Published:Updated:

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு... எப்படிப் போக்குவது?

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தற்போது நிலவிவரும் தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்காமல், 18 வயது முதலானவர்களுக்கு எப்படி அரசு தடுப்பூசி செலுத்தப்போகிறது... தட்டுப்பாட்டை எப்படிப் போக்குவது?

கடந்த ஆண்டு சீனாவில் பயணத்தைத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் பரவி சுமார் எட்டு மாதங்கள் உலகத்தையே லாக்டெளனுக்குள் தள்ளியது. மெல்ல மக்கள் எழுந்து உட்கார்ந்திருக்கும் வேளையில், கொரோனா இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கிவிட்டது. இதில் நமக்கிருக்கும் ஒரே நல்ல செய்தி கொரோனாவுக்கான தடுப்பூசிகள்தான். பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’, ஆக்ஸ்ஃபோர்டின் ‘கோவிஷீல்டு’ ஆகிய இரு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன (இருந்தன). ஆனால், நல்ல செய்திக்குள் ஒரு கெட்ட செய்தி என்றால் அது தடுப்பூசி தட்டுப்பாடுதான்.

பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு மருத்துவமனைகளோ, தனியார் மருத்துவமனைகளோ சென்றால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடுகிறார்கள். முக்கியமானவர்கள், வி.ஐ.பி-க்களுக்கு மட்டும்தான் ‘கோவாக்ஸின்’ போடப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. தற்போதைய சூழலில் இரண்டுக்குமே தட்டுப்பாடு நிலவுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்று மத்திய அரசு சொல்லியிருந்தது. அத்தகைய 45 வயதுக்கு மேலானவர்கள் செலுத்திக்கொள்வதற்கே தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்தநிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிலிருந்தே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இதன் சாத்தியக்கூறுகள் என்னென்ன... தட்டுப்பாட்டைப் போக்க வழி என்ன... சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``மத்திய அரசு கொரோனா விவகாரத்தில் சுயமாக முடிவெடுக்காமல், பல்வேறு தரப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவெடுப்பது சிறந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், `10 சதவிகித தடுப்பூசிகளை மட்டும் மத்திய அரசு கொள்முதல் செய்துவைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்; முன்களப் பணியாளர்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை மாநில அரசின் முடிவுகளுக்கே விட்டுவிட வேண்டும்; தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருளாதார உதவியைச் செய்திட வேண்டும். தனியார் முன்வந்தால், அவர்களுக்கான லைசென்ஸ் பெறுவதை எளிமையாக்க வேண்டும்; உள்நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறதென்றால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்’ போன்ற ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

டி.கே.ரங்கராஜன், மன்மோகன் சிங்
டி.கே.ரங்கராஜன், மன்மோகன் சிங்

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜன், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், `செங்கல்பட்டிலுள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்துக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து புனரமைத்து, கொரோனா தடுப்பூசிகளை இங்கு தயாரிக்க அனுமதியளிக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

ஒன்று இங்கு ஏற்கெனவே தடுப்பூசித் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கூடுதல் நிதி ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். இரண்டு, செயல்படாமல் இருக்கும் பொதுத்துறை பயோடெக் நிறுவனங்களைக் கணக்கெடுத்து அவற்றுக்கும் நிதி ஒதுக்கி செயல்படவைக்க வேண்டும். இதற்கிடையே தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இவற்றைச் செய்தால்தான், முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது முடிவடையும். ஏனெனில், முதல் டோஸ் போட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குச் சென்றால் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. எனவே, முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ்களை முடிக்கும் அளவுக்கு தடுப்பூசி இருப்பு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்தத் தொடங்கினால் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை உள்ளது!

மிக முக்கியமாக 18 வயது இளைஞர்கள் பெரும்பாலும் தடுப்பூசியை விரும்பிச் செலுத்திக்கொள்ள மாட்டார்கள். இளைஞர்களை வரவழைக்க அரசு ஏதாவதொரு நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும். கொரோனா முதல் அலையின்போது, வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்ததுபோல, இந்தமுறை வீடு வீடாகச் சென்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம். அரசு எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்!” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு