்க்கு மதம், இனம் எதுவும் தெரியாது. ஒரே நேரத்தில் ஆயிரம் நபர்கள் கூடியதாலும் ஒன்றாகப் பயணம் செய்ததாலுமே அனைவரையும் தனிமைப் படுத்தியுள்ளோம். நோய்த் தாக்கம் இல்லாதவர்களை படிப்படியாக வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்” என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் யாரும் தவறான எந்தத் தகவலையும் பரப்பாமல் இருந்தாலே எல்லாம் சுமுகமாகும். இதை எல்லாத் தரப்பினரும் உணர்ந்து அரசின் அத்தியாவசியமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்பதே சமூக அமைதியையும் ஆரோக்கியத்தையும் விரும்பும் மக்களின் வேண்டுகோள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு