Election bannerElection banner
Published:Updated:

இந்தியாவுக்குத் தேவையான `ஹெர்டு இம்யூனிட்டி' எவ்வளவு? `சீரோ சர்வே'க்கள் அவிழ்க்கும் முடிச்சு!

Mask
Mask ( AP Illustration/Peter Hamlin )

சீரோ சர்வே தகவல் என்பது நம் உடலின் வெப்பநிலையை அறிந்துகொள்வதைப் போன்றதுதான். அபாய நிலையைத் தெரிந்துகொள்ளவும், அதிலிருந்து வேறு பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

இந்தியாவில் கொரோனா பரவலின் தொடக்கம் முதலே, அந்த நோய் பற்றி புரிந்துகொள்ள நோய் எதிர்ப்புத் திறன் ஆய்வு நிபுணர்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது என்ன தெரியுமா? நோய் எதிர்ப்புத் திறனைக் குறிக்கும் ஆன்டிபாடி பரிசோதனைகள் அடங்கிய சீரோ-சர்வே கணக்கெடுப்புதான் (Serological Survey). கொரோனா மரணங்களின் எண்ணிக்கை, தடுப்பு முறைகள் ஆகியவற்றின் மீதான பொதுக் கவனம் அதிகமாக இருந்தாலும், சீராலஜிக்கல் சர்வேயின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்திய மாநிலங்கள் அடுத்தடுத்து அதைச் செயல்படுத்தத் தொடங்கின. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், சீரோ-சர்வேயின் முக்கியத்துவத்தை உணர்வது கட்டாயமாகிறது.

அனூப் மலானி, IDFC நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பல கோவிட்-19 சீரோ-சர்வேக்களை நடத்தி முடித்திருக்கிறார். `ஹெர்டு இம்யூனிட்டி' (Herd immunity) என்று அழைக்கப்படும் கூட்டெதிர்ப்பு சக்தி எப்படி அதிகரிக்கும் என்பதை, சீரோ-சர்வேக்கள் மூலமாகக் கண்டறியப்பட்ட முடிவுகளின் துணையுடன் விளக்கியிருக்கிறார்.

Mask
Mask
AP Illustration/Peter Hamlin

அனூப் மலானி, சிகாகோ சட்டப் பல்கலைக்கழகத்திலும், ப்ரிட்ஸ்கெர் மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மும்பையில் அமைந்திருக்கும் பொருளாதார முன்னேற்ற நோக்கு நிறுவனமான IDFC-ல் மூத்த அறிஞராகவும் இருந்துவருகிறார். கொரோனா பரவலுக்குப் பின்பு, இந்திய மாநிலங்கள் முழுவதிலும் தொடர்ச்சியாக கோவிட் -19 சீரோ சர்வேக்களை நடத்தி வருகிறார்.

சீராலஜிக்கல் ஆய்வுகளின் இறுதியில் கிடைத்த தகவல்களின்படி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போது தடுப்பூசிகளைச் சரியாகச் செலுத்துவதற்கும் IDFC பல மாநில அரசுகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 தரவுகளைச் சேகரிப்பதில் இருக்கும் புதிய முறைகள், சீரோ-சர்வேக்களுக்கான வரம்புகள் மற்றும் கொரோனா வைரஸுக்கான சமூக கூட்டெதிர்ப்புத் திறன் எந்த அளவுக்கு மாறுபடும் என்பதைக் குறித்து India Spend-ஐ சேர்ந்த எஸ்.ருக்மினியுடனான, அனூப் மலானியின் உரையாடலில் இருந்து தொகுக்கப்பட்ட முக்கிய தகவல்களை இங்கே அளித்திருக்கிறோம்.

``கோவிட் 19 பெருந்தொற்றைப் புரிந்துகொள்வதில், சீரோ-சர்வேக்கள் மிக முக்கிய இடம் வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாடு முழுவதும் நடந்துவரும் பல்வேறு சீரோ சர்வேக்களின் முடிவுகளைப் IDFC எப்படி ஒன்றிணைத்தது? அதன் ஒருங்கிணைப்பு எப்படியானதாக இருந்தது?"

``நான் முதலில் சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில், கொரோனா பெருந்தொற்றைப் பொறுத்தவரையில், இந்தியா சில விஷயங்களைச் சரியாகக் கையாள்கிறது. கோவிட் 19 சீரோ சர்வேக்களின் எண்ணிக்கையை வைத்து நாடுகளைப் பட்டியலிட்டாலும், மக்கள் தொகையில் அதிகமான அளவில் சீரோ சர்வேக்களை நடத்திய நாடுகளைப் பட்டியலிட்டாலும், இந்தியா நிச்சயம் முதன்மையான சில இடங்களில் ஒன்றாக இருக்கும். வருமான ரீதியாகவும், சுகாதார வசதிகளின் ரீதியாகவும் பட்டியலிட்டால், கிழக்காசிய நாடுகளைத் தவிர பிற நாட்டு அரசுகளை விடவும், இந்தியா சரியாகச் செயல்பட்டிருப்பதைக் காணலாம். பல வேறுபட்ட நிறுவனங்களின் சார்பாக இந்தியாவின் சீரோ-சர்வேக்கள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இவை நின்றுவிடவில்லை. பரவல் விகிதம் குறித்த சர்வேக்கள், அறிவியல் ஆய்வுகள், வருமானத்தின் மீதான தாக்கத்தைக் குறித்த ஆய்வுகள் என இவையனைத்தும் பரவலாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இது மிகச் சிறப்பானது. குறிப்பிட்ட சில குறைகளைச் சுட்டிக்காட்டிய பின்பு, அவற்றைத் தவிர்த்து ஒட்டுமொத்தமாகப் பல விஷயங்களில் பெருந்தொற்றை சிறப்பாகவே கையாண்டிருக்கிறது இந்தியா.

Indians, most of them, wearing face masks as a precautionary measure against the coronavirus crowd a Sunday market in Jammu
Indians, most of them, wearing face masks as a precautionary measure against the coronavirus crowd a Sunday market in Jammu
AP Photo/Channi Anand

மிக முக்கியமாக, IDFC சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து நடைமுறைப்படுத்தியது. பொதுக் கொள்கைகளின்படி, கோவிட்-19 சீரோ சர்வேக்களை நடத்துவதற்கு உடனடியாக ஆதரவளித்து ஒத்துழைத்த மாநில அரசுகளை விரைவாக அடையாளம் கண்டு செயல்படுத்தினோம். பெருந்தொற்றைச் சமாளிப்பதில், அரசு அதிகாரிகளுக்கு எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டு, அதையும் சரிசெய்யும் வகையில் சீரோ-சர்வேக்கள் நடத்தப்பட்டன. அரசிடம் இருந்து நேரடியாகவும், அரசு சாரா நிறுவனங்களிடமிருந்தும் நிதியைச் சேகரித்து IDFC துரிதமாகச் செயல்பட்டது.

லாக்டௌன் அறிவிக்கப்பட்டவுடன் அரசுக்கு உதவும் வகையில், உடனடியாக ஒரு தனியார் பணிப்படையை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டபோது, அரசும், தனியார் நிறுவனங்களும் கைகோக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, மும்பையைப் பொறுத்தவரை, மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதியும் ஆதரவும் பெற்று செயலாற்றுவதற்கு நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பணிபுரிய வேண்டியிருந்தது. சீரோ சர்வேயைச் செயல்படுத்துவதற்காக பொது மருத்துவமனையான கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையையும், டாடா இன்ஸ்டிட்யூட் மைய விஞ்ஞானிகளையும் ஒன்றிணைத்து, அவர்களுடன் சர்வே வடிவமைப்பை கலந்தாலோசித்து அதைச் செயல்படுத்தினோம். மும்பையின் குடிசைப்பகுதிகள் பெரிய அளவிலான அபாயத்தை எதிர்கொள்ளும் என்று நாங்கள் கணித்திருந்ததால் உருவாக்கிய திட்டம் இது.

புனேவில், சீரோ சர்வே விரைவாகவும், சுதந்திரமான முயற்சியாகவும் நடந்து முடிந்தது. நாங்கள் ஆந்திரப் பிரதேச அரசுடன் பணிபுரிந்திருந்தாலும், அவர்கள் அதற்கு முன்பாகவே நான்கு மாவட்டங்களில் நகரப்பகுதிகளிலும், கிராமப் புறங்களிலும் சீரோ சர்வேக்களை நடத்தி முடித்திருந்தனர். அதே நேரத்தில், சொந்த மாநிலத்துக்குத் திரும்பிவரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு RT-PCR சோதனை நடத்தப்பட்டது.

கர்நாடகாவில், சுகாதார அமைச்சகத்தில் அங்கம் வகிக்கும் பங்கஜ் பாண்டே (முன்னாள் சுகாதார ஆணையர்) மற்றும் பிறரும், மாநிலம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் சர்வேயை நடைமுறைப்படுத்த முழு ஆதரவை அளித்தனர்.

Covid-19 Pandemic
Covid-19 Pandemic

IDFC, CMIE (Centre for Monitoring Indian Economy) எனப்படும் இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்துடன் இணைந்தும், உள்ளூர் ஆய்வகங்களின் துணையுடனும் இந்த சர்வேயை செயல்படுத்திக் காட்டியது. கர்நாடகாவிலும் மும்பையிலும் நாங்கள் ஈட்டிய வெற்றி மற்ற மாநிலங்களையும் எங்களை நாட வைத்தது. அதுதான் தமிழ்நாட்டிலும் மும்பையிலும் சுழற்சி முறையில் இந்த சர்வே செயல்படுத்தப்பட்டதன் வெற்றிச் சூத்திரம்.

IDFC, அத்தனை தகவல்களையும் ஒருங்கிணைத்து, அதை வைரஸ் பரவலின் அதிகாரபூர்வமான தகவலுடன் ஒப்பிட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை தொடர்ச்சியாக மாநில அரசுகளுக்கு வழங்கினோம். இப்போது, அதே சீரோ சர்வே தகவலைப் பயன்படுத்தி தடுப்பூசி விநியோகத்துக்காகவும் ஆலோசனைகள் தருகிறோம். நாங்கள் தகவலை மட்டும் சேகரிக்கவில்லை. தகவல்களின் வழியாகக் கொள்கை வடிவமைப்பை மேற்கொள்ள முயற்சி செய்கிறோம்."

``இதில் பீகார் எடுத்துக்காட்டு சுவாரஸ்யமானது இல்லையா... ?"

``இந்திய அரசின் சில பகுதிகள் செயல்படாமல் மிகவும் மெதுவான செயல்பாட்டைக் காட்டியதைக் குறிப்பிடும் நாம், மற்ற பகுதிகள் வேகமாகச் செயல்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதிகாரிகளுக்கு பொதுவாக இருக்கும் சில புரோட்டோகால் நடைமுறைகளையும் கூட தள்ளி வைத்துவிட்டு, விரைந்து செயல்பட்ட பகுதிகளையும் எங்களால் பார்க்க முடிந்தது. பீகாரை எடுத்துக்கொண்டால், சஞ்சல் குமார் போன்ற திறமைமிக்க அதிகாரிகள் மக்கள் தொகை அளவில் சீரோ-சர்வேக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டனர். நிலையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளை மட்டுமே நம்பியிருக்காமல், பீகார் கோவிட் பெருந்தொற்றுக்கான பல நுண்ணறிவுத் தகவல்களை எங்களுக்கு வழங்கியது. இன்னும் கொஞ்சம் முன்னதாக பீகாரில் செயல்பட்டிருக்கலாம் என்ற எண்ணமும் எனக்கு உண்டு. ஏனெனில், பல்வேறு மாநிலங்களில் இருந்து திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம், இந்தியா முழுவதுமிருந்தும் கிடைக்கும் தகவலின் ஒரு சிறு மாதிரியாக அதைப் பார்க்க முடிந்தது. பீகாரின் அந்த சீரோ சர்வே வெற்றியை இன்னும் கொஞ்சம் அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தால், Random population testing எனப்படும் சோதனைகள் இன்னும் விரைவாக நடந்திருக்கும் எனக் குறிப்பிட விரும்புகிறேன்.

Covid-19
Covid-19
ஹெர்டு இம்யூனிட்டி... இந்தியாவுக்குக் கைகொடுக்குமா?

``சீரோ சர்வேக்களால் கிடைத்த பாடங்கள் தீவிரமாக கணக்கில் கொள்ளப்பட்டனவா? ஹெர்டு இம்யூனிட்டி என்னும் கூட்டெதிர்ப்புத் திறனுக்கான தெளிவான பார்வையை அளிக்கக்கூடிய சீரோ சர்வே தகவலை, உண்மையாகவே கணக்கில் கொண்டு செயல்பாடுகள் தொடங்கப்பட்டதா? ஆனால், இதில் Antibody Decay எனப்படும் ஒரு தடைக்கல் இருக்கிறதே?"

``பல காரணங்களுக்காக இதை நான் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் Antibody Decay-ஐ பற்றி குறிப்பிடுகிறீர்கள். நோய்த் தொற்று கொண்ட மக்கள் அதிகரிக்கும்போது, அங்கு எதிர்ப்புத்திறன் இருக்கும்வரை, எதிர்ப்புத்திறன் அடையும் மக்களும் அதிகரிப்பார்கள். ஆனால் சீரோ-சர்வே தகவலின்படி, மூன்று மாதங்களில் தொற்று குறையும்போது, ஆன்ட்டிபாடி டீக்கே காரணமாக, கோவிட்-19 சமூக கூட்டெதிர்ப்பு நிலையாக இருந்தது. கொஞ்சம் குறைந்தும் இருக்கலாம். இயற்கையான கோவிட் - 19 எதிர்ப்புத்திறன் மக்களிடம் இருப்பதையே இது உணர்த்துகிறது. இதை சோதிக்க இருவகையான புள்ளியியல் ரீதியான வழிகளும் உள்ளன.

இதில் முக்கியமான மற்றொரு விஷயம் என்னவெனில், தொற்றுநோய் நிபுணர்களின் பல விதமான மாதிரி ஆய்வுகளின் வழியாக நான் கண்டுகொள்ள கூட்டெதிர்ப்புத் திறன் என்னும் முக்கிய கருத்தாக்கம்தான். நாம் இதை முன்பே நன்கு அறிந்தவர்கள்தாம். அனைவரும் கோவிட்-19-க்கான கூட்டெதிர்ப்புத் திறன் வரம்பு, தாக்குதல் விகிதம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மும்பை குடிசைப்பகுதிகளில் 55% அளவிலான சீரோ-சர்வே முடிவுகளைப் பார்த்தபோது, பலரும், நாம் கூட்டெதிர்ப்புத் திறனை அடைந்துவிட்டதாகவும், கவலைகொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தனர். ஆனால், உண்மை என்னவெனில், இன்னும் நாம் கூட்டெதிர்ப்புத் திறனின் அளவை அறிந்துகொள்ளவில்லை. கோவிட்-19-க்கு கூட்டெதிர்ப்புத் திறன் அளவு மதிப்பிடப்பட வேண்டும்.

Protect from Covid-19
Protect from Covid-19
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-Win இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?

மேலும், கூட்டெதிர்ப்புத் திறன் என்பது மக்களின் அணுகுமுறையைச் சார்ந்தது. சீரோ-சர்வே முடிவுகள் 55%-ஆக இருந்தால், நாம் கூட்டெதிர்ப்புத் திறனை நெருங்கிவிட்டோம் என்பது பொருளாகுமா? இல்லை! வரம்பு எண் என்னவாக இருக்கும் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது அதிகமானால், அதற்கான வரம்பும் அதிகமடையும். அதன் காரணமாகவே, சீரோ சர்வே முடிவுகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டோம். அதற்காக சீரோ சர்வே முடிவுகள் பயன்பாட்டுக்கு உதவாதவை என நினைக்க வேண்டாம். அப்படியில்லை. தொடக்கத்தில் குடிசைப்பகுதிகளில் 55% சீரோ சர்வே முடிவுகள், குடிசைப்பகுதிகள் இல்லாத இடங்களில் ஜூலை மாதத்தில் 15% மட்டுமே இருந்தது. பெருந்தொற்று கட்டுப்பாடு குடிசைப்பகுதிகளைவிட நகரப்பகுதிகளில் அதிகமாகச் செயல்படுத்தப்படுகிறது என்பதைச் சொல்லும் குறியீடுதான் அது. பொதுமுடக்கம் போடப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்பட்டாலும், அடர்த்தியான குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சிறிய வீடுகளில் தொற்றுப் பரவும் நிலை அதிகமாகவே இருக்கும். அதற்கான வழியை உடனே சொல்ல முடியவில்லை. ஆனால், விகிதத்தைத் தெரிந்துகொள்வதுதான் அடுத்த பெருந்தொற்றச் சமாளிக்க உதவும். சீரோ சர்வே தகவல் என்பது நம் உடலின் வெப்பநிலையை அறிந்துகொள்வதைப் போன்றதுதான். அபாய நிலையைத் தெரிந்துகொள்ளவும், அதிலிருந்து வேறு பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

``வெவ்வேறு வேகத்தில் மறுபடியும் பெருந்தொற்றுப் பரவலைப் பார்க்கவிருக்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள், பாதிக்கப்பட்டு மீண்டும் தொற்றுக்கு ஆளானவர்கள், புதிய கோவிட் வகையால் தொற்று ஏற்பட்டவர்கள் என அனைவரும் இதில் அடங்குகிறார்கள். ஒரு சீரோ-சர்வே தகவல் இவை அனைத்தையும் நமக்கு உணர்த்திவிடாது, இல்லையா?"

``மிக முக்கியமான ஒரு வாதத்தை வைத்திருக்கிறீர்கள். தேசிய அளவிலான பெருந்தொற்று என்பது பலவிதமான பகுதி ரீதியான தொற்று விகிதங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும். அதுவும் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு காலங்களில் இது நிகழும். பிறந்தநாள் விழா ஒன்றை விளக்குவதன் மூலம் இதை அறியலாம். ஒவ்வொரு வாரமும், இந்தியாவில் பல பகுதிகளில், பல வீடுகளில் பிறந்தநாள் விழாக்கள் நடக்கும். ஒட்டுமொத்த நாட்டை எடுத்துக் கொண்டால், பிறந்தநாள் விழாக்கள் பரவலாக நிலையான அளவில் நடந்துவருவதாகத் தோன்றலாம். ஆனால், என் வீட்டில் வருடம் முழுவதும் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருவதாக அர்த்தமில்லை. சில பொருத்தமான ஒப்பீடுகளை நீங்கள் பார்க்கலாம்.

corona
corona
கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா? #ExpertExplains

ஆனால், அது அனைத்து இடங்களுக்கும் பொருந்துவதில்லை. தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் சமீபமாக IDFC கூற்றுப்படி, 32% சீரோ-சர்வே தகவல் கிடைத்தது. ஆனால், அதைப் பிரித்து ஆராய்ந்து, நீலகிரி-பெரம்பலூர் என்னும் 300 கிலோமீட்டருக்கு எடுத்துக்கொண்டால், 12% முதல் 52% வரையிலான சீரோ-சர்வே முடிவுகள் கிடைத்தன. ஆகவே, இந்தியா முழுவதும் இந்த வேறுபாடு நீடிக்கிறது. மாநில அளவிலான விகிதங்களை நாம் பார்க்க வேண்டும். அதிலும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். வெவ்வேறு காலங்களில், குறிப்பிட்ட பகுதிகளுக்குள் ஏற்படும் தொற்று அனைத்துக்கும் ஒரு பொதுவான முறைமை இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதை உணர்ந்துகொண்டால் செய்ய வேண்டிய வேலைகள் புரிந்துவிடும். ஆம், இனியும் கோவிட் தொற்று அதிகரிப்பது நிகழும், அதை எதிர்பார்க்கலாம், ஆனால், அதை மிகைப்படுத்திப் புரிந்துகொள்வது கூடாது."

IndiaSpend
IndiaSpend

Source:

- Rukmini S / Indiaspend.org

(Indiaspend.org is a data-driven, public-interest journalism non-profit/FactChecker.in is fact-checking initiative, scrutinising for veracity and context statements made by individuals and organisations in public life.)

தமிழில்: நவி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு